4 பிரச்சினைகளையும், குழப்பங்களையும் சந்தித்து மீள்வது

 

 

மனிதனாக வாழ விரும்புபவன் தன்னைத் தானே ஆள வேண்டும் .

அவனே அவன் தலைவனாக இருக்க வேண்டும் .

அச்சங்களையும்நம்பிக்கைகளையும்கடந்து

தனியாக இருக்கும் துணிவும் உறுதியும் வேண்டும்.

–ஷெல்லி

நீங்கள் குறிப் பார்த்து எய்தது இலக்கைத் எட்டத் தவறியதா?

இலக்கு இன்னும் அங்கே தான் மின்னிக்கொண்டிருக்கிறது.

போட்டியின் இடையில் மயங்கி விழுந்து விட்டீர்களா?

அடுத்து வரப்போகின்ற போட்டிக்குத் தயாராகுங்கள்.

–எல்லாவீலர்வில்காக்ஸ்

 

பிரச்சினைகளில் , குழப்பங்களில் பல மடங்கு நன்மைகள் கலந்து இருக்கின்றன, அவற்றைப் பிரித்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினால் அது சந்தேகத்துக்கு இடமின்றி முட்டாள்தனமாகப் பலருக்கும் தோன்றும். ஆனால் உண்மை எப்போதும் முரண்பாடாகவே இருக்கும். சாபமாக முட்டாளுக்குத் தோன்றும் ஒன்று , வரமாகப் புத்திசாலிக்கு காட்சியளிக்கும். அறியாமையிலும் பலவீணத்திலுமே துன்பங்கள் உருவாகி வளர்கின்றன. பிரச்சினைகளும் , குழப்பங்களும் பின் வரக்கூடிய துன்பத்தை தடுப்பதற்காக அறிவையும் வலிமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முன் எச்சரிக்கை செய்யவே வருகின்றன.

 

வாழ்வைச் சரியாக வாழும் போது வாழ்வைப் பற்றிய ஒரு புரிந்துணர்வு ஏற்படும், பின்பு பிரச்சினைகளின் அளவும் எண்ணிக்கையும் குறையும்.குழப்பங்கள் மெல்ல மறையும். உண்மையில் அந்தப் பிரச்சினைகளும் , குழப்பங்களும் நிலையில்லாமல் விலகி ஓடும் காலை நேரப் பனி போன்றவை தான் .

உங்களது பிரச்சினை உங்களுக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலிருந்து தான் உருவாகியிருக்கின்றது என்றாலும் அந்தச் சூழ்நிலை உங்கள் பிரச்சினைக்குக் காரணமல்ல. அந்த சூழ்நிலையை எந்த மனகண்ணோட்டத்தில் காண்கிறீர்கள் என்ன மனநிலையில் எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பதிலிருந்து தான் உங்களது பிரச்சினை உருவாகின்றது. குழந்தைக்குக் கடினமாகத் தெரியும் ஒன்று பக்குவப்பட்ட மனதையுடைய மனிதனுக்குக் கடினமாகத் தெரியாது. முட்டாளுக்குக் குழப்பத்தை அளிக்கும் ஒன்று, புத்திசாலிக்கு எந்த வித குழப்பத்தையும் அளிக்காது.

சில எளிய பாடங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கும் போது எந்தப் பயிற்சியும் பெற்றிராத குழந்தையின் மனம் மலையைக் கடப்பது போலப் பெரும்பாடுபடுகிறது. அந்தப் பாடத்தைக் கற்று கடந்து செல்வதற்காக துடிதுடிப்புடன் கூடிய கடின உழைப்பை மணிக்கணக்கில், நாள் கணக்கில் ,ஏன் மாதக்கணக்கில் கூட அந்தக் கடின உழைப்பை அது வழங்க வேண்டி இருக்கின்றது. தாண்டிச் செல்ல முடியாத உயரமாகத் தோற்றமளிக்கும் அந்தத் தடைக்கல்லை படிக்கல்லாக்கும் முயற்சியில் அந்தக் குழந்தை எவ்வளவு குழப்பத்துக்கு உள்ளாகின்றது ,எவ்வளவு கண்ணீர் துளிகளைச் சிந்துகின்றது, என்றாலும் அந்தக் குழந்தையின் அறியாமை தானே அதற்குக் காரணம். அதன் நீண்ட கால நல்வாழ்விற்குத் தேவையான பயன்படும் அறிவையும், வலிமையையும் வளர்த்துக் கொள்ள அந்த முயற்சியில் ஈடுபட்டுப் பாடத்தை அது கற்றே ஆக வேண்டும்.

வாழ்வின் துன்பங்களும்/பிரச்சனைகளும் (வளர்ந்த குழந்தைகளாகிய) மனிதர்களுக்கு அதைப் போன்றது தான். அவர்கள் அதைச் சந்தித்து அதை புரிந்துக் கொண்டு கடந்து வருவது அவர்களது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியமானதாகும். தீர்க்கப்படும் ஒவ்வொரு பிரச்சினையும் அனுபவத்தை வழங்குகிறது. உள்ளுணர்வை வளர்க்கின்றது. ஞானத்தைத் தருகின்றது. பயன் அளிக்கப்போகிற பாடத்தைக் கற்றுக் கொள்ள உதவி செய்துள்ளது. இவை எல்லாவற்றோடும் கூடவே செய்து முடிக்கப்பட வேண்டிய வேலை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட மகிழ்ச்சியையும் மனநிறைவையும் வழங்குகிறது.

 

பிரச்சினைகள் / இடர்பாடுகள் என்பதன் உண்மையான சாரம்சம் என்ன ? முழுமையாகக் கைப்பற்ற முடியாமல் புரிந்துக்கொள்ள முடியாமல் இருக்கும் சூழ்நிலை அன்றி அது வேறு என்ன? எனவே அது இது வரை செயல்பட்டதை விட இன்னும் அதிகப் புத்திக்கூர்மையோடு இன்னும் ஆழமான உள்ளுணர்வோடு செயல்பட்டு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தவே அது வருகிறது. உள்ளே ஒளிந்துக் கொண்டு இருந்த திறமையை வேகமாகத் தட்டி எழுப்புகின்றது, பயன்படுத்தப்படாமல் இருந்த ஆற்றலை வெளிக் கொண்டு வரத் அது பாடுபடுகின்றது. மறைந்தோ மறக்கப்பட்டோ இருந்த மற்ற வழிகளைச் சுட்டி காண்பிக்கின்றது. எனவே இடர்பாடு என்பது நன்மை செய்யும் தேவதை, உதவி செய்யும் நண்பன், வழிக்கட்டும் ஆசான், ஆனால் அது மாறுவேடம் தரித்து வந்துள்ளது. பொறுமையாக அது கூற வருவதைக் கேட்டுச் சரியாகப் புரிந்துக் கொண்டால் பேரறிவிற்கும் பேர் அருளுக்கும் ஆன பாதைக்கு அது அழைத்துச் சென்று விடும்.

பிரச்சினைகள் இல்லாமல் எந்த முன்னேற்றமோ மாற்றமோ மலர்ச்சியோ இல்லை . பிரச்சினைகள் இல்லை என்றால் உலகெங்கும் தேக்க நிலை ஏற்படும், மனித இனமும் சரிவை நோக்கிச் செல்லும்.

பிரச்சினைகள் தன்னை நோக்கி வரும் போது மனிதன் மகிழ்ச்சி அடையட்டும். காரணம், தன் திறமைகளைக் கட்டிப் போடும் பழைய பாதையின் முடிவு அல்லது தன் முட்டாள் தனங்களின் முடிவு நெருங்கிவிட்டது என்பதையே பிரச்சினைகளின் வருகை உணர்த்துகின்றது. அவன் தன் முழு ஆற்றலையும், அறிவையும் பயன்படுத்தி இந்த இக்கட்டிலிருந்து விடுபட்டு வேறு சிறந்த வழியைக் கண்டு அடைய வேண்டும் என்பதற்காகவே பிரச்சினை அவனை நாடி வந்துள்ளது. அவனுள் உறையும் திறமைகள் இன்னும் பரந்த எல்லையில் முழுமையாகச் செயல்படும் வாய்ப்பிற்காக காத்திருக்கின்றன என்பதை உணர்த்தவே பிரச்சினைகள் அவனை தேடி வந்துள்ளன.

 

எந்தச் சூழ்நிலையும் பிரச்சினையைக் கொடுத்தே ஆகவேண்டும் என்று உருவாவதில்லை. அந்தச் சூழ்நிலையைக் கூர்ந்து கவனித்துச் உள்ளுணர்வோடு செயல்படும் திறமையும் அறிவும் போதாமல் இருப்பதே பிரச்சினையை ஏற்படுத்துகின்றது. எனவே ஒரு பிரச்சினையிலிருந்து மீண்டு வரும் போது , பல திறமைகள் வெகுமதிகளாக உடன்வருகின்றன.

 

பிரச்சினை என்பது எந்தக் காரணமுமின்றித் திடீரென்று உதித்த ஒன்றல்ல. அது உருவாவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினையில் சிக்கியுள்ள மனிதனின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு இயற்கையின் நியதி தான் இந்தப் பிரச்சினைகளை அழைத்து வந்துள்ளது. இங்குத் தான் துன்பத்திற்குள் நன்மை ஒளிந்திருக்கின்றது.

சில வகையான செயல்பாடுகளையும் நடைமுறைகளையும் கடைப்பிடிப்பது தப்பாமல் குழப்பங்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும். வேறு சில வகையான செயல்பாடுகளையும் நடைமுறைகளையும் கடைப்பிடிப்பதால் எந்தக் குழப்பமும் சிக்கலுமற்ற தெளிவான நிலை உறுதியாகப் பிறக்கும். எவ்வளவு இறுக்கமாக மாயக் கயிறுகளால் ஒருவன் தன்னைச் கட்டிப்போட்டுக் கொண்டு இருந்தாலும் அவன் எப்போதுமே தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம். அவன் அறியாமையால் எண்ணற்ற குழப்பமான பாதைகளில் வழி தவறி சென்று தவித்தாலும் அவன் தேடும் நல்வழிப் பாதையை அவனால் கண்டு அடைய முடியும். எந்தக் குழப்பமும் இல்லாத தெள்ளத் தெளிவான அந்த நேர்வழியில் சென்று அருளும் மெய்யறிவும் ஒளிவீசுகின்ற நகரை அவன் அடையமுடியும். ஆனால் எதுவும் செய்யாமல் வீணாக உட்கார்ந்துக் கொண்டு அழுது அரற்றி, புலம்பி, வருந்தி, தனக்கு இன்னொரு வகையான சூழ்நிலை நேர்ந்திருந்தால் என்று குறிக்கோளின்றி ஆசைப்பட்டுக் ஏங்கிக் கொண்டு இருப்பதால் அந்தப் பாதையை அடையமுடியாது. அவனது குழப்பமான மனநிலை விழிப்புணர்வுடன் சிந்தித்துச் செயல்பட அவனுக்கு அழைப்பு விடுக்கின்றது. அவன் தன்னைத் தானே வழி நடத்திக் கொள்ளும் வலிமையை அடையவேண்டும். ஆழ்ந்து யோசித்துப் பின்வாங்காமல் உறுதியாகச் செயல்பட்டு விழுந்த நிலையிலிருந்து மீண்டு எழ வேண்டும். வருத்தப்படுவதாலும் பதட்டப்படுவதாலும் எந்தப் பயனுமில்லை. அது பிரச்சினையை மிகைப்படுத்திக் கவலையைத் தான் அதிகரிக்கும். அவன் அமைதியாகச் செயல்பட்டு தன் நிலையைச் சரிப்படுத்த முனைய வேண்டும். கடந்து வந்த பாதையைப் பின்னோக்கி ஆராய்ந்து பார்த்து, தற்போது உள்ள அவன் நிலைக்கு அவன் அப்பொழுது எடுத்த முடிவுகளே முக்கியக் காரணம் என்று அறிந்து கொள்ளட்டும். அன்று அவன் செய்த தவறுகளைச் சட்டென்று உணர்வான். எந்த இடத்தில் தவறான திசை திரும்பினான் என்று கண்டுபிடிப்பான். எந்த இடத்தில் இன்னும் சற்று கூடுதல் கவனத்தோடு செயல்பட்டு இருக்கலாம், சரியான முடிவைச் சிந்தித்து எடுத்திருக்கலாம், பணத்தையோ பொருளையோ வேறு ஏதேனும் ஒன்றையோ வீணாக்காமல் இருந்திருக்கலாம், தன் அகம்பாவத்தை அழித்திருக்கலாம் என்று அவனுக்கு நன்மை செய்யக் கூடியவற்றை எண்ணுவான். எவ்வாறு , மெல்ல மெல்ல வலையில் சிக்கிக்கொண்டோம், தீர ஆலோசித்துத் தெளிந்த அறிவோடு செயல்பட்டிருந்தால் வேறொரு உண்மையான பாதையில் பயணத்தை மேற்கொண்டிருக்கலாம் என்று எண்ணுவான். தன் பழைய செயல்பாடுகளின் அனுபவத்திலிருந்து விலைமதிக்க முடியாத ஞானத்தைக் கடைந்தெடுத்த அடுத்தக் கனமே, அவனது பிரச்சினையின் வீரியமும் வீச்சும் குறைந்திருக்கும். அந்தப் பிரச்சினையை உணர்ச்சி வசப்படாமல் அணுகி, உற்று நோக்கி முழுவதுமாக ஆராய்ந்து,எல்லாக் கோணங்களிலும் இருந்து கவனித்த பின் அடுத்துத் தான் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும், செயல்பட வேண்டிய வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும் மேற்கொள்வான். இவ்வாறு செய்யப் பிரச்சினையாக இருந்த ஒன்று பிரச்சினையில்லாமல் ஆகிவிடும். காரணம் அதற்குள் இருந்து நேர் வழிதோன்றிவிட்டது. காலத்திற்கும் உதவும் ஒரு பாடத்தை அந்த மனிதனும் கற்றுக் கொண்டுவிட்டான். அவனிடமிருந்து திரும்பப் பறிக்கப்பட முடியாத ஞானத்தையும் பேரளுளையும் அவன் ஓரளவு ஈட்டி இருக்கிறான் .

அறியாமை, சுயநலம், முட்டாள்தனம், கண்மூடித்தனம் போன்ற இவை எல்லாம் எப்படிக் குழப்பத்திலும் சிக்கல்களிலும் கொண்டுப் போய் விடுமோ, அது போலவே அறிவும், பரந்த மனமும், மெய்யறிவும் , உள்ளுணர்வும் இனிமையான நிம்மதியான சூழ்நிலைக்கு அழைத்துச் செல்லும். இதை அறிந்தவன் பிரச்சினைகளை அச்சமற்ற உணர்வுடன் சந்திப்பான். அவற்றை அவன் வென்று கடந்து செல்லும் போது தவறானவைகளிலிருந்து உண்மையை, துன்பத்திலிருந்து இன்பத்தைக் குழப்பத்திலிருந்து நிம்மதியைப் பெறுவான்.

ஒரு மனிதனுக்கு எந்த அளவிற்குப் பிரச்சினையைச் சந்தித்து மீள்வதற்கான வலிமையிருக்கிறதோ அந்த அளவை மீறிய பிரச்சினை ஒரு போதும் அவனை நாடி வருவது இல்லை. பிரச்சினையைக் கண்டு வருந்துவது வீண் வேலை மட்டுமல்ல, அது முட்டாள்தனமும் கூட. ஏன் என்றால் வருந்துவதற்குச் செலவிடப்படும் சக்தியானது, அந்தப் பிரச்சினையை நோக்கிச் செலுத்த வேண்டிய அறிவையும், ஆற்றலையும் மூழ்கச் செய்துவிடுகிறது. ஒவ்வொரு பிரச்சினையையும் சரியான விதத்தில் அனுகினால் அதிலிருந்து மீளலாம். எனவே பதறுவது தேவையற்றதாகும். ஒன்றிலிருந்து மீண்டு வரமுடியாது என்று உறுதியாகத் தெரிந்துவிட்டால், அதைப் பிரச்சினை என்று கூற முடியாது. அது சாத்தியமற்றது என்று கூற வேண்டும்.. அந்தச் சாத்தியமற்ற சூழ்நிலையிலும் பதட்டப்படுவதால் பயன் இல்லை. அதற்குக் கட்டுப்பட்டு நடப்பது தான் தலைசிறந்த ஒரே வழி.

இதயத்தால்உணருங்கள்

பொய்யானகடவுள்கள்விலகும்போது

உண்மையான கடவுள் உள்ளே புகும்.

 

ஒருவனது வீட்டுப் பிரச்சினைகள், பொது வாழ்விலும் சமூகத்திலும் அவனுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவனது பொருளாதாரப் பிரச்சினைகள் ஆகியவை எல்லாம் அவனது அறியாமையால் தான் உதித்தன. அவை உதித்ததன் காரணம்  அவன் ஆழ்ந்த பண்படுத்தப்பட்ட பக்குவமான பரந்த அறிவைப் பெற வேண்டும் என்பதே. அது போலவே சமயக் கோட்பாடுகளில் ஒருவனுக்கு ஏற்படும் சந்தேகங்கள், மனக் குழப்பங்கள், இதயத்தைச் சூழும் கருமேகங்களின் நிழல் ஆகியவை எல்லாம் மெய்யறிவு மலரப் போகும் ஒளிமயமான புதிய பொழுதின் வருகையைக் குறிப்பவை ஆகும். ஆன்மீக நிலையில் அடுத்த நிலைக்கு அவன் செல்ல அவனைத் தயார் படுத்துபவைகளாகும்.

வாழ்வின் புதிருக்கான விடையைக் காணும் முயற்சியில் ஈடுபடுவதன் விளைவாக ஒருவனது மனதில் ஆழ்ந்த குழப்பங்கள் நிலைக் கொள்ளும் நாள் ,உண்மையில் அவனது வாழ்வில் ஒரு மகத்தான நாளாகும். (அவனுக்கு அப்போது அது தெரிந்து இருக்காது என்றாலும் கூட.) காரணம், இதுவரை அறிந்த வட்டத்தைச் சுற்றி சுற்றி வந்து அடைந்துள்ள சலிப்பினால் அவன் பழைய வட்டத்திலிருந்து வெளியேற வேண்டிய நாள் நெருங்கிவிட்டதை அது உணர்த்துகிறது. உண்ணுவதும் உறங்குவதும் உடுப்பதும் உறைவதும் புலனின்ப ஆசைகளில் ஈடுபடுவதும் என அவற்றுக்காக மட்டும் பாடுபடாமல் தன்னுள் எழும் உயர் எண்ணங்களைச் செயல்படுத்தும் நாள் வந்துள்ளதை அது குறிக்கின்றது. இனி அவன் ஒரு”மனிதனாக” வாழ்வான். அவன் மனதின் எல்லா ஆற்றல்களையும் பயன்படுத்தி வாழ்வின் சோதனைகளுக்கும், மனதை வாட்டும் குழப்பங்களுக்கும் விடையை அளிப்பான். இந்த சோதனைகளும் குழப்பங்களும் உண்மையின் கட்டளையைக் கேட்கும் படைவீரர்கள். மெய்யறிவு என்னும் கோயிலின் நுழைவாயிலில் இருக்கும் பாதுகாவலர்கள்.

 

பெரும்சோதனைகள்வரும்போது

தப்புவதற்குவழிகளையோகாரணங்களையோதேடாமல்

அமைதியாக எதிர்கொள்பவனே உயர் மனிதனாவான்.

சுயநலமாகச் சோம்பித் திரிவதிலும் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியாத அறிவீணங்களிலும் திரும்பவும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளமாட்டான். புலனின்ப இச்சைகளில் முழ்கி திளைக்க மாட்டான். இடைவெளியின்றித் தொடரும் தன் இதயத்தின் இருண்ட விவரிக்க முடியாத இரகசிய விசாரனையிலிருந்து தப்பித்து ஓட வழித்தேட மாட்டான்.அவனுக்குள் இருந்த தெய்வீகத் தன்மை விழித்துக் கொண்டுவிட்டது. மாயஇரவின் முன்பின் தொடர்பில்லாத குழப்பமான தோற்றங்கள் மறைந்து உண்மையின் தெளிவான காட்சி கிடைக்கும் வரை அந்தத் தெய்வீகத் தன்மை இனி கண் துஞ்சாது.

உயர் எண்ணங்களையும் செயல்களையும் செய்ய வேண்டும் என்று தன்னுள்ளிலிருந்து அழைப்பு எழுந்த பின் ஒரு மனிதனால் அதற்குச் செவி சாய்க்காமல் சிறிது கூடக் காலத்தைக் கடத்த முடியாது. அவனது விழித்து எழுந்த ஆற்றல்கள் அவனது குழப்பங்களுக்கு விடைக் காண இடைவிடாமல் அவனைத் துருத்திக் கொண்டே இருக்கும். இனி அவனால் பாவத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. தவறுகளில் ஓய்வைப் பெற முடியாது. மெய்யறிவில் மட்டுமே இனி அவன் தஞ்சம் புகுவான்.

தன்னுடைய சந்தேகங்களும் குழப்பங்களும் தன்னுடைய அறியாமையின் விளைவாகவே பிறந்துள்ளன என்று உணர்ந்து தன் அறியாமையிலிருந்து ஒளிந்து கொள்ளாமல் அதை ஏற்றுக் கொண்டு பின் அதை அகற்ற ஒவ்வொரு நாளும் சோர்வடையாமல் பாடுபடுபவன் பேரருள் பெற்றவன் ஆவான். ஏன் என்றால் அவன் இப்பொழுது நுழைந்துள்ள ஒளி வீசும் பாதை இருண்ட நிழலை எல்லாம் அகற்றிவிடும். சந்தேகங்களை எல்லாம் கரைத்துவிடும். வாழ்வை அழுத்தும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடையைத் தரும். நீண்ட நாள் பாடுபட்டுக் கற்றுக் கொண்ட பாடத்தினால் ஒரு குழந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சி போன்று உலக வாழ்வின் பிரச்சினை ஒன்றை தீர்க்கும் போது மனிதனது இதயமும் மகிழ்ச்சியில் துள்ளும். ஆனால் அதை விட வாழ்வின் மிக முக்கிய எல்லாக் காலங்களிலும் நிலையாக இருந்த கேள்விகளுக்கு விடைக் காண தன்னுள் குழம்பி போராடி இறுதியில் விடையைக் கண்டு அறியாமை இருளை அகற்றும் நாளிலோ உலக வாழ்வின் பிரச்சினையை வென்றதை விடப் பல மடங்கு மகிழ்ச்சியிலும் நிம்மதியிலும் அவன் இருப்பான்.

உங்களுடைய பிரச்சினைகளையும் குழப்பங்களையும் கெட்டவையாகப் பார்க்காதீர்கள். அவ்வாறு செய்தால் அவற்றைக் கெட்டவையாகவே மாற்றுகிறீர்கள். ஆனால் அவற்றை நன்மையை வழங்க வந்த தூதனாகவே கருதுங்கள். அவை உண்மையிலேயே நன்மையின் தூதன் தான். அதிலிருந்து தப்பி விட முடியும் என்று நினைக்காதீர்கள். அது முடியாது. அவற்றிலிருந்து தூர ஓடிவிடவேண்டும் என்ற முயற்சி செய்யாதீர்கள். அது கண்டிப்பாக முடியாது. காரணம், நீங்கள் எங்கே சென்றாலும் அதுவும் உங்கள் கூடவே வந்துவிடும். ஆனால் அவற்றை அமைதியாகத் துணிவோடு எதிரக் கொள்ளுங்கள். உணர்ச்சி வசப்படாமல், அடி பணியாமல் அதைச் சந்தியுங்கள். அந்தப் பிரச்சினையை ஆராய்ந்து எடைப் போடுங்கள். அதன் நுணுக்கங்களை அலசுங்கள். அதன் வலிமையை அளவிடுங்கள். முழுவதுமாகப் புரிந்து கொள்ளுங்கள். பின்பு மோதி இறுதியாக அந்தப் பிரச்சினையை ஒழித்துவிடுங்கள். இவ்வாறு செய்து உங்கள் வலிமையை, பரந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். மேலோட்டமாகப் பார்க்கும் கண்களுக்குத் புலப்படாமல் மறைந்திருந்திருக்கும் இந்த நல்வழிப் பாதைக்குள் நீங்கள் நுழைவீர்கள்.

 

Share This Book

Feedback/Errata

Comments are closed.