15 மகிழ்ச்சியான முடிவுகள்

 

 

நீதியை நிலைநாட்ட இயற்கை நியதி எப்படியும் சென்று விடும்.

அதை எவரும் தடுத்துத் திசை திருப்ப முடியாது.

அந்த இயற்கை நியதியின் இதயம் அன்பு.

அது அளிக்கும் முடிவு நிம்மதி.

அதைக் கடைப்பிடிப்பது இனிமையான அனுபவம்.

அதன் கட்டளையைச் செயல்படுத்துங்கள்.

..லைட்ஆஃப்ஏசியா

(ஆசிய ஜோதி – எட்வின் ஆா்னல்ட்)

 

உங்கள்பணிமுடியும்போதுமகிழ்ச்சிகொள்ளுங்கள்

தவறுகள் தம் வலிமையிழந்து சரியானவற்றிடம் சரனடைகின்றன.

வாரத்தின் ஓய்வான வழிப்பாட்டு நாளின் ஒளி

பெருவெளியின்ஒளியோடுகலந்துவிடும்

..விட்டியர்

வாழ்வு பல மகிழ்ச்சியான முடிவுகளைக் கொண்டுள்ளது. காரணம் அது பல மேன்மையான, தூய்மையான, அழகானவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் பல வகையான பாவங்களும், அறியாமையும் இருக்கின்றன.கண்ணீரும் வலிகளும் வேதனைகளும் இருக்கின்றன.ஆனால் அதை சீரமைக்க அறநெறிகளும் மெய்யறிவும் இருக்கின்றது. புன்னகைகளும், ஆறுதல்களும், பேரின்பங்களும், பேரானந்தங்களும் கூட இருக்கின்றன. எந்தக் களங்கமற்ற எண்ணமும், எந்தத் தன்னலம் கருதாத செயலும் முழு வெற்றியைப் பெற்றே தீரும் . அவ்வாறு பெறும் முழு வெற்றி மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும்.

ஒரு மன மகிழ்ச்சியான வீடு இனிமையான முடிவாகும். ஒரு வெற்றிகரமான வாழ்வு மகிழ்ச்சியான முடிவாகும்.நம்பிக்கையுடன் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பணி ஒரு மகிழ்ச்சியான முடிவாகும். அன்பான நன்பர்களால் சூழப்பட்டு இருப்பது ஒரு மகிழ்ச்சியான முடிவாகும். ஒரு சண்டை சச்சரவைக் கைவிடுவது, மனதில் குடிக்கொண்டிருந்த வெறுப்பைத் துடைத்து எறிவது, கொடிய வார்த்தைகளுக்கு வருந்துவதும் மன்னிக்கப்படுவதும், பிரிந்த நண்பர்கள் மீண்டும் இணைவது போன்றவை எல்லாம் மகிழ்ச்சியான முடிவுகளாகும். நெடுநாள் கனவு நீண்ட விடா முயற்சியால் நனவாவது, கண்ணீர் புன்னகையாக மாறுவது, பாவம் என்னும் துன்ப இரவு விடிந்து இன்பம் ஒளி சிந்தும் புதிய நாளில் விழித்து எழுவது., மிக்கத் தேடுலுக்குப் பின் கண்டு உணர்ந்த உயர் நெறிகளை வாழ்வில் பின் பற்றுவது – இவை எல்லாம் பேரருளின் கொடையாகும்.

இங்கே இதுவரை சுட்டிக்காட்டப்பட்டுள்ள நல்வழிப் பாதைகளில் பயணம் செய்பவன் மற்றுமொரு நல்வழிப் பாதையான மகிழ்ச்சியான முடிவு என்னும் நல்வழிப் பாதையை அவன் தேடாமலே வந்து அடைவான். அவன் முழு வாழ்விலும் மகிழ்ச்சியான முடிவுகள் நிறைந்து காணப்படும். எவன் சரியானவற்றை ஆரம்பித்துத் தொடர்கிறானோ அவன் வெற்றிகளை ஆசைப்படத் தேவையில்லை. அவன் கைகளுக்கு அருகிலேயே அவை தவழ்கின்றன. அவை ஒன்றன் பின் ஒன்றாக விளைவுகளாகத் தொடர்கின்றன. அது வாழ்வின் நிச்சய உண்மை.

புற உலகிற்கு மட்டுமே பொருந்தக்கூடிய பல மகிழ்ச்சியான முடிவுகள் இருக்கின்றன. அவை நிலை இல்லாமல் மறைந்து விடக் கூடியவை.உள் மன உலகிற்கு அல்லது ஆன்மீக உலகிற்குப் பொருந்த கூடிய மகிழ்ச்சியான முடிவுகள் இருக்கின்றன. இவை நிலையானவை, என்றும் மறையாது.சுற்றம் சூழ இருப்பதும், வசதிகளும் கொண்டாட்டங்களும் இனிமையானவையே,ஆனால் அவை விரைவில் மாறிவிடும். அழிந்துவிடும். இவற்றை விட இன்னும் இனிமையானது மனமாசற்று இருப்பதும், ஞானமும், மெய்யறிவும். இவை என்றும் மாறாது, அழியாது.மனிதன் இந்த உலகில் எங்குச் சென்றாலும் அவன் தன் உலக உடைமைகளை எடுத்துச் செல்லலாம். ஆனால் விரைவிலேயே அவன் அவற்றை இழக்கவேண்டி வரும்.அவன் அவற்றை மட்டுமே நம்பி தன் எல்லா மகிழ்ச்சியையும், அவற்றில் இருந்தே பெறுகிறான் என்றால் அவன் ஆன்மீக உள்மன உலகில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு அவன் தவிப்பான். ஆனால் ஆன்மீக உலகின் உடைமைகளைப் பெற்றவனது மகிழ்ச்சியின் ஊற்றுக்கண் என்றும் வற்றாது. அவன் அவற்றை இழக்க வேண்டி வராது. அவன் பிரபஞ்சத்தில் எங்குச் சென்றாலும் அவற்றை அவன் கூடவே கொண்டு செல்வான். அவனது ஆன்மீக முடிவு முழு மகிழ்ச்சியானதாக இருக்கும்.

வாழ்வில் தான் என்ற அகம்பாவ எண்ணத்தை ஒழித்தவன் என்றும் நிலையான மகிழ்ச்சியில் இருக்கிறான். அவன் இந்த வாழ்விலேயே சுவர்க்கத்திற்குள் நுழைந்து விட்டான். புத்தர் விளக்கிய நிர்வான நிலையை அடைந்துவிட்டான் .விண்ணுலகை , புதிய யெருசலத்தை, ஜூபிடரின் ஒலிம்பஸ் – ஐ இப்போது இந்த வாழ்விலேயே பார்த்து விட்டான். இவை எல்லாம் கால சக்கரதிதில் மாறிக் கொண்டிருக்கும் பெயர்கள் தான். வெறும் வாய் வார்த்தைகள் தான் என்று அறிகிறான்.எல்லா உயிர்களும் ஒன்று தான், வாழ்வு அனைத்தும் ஒன்று தான் என்ற பேருண்மையை உணர்கிறான். எல்லையற்ற தன்மையைத் தழுவி ஓய்வில் இருக்கிறான்.

 

தன் உள்ளத்திலிருந்து இச்சைகளையும், காழ்ப்புணர்வுகளையும், இருண்ட ஆசைகளையும் நீக்கியவனின் பேரானந்தம் பேராழமானது. அவன் ஓய்வு பேரின்பமானது. கசப்புணர்வின், சுயநலத்தின் எந்தச் சுவடும் இல்லாமல் அவற்றின் நிழல் கூடநெருங்க முடியாமல் வாழ்பவன் எல்லையற்ற இரக்கத்தோடும் அன்போடும் உலகை நோக்கி தன் இதயத்தில் சுவாசிக்கும் பேரருள் எண்ணம் :

”நிம்மதி எல்லா உயிர்களையும் தழுவட்டும்”, எதையும் தவிர்க்காமல், எந்த வேறுபாடும் கொள்ளாமல் இந்தப் பேரருள் எண்ணத்தைச் செலுத்துபவன் அடைந்துள்ள மகிழ்ச்சியான முடிவை என்றும் பறிக்க முடியாது. அது தான் வாழ்வின் முழுமை, நிம்மதியின் முழுமை, பேரருளின் பொழியும் தன்மை.

Share This Book

Feedback/Errata

Comments are closed.