1 முன்னுரை

 

பா்மாவின் நீண்ட நெடுஞ்சாலைகளில் அங்கங்கே தகுந்த தூர இடைவெளிகளில் ,புழுதிக் காற்றிலிருந்து விலகி சற்று உட்புறமாக உள்ளப் பாதைகளில் , அடர்ந்த மரக் கூட்டங்களின் குளுமையான நிழலின் கீழ் ஓய்வு இல்லம் எனப்படும் மரத்தால் கட்டப்பட்ட ஒரு சிறிய வீடு ஒன்று இருக்கும். அந்த வழியே பயணம் செய்பவன் தன் களைப்புத் தீர அங்கே ஓய்வு எடுத்துக்கொண்டு பசியையும் , தாகத்தையும் தீர்த்துக் கொள்ள அங்கிருக்கும் உணவையும் , நீரையும் அருந்தலாம். அந்த உணவும் நீரும் அவ்வழி வர இருக்கும் பயணிகளுக்காக அந்தப் பகுதி மக்கள் ஒரு மதக் கடமையைப் போல அன்புடன் வைத்துச் சென்றது ஆகும்.

வாழ்வு என்னும் நெடுஞ்சாலையிலும் இது போன்று நிழல் பாதைகள் அங்கங்கே பரவி கிடக்கின்றன . வெறி உணர்வு என்னும் வெப்பம் அங்கே நுழையாது.ஏமாற்றம் என்னும் புழுதிக் காற்று அங்கே வீசாது. எளிய ஞானம் என்னும் அடர்ந்த மரக்கூட்டங்களின் குளிர் நிழல் புத்துணர்வு ஊட்டும். நிபந்தனைகளை விதிக்காத நிம்மதித் தரும் இத்தகைய எளிய ஓய்வு இல்லங்கள் ஏறக்குறையக் கவனிக்கப்படாமலேயே இருக்கின்றன. கவனிக்க மறந்த இந்தப் பாதைகளின் உள் சென்றால் மட்டுமே வாழ்க்கைப் பயணத்தால் களைத்தவன் தன் பயணத்தைத் தொடர ஆறுதலையும் , நம்பிக்கையையும் , வலிமையையும் பெறமுடியும்.

இந்தப் பாதைகளைப் புறக்கணிப்பது துன்பத்தை வரவழைத்துக் கொள்வதாகும். வாழ்வு என்னும் மிகப் பெரும் நெடுஞ்சாலையில் மனித இனம் தன் கண்ணிற்குத் தெரியும் ஏதோ ஒரு மாய இலக்கை நோக்கிப் பொறுமையின்றி விரைவாக மிக எதிர்பார்ப்போடு பயணம் செய்கின்றது. அது போகும் வழியில் ‘உண்மையான எண்ணங்கள்’ என்னும் ஓய்வு இல்லங்களை, குறுகிய நிழல் பாதைகளாகக் காணப்படும் “பேரருள் வழங்கும் நற்செயல்களை” முக்கியமற்றதாக எண்ணிப் பார்வையை செலுத்தாமல் புறக்கணித்துச் செல்கிறது. இதன் விளைவாக மனிதர்கள்  மயங்கிக் கீழே விழுந்தவாறே இருக்கிறார்கள்.எண்ணில் அடங்கா அளவு மக்கள் இதயத்தில் ஏற்படுகின்ற பசியாலும், தாகத்தாலும், களைப்பாலும் மடிகிறார்கள்.

ஆனால் எவன் வெறி உணர்வுகளின் அழுத்தத்திலிருந்து விலகிக் கொண்டு இங்கே சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் அருள் பொழியும் நிழல் பாதைகளைக் கவனித்து உள் செல்கிறானோ, அவனது புழுதிப் படிந்தக் கால்கள் ஒப்பிடமுடியாத பேரருள் மலர்களின் மெல்லிய இதழ்களை மிதிக்கும்.அவற்றின் பேரழகில் அவன் கண்கள் குளிர்ச்சியுறும். அதிலிருந்து தெளிக்கும் பண்ணீரின் நறுமணத்தால் அவன் மனம் புத்துணர்வு அடையும். நெடுஞ்சாலையின் புழுதியில் மயங்கி விழுகாமல், பாதி வழியில் மடிந்து போகாமல் அவன் கவனித்த இந்த நிழல்ப்பாதைகளுக்குள் சென்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டு மனதை வாட்டும் துன்பத்திலிருந்தும் வாழ்வைக் கசக்கும் வேதனையிலிருந்தும் தப்பி மகிழ்ச்சியானவனாக, வலிமையானவனாகத் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக முடிப்பான்.

 

மனம் தன் அறியாமையால், பாரமான சுமைகளைத் தானே உருவாக்கித் தன் மீது ஏற்றிக்கொள்கிறது.தனக்குத் தானே தண்டனைகளை வழங்கிக் கொள்கிறது. யாரும் பாரங்களைச் சுமந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. துக்கம் யார் மீதும் கண்மூடித்தனமாகச் சாற்றப்படவில்லை. இவை எல்லாம் மனதின் உருவாக்கமே. நல்அறிவின் வெளிச்சமே மனப் பிரதேசத்தை ஆள வேண்டிய அரசன் ஆவான். உணர்ச்சி வேகம் அவனது அரசக் கட்டிலைக் கவிழ்க்கும்போது அங்கே குழப்பம் தலைவிரித்து ஆடுகிறது. சுகபோகக் கொண்டாட்டங்களுக்கான தவிப்பு முன்புறமிருந்தால் துக்கமும் ஏமாற்றமும் பின்புறமிருக்கும்.

 

இந்தப் புத்தகம் சரியான மன நிலைகளை, ஞானத்தோடும், மெய்யறிவோடும் செயல்பட வேண்டிய வழிமுறைகளை, எடுத்துரைக்கின்றது. இவற்றை இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம். விளைவுகள் பேரருளாகக் கனிந்து வரும். ஒவ்வொருவர் வாழ்விலும் தினம் தினம் நிகழும் பொதுவான சூழ்நிலைகளில் இங்கு விளக்கப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகள் உறுதியாகப் பயன்படும். அவற்றைத் தவறாகவோ சரியாகவோ பயன்படுத்துவதிலேயே நம் துக்கமும் மகிழ்ச்சியும் உள்ளடங்கி இருக்கின்றன. சூழ்நிலைகள் மனிதனின் மன உறுதிக்குக் கட்டுப்படும் என்று இந்த அடிப்படைகோட்பாடுகளைத் தங்கள் வாழ்வில் செயல்படுத்துபவர்கள் உணர்ந்துக் கொள்வார்கள். மண்பாண்டம் செய்யும் குயவன் வெறும் களிமண்ணைக் கொண்டு அழகிய வடிவங்களைச் செய்வது போலச் சரியான மனநிலையில் வாழ்பவன் (ஆன்மீகக் குயவன்) கடினமான சூழ்நிலைகளில் இருந்து மதிப்பு மிகுந்த பேரழகுடைய பேரருள் நிறைந்த விளைவுகளைக் கொண்டு வருகிறான்.

 

எல்லா நன்மையும் நம்முள் எப்போதும் இருக்கின்றன.

மனிதர்களுக்கு அதை எடுத்துக்கொள்ளும் மெய்யறிவு தான் வரவேண்டும்.

மெய்யறிவில் தான் ஏழைகளாக இருக்கிறார்கள்.

அந்த மெய்யறிவை பெறும்போது அவர்கள் நெடுநாள் விரும்பிய நன்மையைக் காண்பார்கள்.

 

ஜேம்ஸ் ஆலன் – 1904

ப்ராட் பார்க் அவென்யு, இல்ஃபராகோம்ப்,

இங்கிலாந்து.

Share This Book

Feedback/Errata

Comments are closed.