14 வாழ்வின் எளிய விதிகளை சரியாக புரிந்துக் கொள்வது

 

 

 

உண்மைவெளிப்படுவதை, அதுஎவ்வாறுபிறக்கின்றதுஎன்பதை

உன்னிப்பாகக்கவனியுங்கள்

அதுஉதித்ததற்கானமூலவட்டம்

நம் உள் தான் இருந்த்து என்று உணர்வீர்கள்.

…ப்ரெளனிங்

 

நீதி, நெறிகளைப்பற்றியதெளிவு

இரத்தினக் கற்கள்நிறைந்தபுதையலைவிடஉயர்ந்தது

தேனடையை விட இனிமையானது –

அது வழங்கும் இன்பத்தை வேறு எந்த இன்பத்தோடும் ஒப்பிட முடியாது.

..லைட் ஆஃப் ஏசியா

ஆசியஜோதி- எட்வின்ஆர்னல்ட்

 

வாழ்வின் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொள்ளும் பயணி , இங்கே இதுவரை சுட்டிக் கட்டப்பட்டிருந்த நிழல் பாதைகளில் நடக்கும் போது அவற்றின் அழகை வியந்து அவை பொழியும் பேரருளைப் பருகி தனது இறுதி பாரம் தன்னை விட்டு நீங்கும் மற்றொரு அருள் பொழியும் பாதையைக் காலப் போக்கில் அடைவான். அந்த அருள் பாதையில் அவனது சோர்வும், களைப்பும் நீங்கும். கனமில்லாத இதயம் சிறகடிக்கும். நீங்காத நிம்மதியான ஓய்வை அனுபவிப்பான்.மிக மிக வலிமையும் ஆறுதலும் அளிக்கக் கூடிய இந்த நிழல் பாதையின் பெயர் ”வாழ்வின் எளிய விதிகளைச் சரியாகப் புரிந்துக் கொள்வது”. அந்தப் பாதைக்குள் அடி எடுத்து வைப்பவன் எல்லாக் குறைகளையும், ஏக்கங்களையும், எல்லாச் சந்தேகங்களையும், குழப்பங்களையும் எல்லாக் கவலைகளையும் நிராசைகளையும் அகற்றி விடுவான். அறிவின் வெளிச்சத்தில், உறுதியோடும் நம்பிக்கையோடும் முழு மன நிறைவில் வாழ்வான். வாழ்வின் எளிய விதிகளை உணர்ந்துக் கொண்டு அதற்கு விரும்பி கீழ்படிபவனை , அதன் கட்டுப்பாடு விதிகளை மீறி சிக்கலும் குழப்பமும் நிறைந்த சுயநலஆசைகள் என்னும் இருண்ட பாதைக்குள் அடி எடுத்து வைக்காதவனை , எந்த ஆபத்தும் நெருங்க முடியாது. எந்த எதிரியும் வீழ்த்த முடியாது. அவனிடம் எந்தக் குழப்பங்களோ, ஏக்கங்களோ, துக்கங்களோ இல்லை. உண்மை தொடங்குமிடம் குழப்பங்கள் முடிவுறும். ஆனந்தம் மாறாமல் முழுமையாக இருக்கும் போது வேதனை ஊட்டும் ஆசைகள் அறுந்து விடும். என்றும் தோற்காத நிலையான நன்மையை உணர்ந்த பின் துக்கத்திற்கு இடமேது?

மனித வாழ்வு சரியாக வாழப்படும் போது மிக அழகுடன் எளிமையாக இருக்கும். ஆனால் அது சரியாக வாழப்படாத போது பல்வேறு சிக்கலான இச்சைகளும், ஆசைகளும், தேவைகளும் நிறைந்ததாக இருக்கும். அது உண்மையான வாழ்வு என்று கூற முடியாது. மெய்யறிவும் ஞானமும் இல்லாத மனதிலிருந்து எழும் கொதிக்கும் காய்ச்சலுடன் கூடிய வேதனையான நோய் என்று கூற வேண்டும் .ஆசைகளை அடக்குவது என்பது மெய்யறிவின் முதல்படி, அவற்றை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மெய்யறிவின் உயர்நிலை. வாழ்வு நீதி, நெறிகளுக்கு உட்பட்டு அதிலிருந்து பிரிய முடியாதது. வாழ்விற்குத் தேவைப்படும் அனைத்தும் வழங்கப்பட்டே இருக்கின்றன. இந்த இச்சைகளும், வீண் ஆசைகளும் வாழ்வின் இன்றியமையாத தேவைகள் அல்ல. மேலோட்டமான கிளர்ச்சிகளே. இழப்பிற்கும் துக்கத்திற்கும் அழைத்துச் செல்பவையே. ஊதாரி மகன், தன் தந்தையின் வீட்டில் இருந்தவரை அவனது தேவைகளுக்கும் மிஞ்சிய ஆடம்பர வசதிகளால் சூழப்பட்டு இருந்தான். அவன் ஆசைப்பட அவசியமில்லாமல் எல்லாமே அவனிடம் இருந்தன. ஆனால் ஆசை அவனுள் புகுந்த பின் அவன் ”தொலை தூரபிரதேசத்திற்கு” சென்று ”தன் தேவைகள் நிறைவேறாமல் தவிக்க ஆரம்பித்தான்”. அவன் பஞ்சத்தாலும் பசியாலும் வாடுகின்ற அளவு துன்ப நிலையை எட்டிய பின் தான் தன் தந்தை வீட்டின் அருமையை உணர்ந்து ஏக்கத்தோடு திரும்பினான். இந்த உருவகக் கதை தனி மனிதனுக்கும், மனித இனத்திற்கும் அவர்களது பயணத்தை நினைவூட்டுகின்றது. மனிதன் தொடர்ந்து மனநிறைவின்றி, திருப்தியின்றி, நிறைவேறா தேவைகளோடு, வேதனையோடு வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறுமளவு அவனது ஆசைகளின், ஏக்கங்களின் அளவு சிக்கலான நிலையைத் தொட்டுவிட்டன. அவனுக்கு இருக்கும் ஒரே தீர்வு தன் தந்தையின் இல்லத்திற்குத் திரும்புவதே. அந்தத் தந்தையின் இல்லம் எது என்றால் – வீண் ஆசைகளிலிருந்த மாறுபட்ட உண்மையான வாழ்வும் உண்மையான இருப்புமே ஆகும். ஆனால் மனிதன் ஆன்மீக பசியாலும் பஞ்சத்தாலும் அடிப்பட்டு அவதிப்படும் வரை அந்தத் திசையை நோக்கித் திரும்ப மாட்டான். தன் ஆசைகளால் விளைந்த வலியையும் வேதனையையும் அவன் அது வரை அனுபவிப்பான். பின்பு நிறைவான, நிம்மதியான, உண்மையான வாழ்வை நோக்கி ஏக்கத்தோடு திரும்புவான். தன் இல்லத்தை நோக்கிய கடினமான நெடிய பயணத்தைத் தொடங்குவான். ஆசைகளால் அலைக்கழிக்கப்படாமல் அவற்றின் கொடூர பசிக்கு இரையாகாமல் அவற்றின் கொதிக்கும் காய்ச்சலுக்குப் பணிந்து விடாமல் தன்னை விடுவிக்கும் உண்மை வாழ்வை வாழ பிரயாசையுடன் திரும்புகிறான். இது வெறும் ஆசையல்ல. பேரார்வத்தோடு, பெரு விருப்பத்தோடு முயற்சிப்பதாகும். பொருள்களுக்காக ஏங்குவது வெறும் ஆசை. நிம்மதிக்காக ஏங்கும் இதயத்தின் பசி என்பது வெறும் ஆசையல்ல. அது மன எழுச்சி நிலை.பொருள்களின் மேல் கொள்ளும் ஆசை , நிம்மதியிலிருந்து வெகு தூரத்திற்கு அழைத்துச் சென்று பேரிழப்பில் முடிவது மட்டுமல்ல ,அதன் இயல்பான நிலையே எப்போதும் இல்லாத எதையாவது ஒன்றை வேண்டும் வேண்டும் என்று துடிப்பது தான். அந்தப் பொருளாசை ஒரு முடிவுக்கு வரும் வரை நிம்மதியான ஓய்வோ, மன நிறைவோ கொள்ள முடியாது.பொருள்களின் மீது கொள்ளும் ஆசை என்னும் பசியைத் தணிக்க முடியாது. ஆனால் நிம்மதிக்கான பசியைத் தணிக்க முடியும். எல்லாச் சுயநல ஆசைகளையும் விட்டொழிக்கும் போது மனம் நிறையும் நிம்மதியைக் காண முடியும். முழுமையாகப் பெற முடியும். அப்பொழுது ஆனந்தம் ததும்பி வழிய, வேண்டியவைகள் செழிப்பாகத் தாராளமாகப் பேரருள் முழுமையாக இருக்கின்றது. இந்தப் பேரருள் நிலையில் வாழ்வு எளிமையான செவ்வொழுங்குடன் ஆற்றலின் பிறப்பிடமாய்ப் பயனுள்ளதாய் விளங்குகிறது. அப்போது நிம்மதிக்கான தேடலும் இருக்காது. நிம்மதியுடன் இருப்பது இயல்பான நிலையாகி விடும். அது மாறிக்கொண்டே இராமல், நிலையாக முழுமையாக இருக்கும். ஆசைகளில் மூழ்கித் திளைத்துள்ள மனிதர்கள் எங்கே தங்கள் ஆசைகளை அடக்கினால், செயலற்றவர்களாக ஆற்றலில்லாதவர்களாக ஆகிவிடுவோமோ, வாழ்வு உயிரோட்டமில்லாததாக ஆகிவிடுமோ என அறியாமையில் கற்பனை செய்கிறார்கள். ஆனால் ஒருவன் தன் ஆசைகளை அடக்கும் போது முழுக் கவனத்துடன் செயல் புரிய முடியும். தன் முழு ஆற்றலையும் பயன்படுத்த முடியும். அவனது வாழ்வு செழிப்புடன் ,வளமுடன் பேரருளாக விளங்கும்.சுயநல கொண்டாட்டங்களுக்கும் பொருட்களை உடைமையாக்கிக் கொள்ளவும் பேராசை கொள்பவர்களால் அந்த வாழ்வைப் புரிந்து கொள்ள முடியாது. அந்த உயர் வாழ்வை இப்படிக் கூறலாம்.

 

இரைச்சலின் எந்தப் பேரொலியும் இங்கே இல்லை.

உயர்வைநிந்தனைசெய்துஅவமதிக்கும்வார்த்தைகளுக்கோ

பிறரை எண்ணாமல் நோகச் செய்யும் புரளிகளுக்கோ இடமில்லை.

உளியின்பாடல்களும், பேனாவின்பாடல்களும்,

தூரிகையின் ஓவியங்களும் ,

தங்கள் உழைப்பை இசைந்து கொடுப்பவர்களின் தெய்வீக இசையுமே இருக்கும்.

எந்த நாளிலும் எந்தப் பொருளிலும் துக்கமோ சோகமோ மிஞ்சியிருக்காது.

காலத்திற்கு விலை மதிப்பு இட முடியாது.

அந்தக்காலத்தின்அருமைஉணர்ந்து

தான் என்ற நிலையும் முழுதும் துறக்கப்படுகிறது.

தான்என்றுயாரும்இல்லாததால்

கண்ணீரும்   வானவில் ஆகின்றது.

அந்த நிலமே பேரழகாகின்றது.

அங்கு எல்லாமே சரியாக நடக்கின்றது.

சுயநல ஆசைகளின் பிடியிலிருந்து மனிதன் மீட்டெடுக்கப்படும் போது அவன் மனம் எந்தச் சுமையுமின்றி இருக்கின்றது. அவன் மனிதக் குலத்திற்கு உழைக்கத் தயாராக இருக்கிறான். எவ்வளவு அனுபவித்தாலும் இறுதி வரை பசி அடங்காத ஆசைகளைப் பின் தொடராமல் இருப்பதால் அவனது வலிமைகள் அவன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எந்தப் பரிசுகளையும் பாராட்டுகளையும் நாடாமல் இருப்பதால் அவனது ஆற்றல்கள் எல்லாம் சிதறாமல் இருக்கின்றன.அவற்றை முழுக் கவனத்துடன் பயன்படுத்தித் தன் எல்லாக் கடமைகளையும் ஒழுங்காக நிறைவேற்றி நன்மையை முழுமை ஆக்குகிறான்.

மெய்யறிவும் பேரருளும் உடையவன் ஆசைகளின் தூண்டுதல்களால் செயல்படுவதில்லை. அறிவின் கட்டளையில் செயல்படுகிறான். ஆசைகளினால் தள்ளப்படும் மனிதன் பரிசின் உத்திரவாதம் இருந்தால் தான் செயல்படுவான். அவன் விளையாட்டு பொம்மைக்காகச் செயல்படும் குழந்தையைப் போன்றவன். ஆனால் மெய்யறிவு உள்ள மனிதன், வாழ்வை உயிரோட்டமாக ஆற்றலுடன் வாழ்பவன், எந்தக் கனமும் தன்னை ஈடுபடுத்தி எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடிப்பான். அவன் ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைந்த மனிதன்.பரிசுகளின் மேல் எந்தப் பற்றையும் அவன் வைக்கவில்லை.நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று அவன் எண்ணுகிறான். அவன் முழு மனநிறைவுடன் வாழ்கிறான். அவனது அகமகிழ்வு (இனிமையான, என்றும் மாறாத, என்றும் தோற்றுவிடாத மகிழ்ச்சியில்) வாழ்வின் நிலையான எளிய விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதில் இருக்கின்றது.

வாழ்வில் இந்த மிகப் பெரும் பேரருள் நிலை என்பது சென்று சேர வேண்டிய இடங்களில் ஒன்றாகும். அதற்காக ஒருவன் மேற்கொள்ளும் புனித பயணமானது , மனம் திருந்திய மகன் மீண்டும் தன் தந்தையின் இல்லம் திரும்ப மேற்கொண்ட கடினமான பயணத்திற்கு ஒப்பாகும். அந்தக் கடினமான பயணத்திற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும்.தன்னுள் உறையும் கீழ் நிலை ஆசைகள் என்னும் நாட்டை அவன் கடந்து செல்ல வேண்டும். தான் அகப்பட்டுள்ள வலைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அந்த வலைகளின் பின்னல்களை அறிந்து எந்த வலையிலும் மீண்டும் சிக்காமல் நாட்டைக் கடந்து வர வேண்டும்.இந்தப் பயணத்தைத் தடுக்கும் எதிரிகள் வெளியில் இல்லை, அவன் உள் இருந்தே எழுவார்கள். முதலில் இந்தப் பயணம் மிகக் கடினமாகத் தோன்றுகிறது. காரணம் ஆசைகள் அவன் கண்களை மறைக்கின்றன. அவன் இன்னும் வாழ்வின் எளிய விதிகளைப் புரிந்துக் கொள்ளவில்லை. வாழ்வின் நியதிகள் அவன் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருக்கின்றன.தன் மனதை எளிமைப் படுத்திக் கொள்ளும் போது, வாழ்வின் நேர் விதிகள் அவனது ஆன்மீக அறிவிற்கு வெளிப்படும்.அந்த விதிகளைப் புரிந்துக் கொண்டு ஏற்றுக் கொண்ட மறு கனமே அவன் பாதை மிக எளிதாகச் சிக்கலின்றி மாறிவிடுகின்றது.அவன் பாதையில் இனி எந்தக் குழப்பமும் இருளும் இல்லை. எல்லாம் அறிவின் வெளிச்சத்தில் தெளிவாகக் காணப்படுகிறது.

எத்தனைப் பேர் எண்ணினாலும் எட்டும் இரண்டும் பத்து தான் என்பது கணிதவிதி. அந்தக் கணித விதிகளைப் போலத் துல்லியமாகச் செயல்படும் சில எளிய விதிகள் இங்கே ஆராயப்படுகின்றன. உண்மையான வாழ்வை, பேரருள் நிறைந்த வாழ்வைத் தேடுபவன் அதை வேகமாக அடைய அவனுக்கு இது  உதவும்.

”அடிப்படை விதிகள் என்றும் தவறிழைத்து மன்னிப்பு கோருவதில்லை”

எல்லா உயிரும் ஒன்று தான். அந்த உயிர் பல்வேறு விதமாக வடிவமெடுக்கின்றது. எல்லா விதியும் ஒன்று தான். அது பல்வேறு வழிகளில் செயல்பட்டுப் பயன்படுகின்றது. பொருட்களுக்கு ஒரு விதி, மனதிற்கு இன்னொரு விதி என்று இல்லை.பொருள்களுக்கும் கண்களால் புலப்படுபவற்றுக்கு ஒரு விதியும், ஆன்மீக விஷயங்களுக்கும் கண்களுக்குப் புலப்படாதவற்றுக்கும் இன்னொரு விதி என்றில்லை. எங்கும் ஒரே விதி தான். பொருள் சார்ந்த உலகத்திற்கு ஒரு நியதி,மனம் சார்ந்த ஆன்மீக உலகத்திற்கு இன்னொரு நியதி அல்ல, இரண்டிற்கும் ஒரே நியதி தான். பொருள் சார்ந்த உலகம் என்று வரும்போது மனிதர்கள் அந்த உலகின் சில விதிகளை மிக்க அறிவோடு உணர்ந்து எந்தக் குழப்பமும் இன்றிப் புரிந்து கொண்டு மாறுபாடின்றி மனமார கடைப்பிடித்துச் செயல்படுகின்றனர். அவற்றைப் புறக்கணித்தால் அல்லது மீறினால் அது தங்களின் பெரும் அறியாமை என்று வருந்துவார்கள். அது தங்களுக்கும் சமூகத்திற்கும் பேராபத்தாகும் என்று கருதுவார்கள். ஆனால் மனம் சார்ந்த ஆன்மீக உலகில் இந்த விதி இதேப் போன்று எந்த அத்துமீறலையும் அனுமதிக்காது என்று நம்புவதில்லை. நம்பாததால் அதை மீறி பின்பு துன்பப்படுகிறார்கள்.

புற உலகின் விதி ஒன்று மனிதன் தனது சொந்தக் கால்களில் நின்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அவன் வாழ்வின் தேவைகளுக்கு அவனே பொறுப்பு ஏற்றுச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். எவன் உழைக்க மறுக்கிறானோ அவனால் கவுரவமாக உண்ணவும் முடியாது. மனிதர்கள் இந்த விதியை மதிக்கின்றனர். இதில் உள்ள நியாயத்தையும் நன்மையையும் புரிந்துக் கொள்கின்றனர். எனவே தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெறுவதற்கு உழைக்கிறார்கள். ஆனால் ஆன்மீக உலகில் மனிதர்கள் (பொதுவாக, பெரும்பாலானவர்கள்) இந்த விதியின் செயல்பாட்டை மறுத்துப் புறக்கணிக்கிறார்கள். தனக்கு வேண்டிய (பொருள்) உணவைத் தான் தான் சம்பாதிக்கவேண்டும். அவ்வாறு சம்பாதிக்க மறுத்தால் கிழிந்த ஆடைகளுடன் அலைந்து கெஞ்சி இழிநிலைக்குச் செல்ல வேண்டும் என்று உலக விஷயங்களில் இந்த விதியை சரியாகப் புரிந்துக் கொள்கிறார்கள். ஆனால் ஆன்மீக விஷயங்களில் அந்த(ஆன்மீக) உணவை பிச்சையாகப் பெற்றுக் கொள்ளும் உரிமை இருக்கிறது ; உழைக்காமல் உழைக்க முயற்சி செய்யாமல் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். இந்த விதி மீறலின் காரணமாகப் பெரும்பாலானவர்கள் ஆன்மீக பிச்சைக்காரர்களாக, மகிழ்ச்சி, நிம்மதி, மெய்யறிவு என்னும் ஆன்மீக செல்வம் இல்லாதவர்களாக – துக்கத்தோடும், துன்பத்தோடும் இருக்கிறார்கள்.

இவ்வுலகின் பொருட்கள் ஏதேனும் தேவை என்றால் – உணவு, உடை, மேசை, நாற்காலி அல்லது எதுவாகவோ இருக்கட்டும்- நீங்கள் கடைக்காரரிடம் அதைத் தருமாறு கையேந்துவது இல்லை. அதன் விலையைக் கேட்டு, பணத்தை வழங்கி உங்கள் உடைமையாக்கிக் கொள்கிறீர்கள். அந்தப் பொருளின் மதிப்பிற்குரிய பணத்தை வழங்குவதில் உள்ள நியாயத்தைப் புரிந்துக் கொள்கிறீர்கள். வேறு விதமாகப் பெற நீங்கள் விரும்புவது இல்லை. இதே விதிதான் ஆன்மீக பொருட்களிலும் செயல்படுகிறது. உங்களுக்கு ஆன்மீக பொருள் ஏதேனும் வேண்டும் என்றால் – மகிழ்ச்சி, நம்பிக்கை, நிம்மதி அல்லது எதுவோ அதைப் பெற்றுக் கொள்ளும் முன் அதற்கு ஈடான ஒன்றைக் கொடுக்க வேண்டும். அதற்குரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் உலகில் ஈட்டிய பொருட் செல்வத்தில் ஒரு பகுதியை கொடுத்து உலகின் பொருட்களை வாங்குவது போல் ஆன்மீக பொருளைப் பெற அதற்கு ஈடான அளவு உங்கள் மனதிலிருந்து ஒன்றை வழங்க வேண்டும்.நீங்கள் விரும்பும் அந்த ஆன்மீக செல்வத்தைப் பெற உங்களுடைய இச்சைகளையோ, வீண் தற்பெருமையையோ தன்முனைப்பையோ அல்லது வேறு வெறி உணர்வையோ இழக்க வேண்டி இருக்கும். பணத்தை இறுகப் பற்றிக்கொள்ளும் கருமி அந்தப் பணம் தன்னிடம் இருப்பதால் ஏற்படும் இன்பங்களை எண்ணி பணத்தைச் செலவிடமாட்டான். அவ்வாறு செலவிடாததால், அந்தப் பணத்தினால் கிடைக்கக் கூடிய வசதிகளையும் அனுபவிக்க மாட்டான். அவன் செல்வந்தனாக இருந்தாலும் பல தேவைகளுடன் வசதிகள் இன்றி வாழ்கிறான். வெறி உணர்வுகளைக் கைவிடாதவன், கோபம், இரக்கமின்மை, புலனின்பம், ஆணவம், தற்பெருமை, தன்முனைப்பு போன்றவற்றை அவை வழங்கும் கன நேர இன்பத்திற்காக பற்றிக் கொள்பவன் ஆன்மீக பொருட்களில் கருமியாவான். அவனால் எந்த ஆன்மீக வசதிகளையும் அனுபவிக்க முடியாது. உலக இன்பங்களை அவன் விரும்பித் தழுவி கொண்டு ,கைவிட மறுத்து ஆன்மீக இன்பங்கள் ஏதுமின்றி வாழ்கிறான்.

உலக விஷயங்களில் நேர் வழியைப் பின்பற்றும் ஞானம் மிக்கவன் கெஞ்சுவதும் இல்லை, திருடுவதும் இல்லை. அவன் உலகில் உழைத்து வேண்டியதை விலைக் கொடுத்து வாங்குகிறான். அவனது நேர்மைக்காக உலகம் அவனை மதிக்கின்றது. ஆன்மீக விஷயங்களில் நேர் வழியைப் பின்பற்றும் ஞானம் மிக்கவனும் கெஞ்சுவதும் இல்லை, திருடுவதும் இல்லை.தன் உள் உலகில் உழைக்கிறான். தன் ஆன்மீக தேவையை அதற்கான விலையைக் கொடுத்து வாங்குகிறான். உலகமும் அவனது நன்னடத்தையைப் பாராட்டுகிறது.

மற்றொருவனிடம் வேலை செய்ய ஒப்புக் கொண்டு அதற்கான கூலியையும் பேசி முடிவு செய்த பின் ஒருவன் அந்தத் தொகை உடன்பாட்டை மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உலகில் வழங்கப்படும் இன்னொரு விதி. வார இறுதி நாளில் கூலியைப் பெற்றுக் கொள்ளும் போது, பேசியதை விட அதிகம் கேட்டால், அவ்வாறு கேட்டதற்கு ஒரு நியாயமான காரணத்தைக் கூற முடியாமல் இருந்தால், அவனுக்கு அவன் கேட்ட அதிகத் தொகை கிடைக்காதது மட்டுமல்ல, அவன் அந்த வேலையில் இருந்து நீக்கவும் படுவான். ஆனால் மனிதர்கள் ஆன்மீக விஷயங்களில் இதைத் தான் செய்கிறார்கள்.அந்த ஆன்மீக கூலியைப் பெற்றுக் கொள்வதற்கு ஈடான உழைப்பை வழங்காமல், அவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படாத கூலியைக் கேட்பதை அவர்கள் முட்டாள்தனம் என்றோ சுயநலம் என்றோ கருதவில்லை. ஒவ்வொரு மனிதனும் இந்தப் பிரபஞ்ச விதியிடமிருந்து தான் ஒப்புக் கொண்டதை, தன் உழைப்பிற்கு ஈடானதை அதிகமாகவும் அல்ல,குறைவாகவும் அல்ல, துல்லியமாகப் பெற்றுக் கொள்கிறான். பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அந்தத் தலையாய விதியோடு தொடர்ந்து உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்கிறான். அது எப்படி என்றால் அவன் ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு செயலும் அதற்குரிய பலனை பெறும். அவன் செய்த எல்லாச் செயல்களுக்குமான கூலியை அவன் பெற்றுக் கொள்கிறான். இதை உணர்ந்து மெய்யறிவு பெற்றவன் எப்போதும் நிறைவாகத் திருப்தியாக நிம்மதியாக இருக்கிறான். அவனை நாடி வருபவை எதுவாக இருந்தாலும் (அது நன்மையோ அல்லது தீமையோ) அது அவன் ஈட்டியதே என்று இருக்கிறான். அந்தத் தலையாயப் பிரபஞ்ச விதி எந்த மனிதனையும் அவன் பெற தகுதியானதை அவனுக்கு வழங்காமல் ஏமாற்றுவது இல்லை. அந்த விதியிடம் முணுமுணுப்பவனிடம் அது கூறுகிறது. ”நண்பனே இதற்கு ஒப்புக்கொண்டு நீ உழைத்தாயா இல்லையா?”

ஒரு மனிதன் புற உலக வாழ்வில் செல்வந்தனாக வேண்டும் என்றால் அவன் தன்னிடம் இருக்கும் செல்வத்தை வீணடிக்காமல் இருக்க வேண்டும். முறையாக நிர்வகிக்க வேண்டும். அவ்வாறு நிர்வகித்து ஒரு போதுமான தொகையைத் தொழில் ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது மிக இறுகவும் தன் பணத்தைப் பற்றிக் கொள்ளக் கூடாது. கவனமின்றி வாரி இறைக்கவும் கூடாது. அவன் இவ்வாறு தன் உலக அறிவையும், உலக வாழ்வில் செழிப்பையும் வளர்த்துக் கொள்ளாமல், வெறும் செலவு மட்டும் செய்து கொண்டிருப்பவன் செல்வந்தனாக முடியாது. அவன் ஆரவாரமாக வீணாக்குகிறான். அது போல ஆன்மீக பொருட்களில் செல்வந்தனாக விரும்புபவன் தன் மனஆற்றல்களை வீணாக்காமல் சரியாக நிர்வகிக்க வேண்டும். தன் நாவை, தன்னை உடனடி இழிநிலைக்குத் தூண்டும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தன் ஆற்றல்களையும் நேரத்தையும் வீணாக்கும் புரளி பேச்சுகளிலும், தேவையற்ற விவாதங்களிலும், கோப உணர்வுகளிலும் ஈடுபட்டு வீணாக்கக் கூடாது. இவ்வாறு அவன் சேர்த்துக் கொள்ளும் ஆற்றலே அவனது ஆன்மீக முதலீடாகும். இந்த ஆன்மீக முதலீட்டை பிறரின் நன்மைக்காக அவன் உலகில் பயன்படுத்த வேண்டும். அவன் அதை அதிகமாகப் பயன்படுத்த இன்னும் அதிகமாகப் பெறுவான். அவன் அருள்செல்வத்தையும் பேரருள் குறித்த ஞானத்தையும் பெறுவான். தன்னை இழிநிலைக்கு அழைத்துச் செல்லும் தூண்டுதல்களையும் ஆசைகளையும் கண்மூடித்தனமாகப் பின் தொடர்பவன் தன் மனதை ஆளும் ஆற்றல் இல்லாத ஆன்மீக ஊதாரியாவான். அவனால் அருட் செல்வங்களைப் பெற முடியாது.

ஒருவன் மலையின் சிகரத்தை அடைய வேண்டும் என்றால் தன்னை வலிமையாகத் தயார்படுத்திக் கொண்டு அந்தப் பயணத்தைத் தொடங்க வேண்டும். பாதையைத் தேர்ந்தெடுத்துக் கவனமாகச் செல்ல வேண்டும். இன்னும் கடந்து செல்ல வேண்டிய பாதையில் நிகழக் கூடிய கடின நிலைகளையோ அல்லது அதற்காக மேற்கொள்ள வேண்டிய உழைப்பையோ அல்லது தன் உடல் சோர்வையோ நினைத்து அஞ்சி பாதியில் அவன் திரும்ப நினைத்தால் அவனால் அவன் குறிக்கோளை எட்ட முடியாது. புற உலகைச் சார்ந்த இந்த விதி ஆன்மீக உலகிற்கும் பொருந்தும். எவன் அறநெறிகளைக் கடைப்பிடிப்பதில், தன் குணம், தன் மன இயல்புகள் சிகரத்தை அடையவேண்டும் என்று விழைகிறானோ அவன் தன்முயற்சியைத் தொடங்கவேண்டும். பாதையைத் தேர்ந்தெடுத்து முழு மனதுடன் தொடர வேண்டும் . பாதியில் கைவிட்டுப் பின் திரும்பாமல் ,ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளை முறியடித்து, தன் இச்சைகளின் தூண்டுதல்களை, உள்ளத்தின் வலிகளை ,சோதனைகளைக் குறிப்பிட்ட காலங்களில் தாங்கி, அவற்றிலிருந்து மீண்டு இறுதியில் அவன் தன் குணத்தை உயர் சிகரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.அவ்வாறு சென்று அடையும் போது தீய வெறி உணர்வுகளும், இச்சைகளின் தூண்டுதல்களும், துக்கங்களும் அவன் காலடிக்குக் கீழ் விழுந்துக் கிடக்க அருள் வாழ்வின் எல்லையில்லாத பேரழகுகள் அவன் பார்வைக்கு அமைதியாக விரிந்திருப்பதைக் அவன் காண முடியும்.

ஒரு மனிதன் தொலை தூரத்தில் இருக்கும் ஒரு ஊரை அடைய வேண்டும் என்றால் அதற்கு அவன் பயணம் செய்யவேண்டும்.மந்திரத்தைப் போல் திடீரென்று அந்த ஊருக்குச் சென்று விட எந்த வழியும் இல்லை.அதற்கான முயற்சிகளில் அவன் ஈடுபட வேண்டும். அவன் கால்களால் நடந்து சென்றால் பெரு முயற்சியும், நேரமும் செலவாகும்.வேறு வகையான போக்குவரத்துகளில் செல்லலாம். அதற்காகக் கட்டணத்தை அவன் செலுத்த வேண்டும்.ஒரு ஊரை அடைவதற்கு முயற்சியின் வாயிலாகவோ அல்லது கட்டணத்தின் வாயிலாகவோ ஒரு விலையைக் கொடுத்தே ஆக வேண்டும். இதைத் தவிர்க்க முடியாது. இந்தப் புற உலக விதி ஆன்மீக உலகிற்கும் செயல்படும். ஆன்மீக ஊர்களான மனத்தூய்மை, இரக்கம், ஞானம், நிம்மதி போன்ற ஊர்களை அடைய நினைக்கின்றவன், அந்த ஆன்மீக சேரிடத்தை அடைய அவன் பயணத்திற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். அந்த அழகான ஊர்களுக்கு அவனைத் திடீரென்று கொண்டு சேர்க்க முடியாது.அங்குச் செல்ல வேண்டிய நேர் வழியை, கண்டறிந்து முயற்சியில் ஈடுபட்டு பயண இறுதியில் அவன் இலக்கை அடைவான்.

கண்களுக்குப் புலப்படாத உள்ளத்தின் உலகில் செயல்படும் எத்தனையோ விதிகளில் சில இங்கே உதாரணமாக விளக்கப்பட்டன. ஆனால் இந்த எல்லா விதிகளும் அந்தப் பெருவிதியின் வெவ்வேறு வெளிப்பாடுகளே. இந்த விதிகளைப் புரிந்து, அதற்குப் பணிந்து அதன் கட்டளைகளைச் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் மனிதனாகத் தலை நிமிர்ந்து ஆன்மீக பக்குவத்தைப் பேரருளை பெற முடியும்.புற உலகில் செயல்படும் விதிகள் எந்த மாறுபாடு துளியுமின்றி அதே வித துல்லியத்தோடு அக உலகிலும் செயல்படுகின்றன. உள்ளத்திலிருக்கும் உண்மையின் நிழல் பிம்பங்களே புற உலகில் வெளிப்படும் வடிவங்களும் வகைகளும். அது போல ஆன்மீக விதியின் நிழல் பிம்பமே புற உலக விதிகள். மனித வாழ்வு குறித்த உலக விதிகளின் எளிய செயல்பாடுகளை மக்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொண்டு அது தெளிவாகச் சிக்கலின்றி இருப்பதால் அதைக் கடைப்பிடிக்கின்றனர். அக உலகிலும் துல்லியமாக இந்த விதிகள் செயல்படும் என்று மனிதன் உணர்ந்துக் கடைப்பிடிக்கும் போது மனிதன் அவன் உறுதியாக நிற்பதற்குரிய அறிவினால் கட்டப்பட்டுள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்து விட்டான். அவனது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வரப்போகின்றது. இனி அவனுக்கு எந்தக் குழப்பங்களும் நேரப் போவது இல்லை.

வாழ்வு என்பது எதையும் சாராத நடு நிலைமையும் எதற்கும் அடிபணியாத, வளைந்துக் கொடுக்காத நியாமும் நேர்மையும் கொண்டது. அது மிக எளிதாகவே செயல்படும். ஆனால் அதை வெல்ல முடியாது. நியாயம், நீதி என்றும் ஆளும்.அந்த நியாயம், நீதியின் இதயம் அன்பு. விருப்பு, வெறுப்பு என்னும் பாகுபாடுகள், காழ்ப்புணர்வு ஆகியவை நியாயம், நீதி, அன்பு ஆகியவற்றின் பின் பக்கமாகும். பிரபஞ்சத்திற்கு எந்தப் பாகுபாடும் விருப்பும் வெறுப்பும் கிடையாது. அது தலையாய நீதி வழங்கக் கூடியது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கு உரியதை அவன் ஈட்டியதைக் கொடுத்து விடும். எல்லாம் அந்த பெருநீதி, நியாயத்திற்குக் கட்டுப்பட்டுத் தான் நடக்கின்றன. எனவே மனிதன் சரியான வழியைக் கண்டு, அதில் சென்று கலங்காமல், மகிழ்ச்சி அடைய அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த விதியின் மூலமாகச் செயல்படும் – தோல்வியே அறியாத நன்மையை உலகம் இயேசுவின் தந்தை என்றும், கடவுள் என்றும் கூறுகிறது. எந்தத் தீங்கும் ஒரு நல் மனிதனுக்கு அவன் வாழ்விலும் சாவிலும் ஏற்படாது. இயேசு தனது விதியில் புதைந்துக் கிடந்த நன்மையை உணர்ந்தார். தன்னைச் சிலுவையில் அறைவதற்குக் காரணமான எல்லோரையும் பழி கூறாமல் விடுவித்தார். ”எந்த மனிதனும் என் உயிரைப் பறிக்கவில்லை. நானே அதை அர்ப்பணிக்கிறேன்” என்றார். அவர் தன் முடிவைத் தானே வரவழைத்துக் கொண்டார்.

எவன் தன் வாழ்வை எளிமைப்படுத்திக் கொள்கிறானோ, மனதை தூய்மைப்படுத்திக் கொள்கிறானோ ,அவன் தன் இருப்பிற்கான அழகான எளிய காரணத்தை உணர்வான். எல்லாவற்றையும் செயல்படுத்தும் விதியை உணர்வான். தன் எண்ணங்களும், செயல்களும் தன் மீதும் உலகத்தின் மீதும் ஏற்படுத்தும் விளைவுகளை அறிவான். மனதில் விழுந்த எண்ண விதை முளைத்தெழுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்களை அறிவான். பேரருளின் துணையோடு உதித்து, மலர்ந்து,முழுமையடையும் எண்ணங்களையும் செயல்களையும் மட்டுமே அவன் எண்ணி செயல்படுவான். அறியாமல் செய்த செயல்களுக்கான விளைவை அவன் அடிபணிந்து ஏற்றுக்கொள்வான். பழியை யார் மீதும் சுமத்தி முறையிடாமல், அச்சப்படாமல் , கேள்வி எழுப்பாமல் அந்த நன்மையான நியதியின் செயல்பாட்டில் எந்தத் தவறும் இருக்க முடியாது என்ற பேரருளான அறிவோடு கட்டுப்பட்டு நிம்மதியாக இருப்பான்.

நம் வாழ்வு என்னும் மெல்லிய துணியை நாமே நெய்கிறோம்.

விரும்பிய வண்ணங்களைத் தெளிக்கிறோம்.

விதி என்னும் நிலத்தில் விதைத்ததையே அறுவடை செய்கிறோம்.

விதைத்ததையேஅறுவடைசெய்கிறோம்என்றால்

அதற்கான பொறுப்புகளும், செயல்பாடுகளும் நம்முடையதே என்றால்,

வேதனை அளிக்கும் விதியின் நோக்கம் அன்பு மட்டுமே.

காயங்கள் புண் ஆறுவதற்கே ஏற்படுகின்றன.

Share This Book

Feedback/Errata

Comments are closed.