10 நிலையான மகிழ்ச்சி

 

 

தூசி படிந்த வீதிகளோ பளபளக்கும் பேரங்காடிகளோ ,

வாழ்வின் கடமைகள் எங்கே அழைத்துச் சென்றாலும் அங்கெல்லாம்,

தங்கள் இதயத்தில் இசையைச் சுமந்து செல்பவர்கள் யார்?

அவர்கள் ஆன்மாவின் புனித ரகசிய கட்டளையைத் தொடர்ந்து

நிறைவேற்றுகிறார்கள். –கெபில்.

 

நம்முள்அன்பு ஒளிவீசும்போது

பேரானந்தம்   சூழ்ந்து பாதுகாப்பு   அரனாக காத்து நிற்கும் –

நம் குண இயல்புகள் மகிழ்ச்சியாக மலரும்

நாட்களும் நிம்மதியாக,பொலிவாகக் கடந்து செல்லும்.

வெர்ட்ஸ்வர்த்

 

நிலையான மகிழ்ச்சி! அப்படி ஒன்று இருக்கிறதா? அது எங்கே இருக்கின்றது? யார் அதைப் பெற்று இருக்கிறார்கள்? ஆம். அது உண்மையில் இருக்கின்றது. எங்கே பாவங்கள் இல்லையோ அங்கே அது இருக்கின்றது. மனத்தகத்தில் மாசகற்றியவர்கள் அதைப் பெற்று இருக்கிறார்கள்.

வெளிச்சம் என்ற நிலையான ஒன்றின் குறுக்கே வந்துள்ள ஒரு பொருளின் நிழலைப் போன்றதே இருள் என்கிற துக்கம். அது விரைவாகக் கடந்து சென்று விடும். ஆனால் மகிழ்ச்சியோ நிலைத்து நிற்கும். உண்மையான எந்த ஒன்றும் மறைந்தோ தொலைந்தோ போகாது. எந்தப் பொய்யான ஒன்றையும் நிலைத்து நிற்கச் செய்ய முடியாது. கட்டிக் காப்பாற்ற முடியாது. துக்கம் பொய்யானது, அது வாழ முடியாது. மகிழ்ச்சி உண்மையானது. அது இறக்க முடியாது. மகிழ்ச்சி ஒரு காலத்திற்கு மறைந்து போகலாம். ஆனால் அதை எப்படியும் வெளிக் கொண்டு வந்து விடலாம். துக்கம் ஒரு காலத்திற்கு நிலைத்திருக்கும். ஆனால் அதைக் கடந்து விடலாம் ,சிதறடித்து விடலாம்.

உங்கள் துக்கம் நிரந்தரமாகத் தங்கிவிடுமோ என்று எண்ணாதீர்கள். அது மேகத்தைப் போலக் கடந்து சென்றுவிடும். பாவத்தினால் விளைந்த துன்பங்கள் உங்கள் வாழ்வின் ஒரு பகுதி என்று கருதாதீர்கள். திகிலை ஏற்படுத்திய ஏதோ ஓர் இரவை போல அது மறைந்துவிடும். விழித்து எழுங்கள். புனிதமாகுங்கள். ஆனந்தம் கொள்ளுங்கள்.

உங்கள் நிழலை உருவாக்குபவர் நீங்கள் தான். நீங்கள் தான் ஆசைப்படுகிறீர்கள். பின்பு கவலைப் படுகிறீர்கள். எதிர்பார்ப்பை விட்டுத் தள்ளுங்கள். ஏமாற்றம் உங்கள் அருகில் வராது.

நீங்கள் துக்கத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டிய கையாலாகாத அடிமையல்ல. முடிவில்லாத பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் உங்கள் வீடு வரக் காத்திருக்கின்றன . இருள் மிகுந்த சிறையில் பாவங்களைக் கனவு காண வேண்டிய வலிமையற்ற கைதியல்ல நீங்கள். இப்பொழுதும் தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் கண் இமைகளின் மேல் புனிதத்தின் அழகு ஒளி வீசிக்கொண்டு தான் இருக்கிறது. நீங்கள் விழிப்புறும் அந்த நொடியே உங்களை வரவேற்க அது காத்திருக்கிறது.

பாவச்செயல்களாலும்  தான் என்கிற அகம்பாவத்தாலும் உருவாகும்  பாரம் மிகுந்த  குழப்பமான உறக்க நிலையில்- நிலையான மகிழ்ச்சியை நினைவு கொள்ள முடியாது. இறவாத அதன் இசை செவிகளில் எட்டாமல் தொலைந்து சென்றிருக்கும். காற்றில் நறுமணத்தைப் பரவும் அதன் அழகு ஒளிரும் வாடாத மலர்கள் அவ்வழி செல்வோரின் இதயங்களை இனிமேலும் பரவசப்படுத்தாது.

பாவச்செயல்களும் , தான் என்கிற அகம்பாவமும் கைவிடப்படும் போது சுயநலத்திற்காகப் பொருள்களைப் இறுகப் பற்றிக் கொள்ளும் ஆசைகளைத் துறக்கும் போது, துக்கத்தின் நிழல் மறையும். இதயம் தன் உடன் பிறந்த என்றும் நிலையான இன்பத்தின் துணையை மீண்டும் பெறும்.

“நான்” என்கிற எண்ணம் நீங்கிய இதயத்தில் மகிழ்ச்சி வந்து குடிக்கொள்ளும். எங்கே நிம்மதி இருக்கின்றதோ அங்கே தான் மகிழ்ச்சி தங்கும். கலங்கம் அற்றதையே மகிழ்ச்சி ஆளும்.

சுயநலம் மிக்கவர்களிடமிருந்து மகிழ்ச்சி விலகி ஓடும். சண்டை சச்சரவில் ஈடுபடுபவர்களைக் அது கைப்பிடிக்காது. மனத்தூய்மையற்றவர்களுக்கு அது புலப்படாமல் மறைவாகவே இருக்கும். மகிழ்ச்சி என்பவள் பேரழகும், மென்மையும், தூய்மையும் நிறைந்த ஒரு தேவதை . அவளால் புனிதமானவற்றுடன் மட்டுமே இருக்க முடியும். அவளால் சுயநலத்தோடு உடன் வாழ முடியாது. அவள் அன்பையே விரும்பிக் கரம்பிடிப்பாள்.

ஒவ்வொரு மனிதனும் எந்த அளவிற்குச் சுயநலமில்லாமல் இருக்கின்றானோ அந்த அளவிற்கு உண்மையான மகிழ்ச்சியில் இருக்கிறான். எந்த அளவிற்குச் சுயநலமாக இருக்கிறானோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியில்லாமல் துக்கமாக இருக்கிறான். உண்மையான நல்லவர்கள் (நல்லவர்கள் என்றால் உள்ளத்தில் தான் என்கிற அகம்பாவ எண்ணத்துடன் வெற்றிகரமாகப் பேரிடுபவர்கள்) மகிழ்ச்சியுடனே இருக்கிறார்கள். புனிதமானவர்களின் வெற்றி எவ்வளவு கொண்டாடத்தக்கதாக இருக்கிறது. எந்த உண்மையான ஆசானும் வாழ்வு வெறும் துக்கமே என்று சத்தியம் செய்ததில்லை. அது ஆனந்தமானது என்றே உறுதி செய்கிறார்கள். பாவத்தினால் ஏற்பட்ட பின் விளைவைக் களைவதற்கே துக்கம் வருவதாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். எங்கே ”நான் , எனது “ என்பது மறைகிறதோ, அங்கே கவலையும் மறைந்துவிடுகிறது. மகிழ்ச்சி என்பது நன்மையின் உற்ற துணையாகும். கண்ணீரும் கவலையும் அமர்கின்ற இடங்களில் இளகிய மனமும் இரக்கமும் அமரும் போது வாழ்வு தெய்வீக வாழ்வாகின்றது. சுயநலத்தைத் துறக்க என்னும் காலம் எளிதான ஒன்றல்ல. அதில் சில காலக் கட்டங்கள் மிகத் துக்கம் வாய்ந்தவை. மாசு அறுப்பது என்பது ஏற்றுக்கொள்ளக் வேண்டிய கடினமான வலி. எல்லா மாறுதல்களிலும்,வளர்ச்சிகளிலும் கட்டாயம் வலி இருக்கும். ஆனால் முழு வளர்ச்சி நிலையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அந்த நிலையில்

எல்லாமே அழகும் ஆற்றலும் அன்பும் ஆகவே  இருக்கும்.

மனதின் எல்லாப் பெருந்தன்மையான குணங்களும் நிறைந்திருக்கும்.

அவரவர்கள் தங்களுடைய செயல்கள், உணர்வுகள், எண்ணங்கள், சூழ்நிலைகள், குணங்கள் ஆகியவற்றின் மீது முழுக்கட்டுப்பாட்டை வைத்திருப்பார்கள்.

எந்த அளவிற்குச் சுயநல ஆசைகள் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மனதின் மாசை முற்றிலும் அகற்றியவர்களால் தான் நிலையான அதன் முழு இருப்பை நொடிக்கு நொடி தொடர்ந்து உணர முடியும் என்றாலும் அதன் இனிமையைச் சுயநலமின்றி உயர்வாகச் செயல்படும் ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு மணிப்பொழுதிலும் எல்லோராலும் உணர்ந்து கொள்ளமுடியும். சுயநலமற்ற உண்மையான ஒவ்வொரு எண்ணத்தாலும் ஒவ்வொரு செயலாலும் (பரபரப்பாகக் கொண்டாடப்படும் பொய்யான மகிழ்ச்சியல்ல ,காய்ச்சலைப் போல் தொற்றிக் கொள்ளும் பொய்யான இன்பமல்ல ) துன்ப கண்ணீர் பின் தொடராத உண்மையான மகிழ்ச்சி வெளிப்படும்.

ஒரு பூ எவ்வாறு பூத்து மலர்கின்றது என்று நினைத்துப் பாருங்கள். முதலில் விதையானது புதைக்கப்பட்ட மண்ணின் இருட்டிலிருந்து மேல் இருக்கும் ஒளியை நோக்கி முளைக்கின்றது. பின்பு செடியாக மாறுகின்றது. பிறகு இலை இலையாக வளர்கின்றது. இறுதியில் எந்த முயற்சியும் இன்றிக் கைப்படாத அழகுடன் இனிய நறுமணத்துடன் பூ மலர்கின்றது.

மனித வாழ்வும் அதே போன்று தான். முதலில் அறியாமை, சுயநலம் என்னும் மண்ணில் ஆழமாக, வெளிச்சமில்லாத இருட்டில் புதையுண்டு ,  காண முடியாத வெளிச்சத்தை நோக்கி முன்னேறும் முயற்சி நடைபெறுகிறது. வெளிச்சத்திற்கு வந்த பின்பு, சுயநலத்தை விட்டொழிக்கும் போது வலியும்,வேதனையும் கூடவே தொடர்கின்றன.இறுதியில் சுயநலமில்லாத தூய்மையான வாழ்வு மலர்ந்துபின்  எந்த முயற்சியுமின்றித் தானாகவே புனித நறுமணத்தையும் மகிழ்ச்சி பேரழகையும் பரப்புகின்றது.

நல்லவர்கள், மன மாசற்றவர்கள், மகிழ்ச்சியின் உயர் நிலையிலேயே இருக்கிறார்கள். மனிதர்கள் தங்கள் விருப்பம் போல் வாதிட்டு இதை ஏற்றுக் கொண்டாலும் அல்லது மறுத்தாலும், மனிதக் குலம் தன் உள்உணர்வால் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பது உண்மை என்று அறியும். உலகமெங்கும் மனிதர்கள் தேவதைகளை மகிழ்ச்சியின் உருவமாகத் தானே ஓவியப்படுத்துகிறார்கள். மகிழ்ச்சி தேவதைகள் இறைச்சி தோல் எலும்பினால் ஆன இந்த உடம்பின் உள்ளும் இலக்கமிட்டு இருக்கின்றன. அவர்களை நாம் சந்தித்தாலும் அதைக் கவனிக்காமல் கடந்து சென்று விடுகிறோம். அவ்வாறு கடந்து செல்லாமல் களிமண்ணினால் ஆன இந்த உடம்பில் குடி இருக்கும் களங்கப்படுத்த முடியாத அந்தத் தேவதையைக் கண்டு உணரும் உள்ளத்தூய்மை உடையவர்கள் எவ்வளவு பேர்?

பார்வையற்றவன் காதின் அருகில் சீவும் வாள் இருந்தாலும்

அதை அவன் தடவிப் பார்த்தே அறியமுடியும்.

தன்னுள் தெளிவாக உள் நோக்கிக் காணும் பார்வை உடையவனுக்கு

வெளியே அவற்றைக் குறிக்கும் வடிவம் மறையும்.

ஆம், மன மாசற்றவர்கள் ஆனந்தக் களிப்பில் இருக்கிறார்கள்.

இயேசுவின் வார்த்தைகளில் ஏதாவது துக்கம் வெளிப்படுகிறதா என்று நாம் முயன்று தேடினாலும் காணமுடியாது. ”துக்கத்தால் ஆன மனிதன்” ”ஆனந்தத்தால் ஆன மனிதன்” ஆக முழுமை பெறுகிறான்.

உலகளவு துன்பத்தால் இதயம் நொறுங்கிய என் சகோதரர்களுக்குப் புத்தனாகிய நான் கண்ணீர் வடித்தேன்.

அவர்களுக்கு மீள்வதற்கு வழி இருப்பதை எண்ணி ஆறுதல் அடைந்து

இப்போது  நான் சிரித்து மகிழ்கிறேன்.

 

பாவத்திலும், பாவத்திலிருந்து மீண்டு எழும் போராட்டத்திலும், களைப்பும் துன்பமும் ஏற்படும். ஆனால் மெய்யறிவை பெறும் போது, நன்மையின் பாதையில் செல்லும் போது, மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

நன்மையின் பாதைக்குள் நுழையுங்கள்.

காயங்களை ஆற்றி குணமாக்கும் நீர்ச் சுனைகள் எல்லா வித தாகங்களையும் தவிப்புக்களையும் தீர்க்க  அங்கே பரவிக் கிடக்கின்றன.

வழி எங்கும் என்றும் வாடாத மலர்கள் பாயாக விரிக்கப்பட்டு இருக்கின்றன.

விரைந்து செயலாற்றும் இனிமையான காலங்கள் ஏராளமாக இருக்கின்றன.”

 

துன்பம் எதுவரை நீடிக்கும் என்றால் “நான்” என்கிற அகம்பாவ உணர்வு நீடிக்கும் வரை மட்டுமே. அரிசியிலிருந்து உமி நீங்கிய பின்பு கதிரடிக்கும் இயந்திரம் தன் வேலையை நிறுத்தி கொண்டு விடும். இறுதி மனமாசுகள் உள்ளத்திலிருந்து நீங்கிய உடன் துன்பங்கள் நின்றுவிடும். அது மேலும் வாட்டுவதற்கு மனதில் எந்த அழுக்கும் இனி இல்லை. நிலையான மகிழ்ச்சி உணரப்பட்டுவிடும்.

எல்லாப் புனிதர்களும் இறை தூதர்களும் மனிதக் குலத்தின் இரட்சகர்களும் மகிழ்வோடு நற்செய்தியை அறிவித்து இருக்கிறார்கள். நற்செய்தி என்றால் என்ன என்று எல்லா மனிதர்களும் அறிவார்கள். தவிர்க்கப்பட்ட பேராபத்து, நோய் தீர்ந்து குணமாவது, நண்பர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வது அல்லது பாதுகாப்பாக ஊர் திரும்புவது, பிரச்சினையை முறியடித்து மீண்டு வருவது, தொழிலில் வெற்றி வாய்ப்பு உறுதியாவது, போன்றவையே. ஆனால் புனிதர்களின் நற்செய்தி என்றால் அது என்ன? குழப்பமானவர்களுக்கு அமைதி இருக்கின்றது. துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் இருக்கின்றது. கவலைப்படுபவர்கள் ஆனந்தப்படுவார்கள், பாவத்தை வெல்ல முடியும். வழி தவறியவன் வீடு வந்து சேர்வான். மனம்  உடைந்தவர்களும், துக்கப்படுபவர்களும் மகிழ்ச்சியுறுவார்கள். இந்த அழகிய உண்மைகளை எதிர்கால உலகில் அல்ல; இங்கே, இப்பொழுதே உணரமுடியும். அனுபவிக்க முடியும். தான் என்ற குறுகிய எல்லையை உடைத்து தன்னலமற்ற அன்பு என்னும் எல்லையற்ற பெரு வெளிக்குள் நுழையும் யாவரும் உணரமுடியும், அனுபவிக்க முடியும் என்று புனிதர்கள் அறிவிக்கிறார்கள்.

மிக உயர்ந்த நன்மையை முயன்று தேடுங்கள். தேடிக் கண்டவுடன் அதை நடைமுறைப்படுத்திப் பார்த்து உணருங்கள். மிக ஆழமான, இனிமையான ஆனந்தத்தின் சுவையைப் பருகுவீர்கள். மற்றவர்கள் நலத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்.மற்றவர்களை அன்போடும், கனிவோடும் எண்ணுங்கள்.தேவையானவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்,இவ்வாறு செய்து உங்கள் சுயநல ஆசைகளை வெற்றிகரமாக மறந்து விடுங்கள் . அந்த இடத்திலேயே (இன்னும் சிறிது தூரம் கூடக் கடந்து செல்லத் தேவையின்றி )வாழ்வின் நிலையான மகிழ்ச்சியை நீங்கள் கண்டு உணர்வீர்கள்.

சுயநலமின்மை என்னும் வாயில்க் கதவின் உள் சொர்க்கத்திலிருக்கும் நிலையான மகிழ்ச்சி இருக்கின்றது . யாரும் அந்தக் கதவை திறந்து சென்று நிலையான மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். யாருக்கு இதில் சந்தேகமோ அவர்களும் வந்து கதவை திறந்து பார்த்துத் தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.

எனவே சுயநலம் என்பது துக்கத்திற்கு அழைத்துச் செல்லும். சுயநலம் துறப்பதே மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் என்று தெரிந்து கொள்ளும் போது – இது நம்  ஒருவர் மகிழ்ச்சிக்கு ஆக மட்டும் அல்ல. அவ்வாறு என்றால் நம் எண்ணம் எவ்வளவு தாழ்வானது! ஆனால் முழு உலகத்தின் மகிழ்ச்சிக்காகவும். காரணம் நம்மோடு வாழும் நம்முடன் தொடர்பு கொள்ளும் யாவரும் நாம் நம் சுயநலத்தைத் துறந்ததற்காக உண்மையாகவும்  மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். காரணம் மனிதக் குலம் என்பது ஒன்றே, ஒருவனின் ஆனந்தம் என்பது எல்லோரின் ஆனந்தமே. இதைத் உணர்ந்த பின், வாழ்வின் பாதைகளில் மலர்களைத் தூவலாம். முட்களை அல்ல. ஏன், நம் எதிரிகளின் பாதைகளிலும் தன்னலமற்ற அன்பின் நறுமண மலர்களைத் தூவலாம். அவர்களின் கால் அடி அதன் மேல் பதிய அந்த அழுத்தத்தில் புனிதத்தின் நறுமணச் சாந்து காற்றில் தெளிக்கப்படட்டும். உலகம் அந்த நறுமணத்தில் மகிழ்ச்சியுறட்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

நிலையான மகிழ்ச்சி by சே.அருணாசலம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Comments are closed.