9 தீங்கில்லாத உலகை காண்பது

 

 

இந்தப் பிரபஞ்சம் அன்பிற்குக் கட்டுப்பட்டுள்ளது.

அதன்கண்கள்துணியால்மூடப்பட்டுஇருந்தாலும்

அதுஇலக்கின்மீதுவைத்தகுறிதப்பாது. —எமர்சன்

நீங்கள்தீங்கைஎண்ணிஇருந்தீர்கள்என்றால்

உங்கள் செயலில் தீங்கின் நிழல் கறையாகப் படிந்திருக்கும்.

நீங்கள்சிறந்ததைஎண்ணிஇருந்தீர்கள்என்றால்

உங்கள் செயலும் சிறந்ததாக, உண்மையானதாக, தூய்மையானதாக இருக்கும்.

–கன்பூஷியஸ்க்குப்பின்

மன்னிக்கும் குணத்தைக் கடைப்பிடித்து, மன்னிக்கும் தன்மையை ஓரளவு வளர்த்துக் கொண்ட பிறகு நன்மை, தீமை பற்றிய தெளிவு ஒருவன் உள்ளத்தில் உருவாகியிருக்கும். எண்ணங்களும் உள் நோக்கங்களும் உள்ளத்தில் எவ்வாறு உருவெடுக்கின்றன, எவ்வாறு வளர்கின்றன, எவ்வாறு செயல்களாகப் பிறப்பெடுக்கின்றன என்று மனிதன் உணர ஆரம்பிப்பான். இனி மனக்கண்ணில் விரியும் காட்சிகளின் புதிய தன்மை சிறந்த, உயர்ந்த, தெய்வீக வாழ்வு தொடங்கிவிட்டதைக் குறிக்கும். தன்னைக் குறித்த பிறரது செயல்களைத் தடுப்பதும் வெறுப்பதும் வீண் வேலை, அவை எப்படிப்பட்ட செயல்களாக இருந்தாலும் சரி, அந்தச் செயல்களை அவன் வெறுப்பதற்கு முதல் காரணம் தன்னுள் இருக்கும் அறியாமை தான், தன் உள் மனதில் இருக்கும் கசப்புணர்வு தான் என்று புரிந்து கொள்கிறான். இந்தளவு அவன் மனம் பக்குவப்பட்டபின் அவன் தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறான்;-எதற்கு இதுபோன்று தொடரும் பதிலடிகளும் மன்னிப்புகளும்? ஏன் இன்னொருவன் மேல் வெறியூட்டும் கோபமும் பின்பு வருந்துவதும் மன்னிப்பதும்? மன்னிப்பு என்பது என்ன?இன்னொருவன் மேல் உள்ள கோபத்தை, வெறுப்பை அவன் மேல் செலுத்தாமல் திரும்பப் பெறுவது தானே, கோபமும் வெறுப்பும் நன்மையானவையே, தேவையானவையே என்னும் போது பின்பு ஏன் வருத்தப்பட வேண்டும்? கைவிடவேண்டும்? கசப்புணர்வுகளைக் கைவிட்டு முழுமையாக மன்னிக்கும் போது ஏற்படும் இனிமையும், நிம்மதியும் இவ்வளவு அழகாக இருக்கின்றதே, ஒரு வேளைப் பிறர் மீது கசப்புணர்வே உருவாகவில்லை என்றால், கோபத்தை அறியாது இருந்தால், பிறர் செயல்களைப் பார்த்து வெறி ஏற்படாமல் இருந்தால், கசப்புணர்வும், கோபமும், வெறியும் ஏற்படும் மனநிலைக்குப் பதிலாக மன்னிக்கும் போதும், வெறுப்பைக் கைவிடும்போதும் அனுபவிக்கும் தூய்மையான, சாந்தமான, ஆனந்தமான பேரன்பு நிலையில் என்றும் வாழ்ந்தால் அது எவ்வளவு பேரழகாக இருக்கும்? இன்னொருவன் எனக்குத் தவறு செய்துவிட்டான், நான் அவன் மேல் கொள்ளும் வெறுப்பும் தவறானது தானே. ஒரு தவறு இன்னொரு தவறை சரி செய்துவிடுமா? மேலும், அவன் எனக்குச் செய்த தவறால் அவன் என்னை உண்மையிலேயே காயப்படுத்தி விட்டானா அல்லது அவன் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டுள்ளானா? நான் செய்யும் தவறுகள் தானே என்னை அதிகம் காயப்படுத்துகின்றன இன்னொருவன் செய்த தவறை விட? பின்பு, என்னுள் நான் ஏன் கோபத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்? நான் ஏன் வெறுக்கும் எண்ணங்களிலும், கசப்பான எண்ணங்களிலும் பதில் தாக்குதல்களிலும் ஈடுபட வேண்டும்? என்னுடைய ஆனவம் சீண்டப்பட்டதால், என்னுடைய வீண் தற்பெருமை காயப்படுத்தப்பட்டதால், என்னுடைய சுயநலம் பாதிக்கப்பட்டதால் எனக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகி பதில் தாக்குதல்களில் ஈடுபடுகிறேன். என்னுள் எழுந்துள்ள கண்மூடித்தனமான மிருக வெறியிடம் என் மேன்மையான குணங்களை அடக்குவதற்கு அனுமதி கொடுத்தது தானே காரணம்? மற்றவர்கள் என் மேல் கொள்ளும் மனோபாவத்தால் நான் பாதிக்கப்படுவதன் காரணம் என் ஆனவம் அல்லது என் தற்பெருமை அல்லது எனது கட்டுப்படுத்தப்படாத தூய்மையற்ற உணர்வுகள் என்று பார்க்கும் போது நான் என்னுள் இருக்கும் தவறை தானே முதலில் சரி செய்து கொள்ள வேண்டும். ஆனவத்திலிருந்தும், தற்பெருமையிலிருந்தும், வெறிஉணர்விலிருந்தும் விடுபட்டுவிட்டால் மற்றவர்கள் மனோபாவம் என்னைக் காயப்படுத்த முடியாதே?

வெறி உணர்வுகள் அற்ற செயல்பாடுகளிலிருந்து சிறிது விலகி , மென்மையான எண்ணங்களின் வெளிச்சத்தில் சுயபரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளும் போது படிப்படியாக வெறி உணர்வுகளில் இருந்து இன்னும் மீள்கிறான். வெறி உணர்வுகள் பிறக்க காரணமாக இருக்கும் அறியாமையிலிருந்தும் மேல் எழுகிறான். பிறர் இடம் தீங்கை காண முடியாத பேரருள் நிலையை, அன்பும் நிம்மதியும் உலகு அனைத்திற்குமான நல்லெண்ணங்களும் அவனுள் உறையும் நிலையை இறுதியில் எட்டுகிறான். முட்டாள்தனங்களும், அறியாமைகளும் இனி அவன் கண்களுக்கு புலப்படாது என்று பொருள் கொள்ள வேண்டாம்  ; துன்பத்தையும், வேதனையையும், துயரத்தையும் இனி அவன் காணவே மாட்டான் என்று பொருள் கொள்ள வேண்டாம்; எது சரி, எது தவறு, எது தூய்மையானது, எது தூய்மையற்றது என்று அறிந்துக் கொள்ள முடியாதவன் ஆகிவிட்டான் என்று பொருள் கொள்ள வேண்டாம்; காழ்ப்புணர்வையும் வெறி உணர்வையும் அவன் விலக்கி உள்ளதால் நடப்பவற்றை அவன் அறிவின் தெளிவான முழு வெளிச்சத்தில் உள்ளபடியே காண்கிறான். எந்தத் தீங்கின் ஆற்றலையோ, தனக்குத் தீமை ஏற்படுத்தக் கூடிய ஒன்றையோ, அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள ,வெறியோடு அதை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்று எதையும் காணமாட்டான். தீங்கை நன்றாகப் புரிந்து கொண்டு அதைத் தன் உள்ளத்திலிருந்து தூக்கி எறிந்து உள்ளதால் அவன் காணும் அந்த ஒன்று அவனுள் எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. வெறுப்பையோ, காழ்ப்புணர்வையோ தூண்டிவிடவில்லை. மாறாக அன்பையும் இரக்கத்தையும் வழங்கிப் பரந்த மனதைக் கடைப்பிடிக்க முன் வர வேண்டும் என்று அவனை அழைக்கிறது.

ஷேக்ஸ்பியர் தான் வடிவமைத்த ஒரு பாத்திரத்தின் வாயிலாகச் சொல்கிறார், ”அறிவின்மையைத் தவிர வேறு எந்த இருட்டும் இல்லை” என்று. எல்லாத் தீங்கும் அறியாமையே , மனம் அடர்ந்த இருளில் மூழ்கி இருக்கும் நிலையே அது. அந்த இருளில் இருந்து மீண்டு ஒளிக்குள் வருவதே பாவத்தில் இருந்து மீள்வதாகும். இருட்டு என்பது வெளிச்சம் இல்லாத இடம் அல்லது வெளிச்சத்தை ஏற்க மறுப்பதாகும் என்பதைப் போலத் தீமை என்பது நன்மையை ஏற்க மறுப்பதாகும். ஒன்றை ஏற்றுக் கொள்ள ஒருவன் மறுக்கும் போது அதற்காகக் கோபப்படுவதில், வெறுப்பை உமிழ்வதில் என்ன இருக்கிறது? உலகின் இரவு நேரத்தில் யாராவது முட்டாள்தனமாக இருட்டை எதிர்க்க வேண்டும் என்று நினைப்பார்களா? அது போலவே, மெய்யறிவு பெற்ற மனிதனும், பிறர் உள்ளத்தில் இருக்கும் அறியாமை இருளை எதிர்க்கவோ கண்டிக்கவோ மாட்டான்.ஆனால் ஒளி இருக்கும் இடத்தை அவன் வாழ்கின்ற வாழ்வால் மென்மையாக அவர்களுக்கு விளங்க வைக்க முயற்சி செய்வான்.

இங்கே குறிப்பிடப்படும் தீமை என்பது அல்லது தீங்கின் ஊற்றுக்கண் என்பது இரண்டு வகையானது. முதலாவது நன்மை தீமையைப் பற்றி அறிவில்லாமல், வேறு வழி தெரியாமல் தவறை அறியாமல் செய்வது. அடுத்தது தவறு என்று அறிந்தும் செய்யக் கூடாது என்று தெரிந்தும் தவறை செய்வது. தெரிந்து செய்வது , தெரியாமல் செய்வது ,இரண்டிற்குமே அந்தத் தவறைப் பற்றிய முழு அறிவில்லாமையாலும், அந்தத் தவறின் விளைவாக வரக்கூடிய துன்பத்தைப் பற்றிய அறிவில்லாமையுமே காரணமாகும்.

சிலவற்றைச் செய்யக் கூடாது என உணர்ந்தும் ஒருவன் ஏன் அவற்றைத் தொடர்ந்து செய்கிறான்? தான் செய்வது தவறு என்பது அறிந்த பின் அறியாமை என்பது எங்கே இருக்கின்றது?

தவறு என்று தெரிந்தும் ஒருவன் தொடர்ந்து ஒன்றைச் செய்கிறான் என்றால் அதைக் குறித்த முழுமையான அறிவு இன்னும் அவனை எட்டவில்லை. அவன் அந்தத் தவறை செய்யக் கூடாது என்பதைச் சில வகையான வெளிக் கோட்பாடுகளால், உள்உணர்வின் உறுத்தலால் தான் அறிகிறான். தான் செய்யும் அந்தத் தவறைப் பற்றி முழுமையாக, தெளிவாக அறியவில்லை. சில வகையான செயல்களைச் செய்யும் போது உடனடி இன்பம் ஏற்படுவதைக் காண்கிறான். எனவே அவற்றை செய்யும் போது உள் மனதில் உறுத்தல் இருந்தாலும் அதைப் புறம் தள்ளி, அது தரும் இன்பத்தைக் கருதி அந்தச் செயலை தொடர்ந்து செய்கிறான். அந்தச் செயல் தரும் இன்பத்தில் எந்தத் தவறும் இல்லை. அதற்கு ஆசைப்பட வேண்டும். அதை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுகிறான். இன்பமும் துன்பமும் அந்தச் செயலின் இரண்டு பக்கங்கள் என்பதை அறியாமல் இருக்கிறான். துன்பம் இல்லாமல் இன்பத்தை மட்டும் வைத்துக் கொள்ள முடியும் என்று எண்ணுகிறான். மனித செயல்களைக் கட்டுப்படுத்தும் விதிகளைப் பற்றிய அறிவு அவனிடம் இல்லை. தான் செய்யும் தவறுகளுக்கும் தான் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் தொடர்பு ஏதேனும் இருக்குமா என்று ஒரு போதும் எண்ண மாட்டான். ஆனால் மற்றவர்கள் செய்யும் தவறுகளே தன் துன்பத்திற்குக் காரணம் என்று உறுதியாக எண்ணுவான் அல்லது விதி வலியது, அதை மாற்ற முடியாது என்று இருந்து விடுவான். அவன் மகிழ்ச்சியைத் தேடுகிறான். அவன் செய்யும் செயல்கள் இன்பத்தை,கொண்டாட்டத்தை வழங்கும் என்று உறுதியாக நம்பித் தான் அவற்றில் ஈடுபடுகிறான். ஆனால் அந்தச் செயல்களின் விளைவாக வரக் கூடிய துன்பம் அந்த இன்பத்திற்குள் ஒளிந்திருப்பதை அறியாமல் இருக்கிறான்.

 

தீய பழக்கம் ஒன்றிற்கு அடிமையான ஒரு மனிதனுடன் உரையாடிக் கொண்டு இருந்த போது அவன் கூறினான். ”இது தீயபழக்கம் என்று நான் அறிவேன். இது நன்மையை விடத் தீமையைத் தான் எனக்கு அதிகம் தருகிறது என்று எனக்குத் தெரியும்”, பின்பு “ஏன் அதை விட முயற்சிக்காமல் தொடர்கிறார்கள்” என்ற போது அவன் அளித்த பதில் ”அது இன்பமாக இருக்கிறது, நான் அதை விரும்புகிறேன்.”

இந்த மனிதன், உண்மையில் அந்தப் பழக்கம் தீயது என்பதை உணர்ந்திருக்கவில்லை. அது ஒரு தீய பழக்கம் என்று பிறர் கூறக் கேட்டிருக்கிறான். அவன் அதைத் தீய பழக்கம் என்று அறிந்துக் கொண்டுவிட்டதாகக் கருதுகிறான். ஆனால் உண்மையில் அதை நன்மையானதாக, தனக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகத் தான் கருதுகிறான். எனவே தொடர்ந்து கடைப்பிடிக்கிறான். ஒருவன் அனுபவத்தின் வாயிலாக ஒன்றைத் தவறு, தீங்கு என்று தெரிந்துக் கொண்டுவிட்டால் ;அதைச் செய்யும் ஒவ்வொரு முறையும் அவன் தன் உடலையோ அல்லது மனதையோ அல்லது இரண்டையும் பாழ்படுத்துகிறோம் என்னும் உணர்வு இருந்தால் ; அந்தச் செயலை பற்றிய ஒரு முழுத் தெளிவும் அதன் விரும்பத்தகாத விளைவுகளைக் குறித்தும் அறிந்திருந்தால்; அவனால் அதற்கு மேல் அந்தச் செயலை தொடர முடியாது என்பது மட்டுமல்ல, அதன் மேல் அவனுக்கு ஆசை கூட ஏற்படாது, அதுவரை ஒரு இன்ப கிளர்ச்சியை வழங்கக் கூடிய ஒன்றாக இருந்தது, இப்பொழுது வலி மிகுந்ததாக மாறிவிட்டது. எந்த மனிதனும் விஷம் மிகுந்த பாம்பை அது வண்ண மயமாக இருக்கிறது என்று தன் சட்டைப் பையில் போட்டுக் கொள்வது கிடையாது. காரணம் அதன் அழகான உடலில் கொடிய விஷத்தை உமிழும் நாக்கு இருக்கிறது என்பதை அறிவான். அதைப் போலவே தன் தவறான எண்ணங்களிலும், செயல்களிலும் ஒளிந்திருக்கும் துன்பத்தையும் வலியையும் உணர்ந்துவிட்டால், அவன் அதை எண்ணவும் செயல்படுத்தவும் மாட்டான். பேராசையுடன் அவற்றை எண்ணும் போதும், செயல்படுத்தும் போதும் அவனுக்குக் கிடைத்த உடனடி இன்பம் கூட இப்பொழுது இல்லை. அதன் வெளிப்புற கவர்ச்சியும் மறைந்துவிட்டது. அறியாமை நீங்கி அதன் உண்மை இயல்பை அறிந்துக் கொண்டு அதை உள்ளவாறு பார்க்கிறான்.

வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கும் இளைஞன் ஒருவன். அவன் தேவாலயம் ஒன்றின் உறுப்பினரும் கூட. தன்னார்வமாகச் சமய போதனைகளை வழங்கும் பொறுப்பையும் அவன் ஏற்று இருந்தான். அவன் பொய்யும் ஏமாற்றுதலும் வியாபாரத்தில் நிச்சயமாகத் தேவை. இல்லையென்றால், வியாபாரம் அடியோடு படுத்துவிடும் என்றான். அது தவறு என்று தனக்குத் தெரியும் , ஆனால் வியாபாரத்தில் இருக்கும் வரை; வேறு வழி இல்லை ,கடைப்பிடிக்கத் தான் வேண்டும் என்றான். அவனுடன்  உரையாடிக் கொண்டிருந்த போது  மேலும் அறிந்து கொண்டது என்ன என்றால்  , அவன் உண்மையையும் நேர்மையையும் இதுவரை அவன் முயற்சி செய்தும் பார்க்கவில்லை என்று. அந்த மேலான சிறந்த வழியை முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணக் கூட இல்லை. அவன் மிக உறுதியாக முடிவே கட்டிவிட்டான். அது ஒரு சிறந்த வழி அல்ல என்று. அதைக் கடைப்பிடித்தால் வியாபாரம் ஒடிந்துவிடுமா? இல்லையா? எனத் தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறான். இப்பொழுது, இந்த இளைஞன் பொய் என்பது தீங்கானது என்று உண்மையிலேயே அறிந்துள்ளானா? அவன் கொள்கையளவில் அதை அறிந்திருக்கிறான். ஆனால் ஆழமான கண்ணோட்டத்தில் பார்த்தால் அவன் பொய்யை தீங்கு என்று அறிந்திருக்கவில்லை. அவனிடம் பொய் என்பதைத் தீங்கானதாகக் கருத வேண்டும் என்று கற்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவன் மனதிலும் பதிந்துவிட்டது, இருந்தும் அந்தப் பொய் அவனுக்கு ஆதாயத்தையும், மகிழ்ச்சியையும், செல்வத்தையும் கொடுக்கக் கூடியது என்றும், நேர்மை அவனுக்கு இழப்பையும், வறுமையையும், துன்பங்களையும் தான் கொடுக்கும் என்று நம்புகிறான். ஒரே வார்த்தையில், அவன் தன் உள்ளத்தின் அடி ஆழத்தில் பொய் தான் சரியான பாதை, நோ்மை தவறான பாதை என்று கருதுகிறான். பொய் எதை எல்லாம் செய்யக் கூடிய தன்மை வாய்ந்தது என்ற அறிவு அவனிடம் இல்லை. பொய்யை கூறும் மறு கனமே, ஒருவனது நற்குணங்களில் ஏற்படுகின்ற இழப்பை, தன்மானத்தில் ஏற்படுகின்ற இழப்பை, ஆற்றலில், ஆளுமையில் பயனுள்ளவனாக இருப்பதில் ஏற்படுகின்ற இழப்பை, பேரருளின் இழப்பை அவன் அறிந்திருக்கவில்லை. அது எப்படி அவனது மதிப்பு குறைய வழி வகைச் செய்யும், பின்பு பொருள் இழப்பும் செல்வமும் இழக்க வேண்டி வரும் என்று அறியவில்லை. அத்தகைய மனிதன் பிறரது மகிழ்ச்சியைக் கருத்தில் கொள்ள ஆரம்பித்து;- தான் ஆசைப்படுகின்ற பிறருக்கு உரிமையான ஒன்றை அபகரிப்பதை விட , தான் அஞ்சுகின்ற அந்த  இழப்பை ஏற்றுக் கொள்வதே சரி என்று உணர்ந்து நேர்மை என்னும் அறநெறியைக் கடைப்பிடிக்கும் போது உண்மை அறிவு அவனுக்கு வரும். பொய்யின் அற்ப சுகங்களை விட நேர்மையின் பேரருளை அனுபவிப்பான். இத்தனை காலமும் மற்றவர்களை விடத் தன்னைத் தான் ஏமாற்றியும் வஞ்சித்தும் கொண்டு இருந்ததை, சுயமாயையில், இருண்ட அறியாமையில் வாழ்ந்ததை அவன் நினைத்துப் பார்ப்பான்.

எல்லாத் தீங்கும், பாவமும் அறியாமையின் நிலை தான் என்ற பேருண்மையை உண்மையைத் தேடுபவர்களுக்கு ( ஆனால் சில பொழுது சந்தேகமும், குழப்பமும் அடைபவர்களுக்கு ) சித்தரிக்கவே ,  பொதுவாக செய்யப்படும்  இரண்டு தவறுகள் இங்கே எடுது்துக் காட்டப்பட்டதற்குக் காரணம். எனவே தீங்கையும், பாவங்களையும், வெறுப்புணர்வோடு அணுகாமல் உள்அன்போடு அணுக வேண்டும்.

தீய பழக்கங்களும், பொய் கூறுவதும் எப்படி அறியாமையால் செயல்படுத்தப்படுகிறதோ அப்படித் தான் மற்ற இச்சை, காழ்ப்புணர்வு, தூற்றுவது, பொறாமை, ஆணவம், தற்பெருமை, தன் முனைப்பு எனச் சுயநலத்தின் எல்லா வடிவங்களில் ஆன பாவங்களும் அறியாமையால் செயல்படுத்தப்படுகின்றன. அது மெய்யறிவை மறுத்து உண்மையின் ஒளி உள்ளத்தில் புக வழி செய்யாமல் ஆன்மீக இருட்டில் வாழும் நிலையாகும்.

இவ்வாறு தன் உள்ளத்திலிருந்து தீங்குகளை விலக்கும் போது , தீங்கின் இயல்புகளை முழுதாக உணர்ந்துக் கொள்ளும் போது, வெறும் நம்பிக்கை உறைந்து கொண்டிருந்த இடத்தில் அனுபவத்தால் பெற்ற அறிவு வந்து குடிபுகும் போது, அந்தத் தீங்கை இனிமேலும் வெறுப்புடன் கண்டிக்க முடியாது. வன்முறையுடன் எதிர்க்க முடியாது. தீங்கு செய்பவன் மென்மையான இரக்கத்துடன் எண்ணப்படுகிறான்.

தீங்கின் இன்னொரு கூறு எது என்று விரிவாக ஆராய வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் தன் செயல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையிருக்கிறது. அது தனி மனித உரிமை. மற்றவர்களது செயல்பாடுகளில் தீங்கை காண்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் . அவற்றில் ஒரு காரணம் அவர்களையும் தன்னைப் போலவே மாற்ற வேண்டும் அல்லது அவர்களும் தன்னைப் போலவே சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும் என விரும்புவதாகும். பொதுவாக, மக்கள் அனைவரும் சிக்கி உழலும் மாயை ஒன்று எது என்றால், அது தாங்கள் நம்புவதும், எண்ணுவதும், செய்வதும் தான் சரி,மற்றவை எல்லாம் தீங்கானவை. எனவே அவற்றை ஆற்றலோடு கண்டிக்கவும், எதிர்க்கவும் வேண்டும் என்று. இந்த மாயையால் தான் எல்லா வகையான அடக்குமுறைகளும் கொடுமைக்கு உள்ளாவதும் நிகழ்கின்றன. கடவுளை மறுப்பவர்கள் அனைவரையும், கடவுளை நம்பாதவர்கள் அனைவரையும் ,  தீங்கானவர்களாக- தீமைக்குத் துணை நிற்பவர்களாகக் கருதும் சில கிறிஸ்த்துவர்கள் இருக்கிறார்கள். எல்லாக் கிறிஸ்த்துவர்களும் தங்கள் பொய்யான கொள்கை, கோட்பாடுகளால் ,மூட நம்பிக்கைகளால் மனித இனத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகக் நினைக்கும் கடவுளை மறுப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். உண்மை எது என்றால், தீங்கானவன் கிறிஸ்த்துவனும் அல்ல, கடவுள் மறுப்பாளனும் அல்ல. அவர்கள் தீமைக்குத் துணை நிற்பவர்களும் அல்ல. தங்களுக்கு உகந்த வழியை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். தங்களுக்குச் சரி என்று படுவதை அவர்கள் செய்கிறார்கள்.

பல்வேறுமதங்களைப்பின்பற்றுபவர்கள்உலகெங்கும்ஒருவரைஒருவர்தீங்கானவர்கள், தவறானவர்கள்என்று கண்டனத்தில்ஈடுபடுகிறார்கள். தங்களைநல்லவர்கள், சரியானவர்கள்என்றுகருதுகிறார்கள். இதைமனிதன் ஆழமாகவும்அமைதியாகவும்சிந்திக்கட்டும். எல்லாத்தீங்கும்வெறும்அறியாமைதான். ஆன்மீகஒளிஇல்லாமை தான் என்றுவிளங்கிக்கொள்ளஅதுஉதவும். இந்தநிகழ்வுகளைஉளப்பூர்வமாகஎண்ணிபார்த்துச்தியானித்தால்அவன்உள்ளத்தில்பேரிரக்கம்சுரக்கும். உள்ளுணர்வும்அன்பும்பெருகும்.மனம் பரந்தது ஆகும்.

 

மெய்யறிவு பெற்ற நல்ல மனிதன் எல்லோரிடமும் நன்மையைக் காண்பான், தீங்கை எவரிடமும் காண மாட்டான். மற்றவர்களும் தன்னைப் போல் தான் சிந்தித்து செயல்பட வேண்டும் என்னும் முட்டாள்தனத்தை அவன் விலக்கிவிட்டான். மனிதர்கள் அவர்கள் ஆன்மீக படிநிலையில் வெவ்வேறு நிலைகளில் இருக்கிறார்கள். ஒரே இடத்தில் அல்ல. எனவே, அதற்கு ஏற்ப அவர்கள் நிச்சயமாக வேறு விதமாகத் தான் சிந்தித்துச் செயல்படுவார்கள் என்பதை அறிகிறான். காழ்ப்புணர்வு, கண்டனம், அகம்பாவம், (முன் அபிப்பிராயத்தின் காரணமாக ஒருவரை வெறுக்கும்) மூடிய மனது ஆகியவற்றைத் துறந்து மெய்யறிவு பெறுகிறான். மனமாசின்மை, அன்பு, இரக்கம், கனிவு, பொறுமை, பணிவு ,சுயநலமின்மை ஆகியவை எல்லாம் ஒளியின் மெய்யறிவின் வெளிப்பாடு. மனமாசு, காழ்ப்புணர்வு, கொடூரம்,வெறியுணர்வு, கோபம், ஆனவம், சுயநலம் ஆகியவை எல்லாம் இருளின், அறியாமையின் வெளிப்பாடு என்று உணர்கிறான். மக்கள் ஒளி வெளிச்சத்தில் வாழ்கிறார்களோ அல்லது இருட்டில் வாழ்கிறார்களோ, எப்போதும் அவர்கள் சரி என்று நினைப்பதை , அவர்களுக்கு சரி என்று படுவதை செய்கிறார்கள்.  அவர்கள் வாழ்வில் நிலவும் ஒளியின் அளவும் இருட்டின் அளவும் அவர்களுக்கு வழிகாட்டி செயல்பட வைக்கிறது. மெய்யறிவு பெற்றவன் இதைப் புரிந்துக்கொள்கிறான்.புரிந்துக்கொண்டு கசப்புணர்வுகளையும், குற்றம் சாட்டுதலையும் விட்டுவிடுகிறான்.

ஒவ்வொரு மனிதனும் அவனது இயல்புக்கு ஏற்றவாறு, எது சரி, எது தவறு என்று அவனுக்குள்ள பகுத்தறியும் திறனைப் பயன்படுத்தியவாறே வாழ்கிறான். அதன் விளைவாக அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் உறுதியான அவனுள் புகுகின்றன. எல்லா உயிர்களும் ஒரு தலையாய உரிமையை பெற்றிருக்கின்றன. அவை எண்ணுவதை,செயல்படுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை தான் அது. மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய உடனடி மகிழ்ச்சியை மட்டும் நினைத்துப் பார்த்து ஒருவன் சுயநலமாகச் சிந்தித்துச் செயல்பட்டால் காரணங்களும் அதற்கேற்ற விளைவுகளும் என்ற இயற்கை விதியின் கீழ் அவனுக்குத் தப்பாமல் ஏற்படும் துன்பங்கள் அவனை ஒரு கனம் நிறுத்தி சிந்திக்க வைக்கும்.ஒரு மேலான வழியை அவன் தேடும்படி செய்யும். ஒருவனது சொந்த அனுபவத்தை விடச் வேறு சிறந்த ஆசான் கிடையாது. அறியாமையில் தங்கள் மேல் தாங்களே வரவழைத்துக் கொண்ட தண்டனையை விட ஒருவனின் தவறுகளைத் திருத்தும், தூய்மையாக்கும் வேறு தண்டனை கிடையாது. சுயநலம் மிக்க மனிதன் அறியாமையில் சிக்கி இருக்கிறான். அவன் தன் வழியைத் தேர்ந்தெடுக்கிறான். ஆனால் அந்த வழியோ துன்பத்திற்கு இட்டுச் செல்லும் வழியாகும். துன்பத்தின் வாயிலாக அவன் அறிவைப் பெற்று பின்பு ஆனந்தமாகிறான். நற்குணம் மிக்க மனிதன் மெய்யறிவில் வாழ்கிறான். அவனும் தன் வழியைத் தேர்ந்தெடுக்கிறான்.ஆனால் அறியாமையையும், துன்பங்களையும் கடந்த அறிவின் முழு வெளிச்சத்தில் தேர்ந்தெடுத்து ஆனந்தத்தை அடையும் வழியை அடைகிறான்.

”தீங்கைக் காணாமல் இருப்பது” என்பதை மனிதன் எப்போது புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறான் என்றால் அடுத்தவர்களைப் பற்றி நினைக்கும் போது தன் சொந்த விருப்பங்களை நீக்கி, அவர்களை அவர்களது நிலையில் இருந்தே நோக்கி, அவர்களது செயல்களைத் தன்னுடைய கண்ணோட்டத்தில் காணாமல் அவர்களது கண்ணோட்டத்தில் காணும் போது தான். மக்கள் எவை எல்லாம் சரி, தவறு என்பதற்கு  அவர்களாகவே சில வரைமுறைகளை அமைத்துக் கொண்டு அந்த வரைமுறைகளை எல்லோரும் பின்பற்றவேண்டும் என்று துடிக்கின்றனர். இதனால் தான் அவர்கள் மற்றவரிடம் தீங்கை காண்கின்றனர். ஒரு மனிதன் எப்போது சரியான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறான் என்றால், அவன் எனது கண்ணோட்டத்தில் பார்க்கப்படாமல், உங்களது கண்ணோட்டத்தில் பார்க்கப்படாமல், அவனது கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படும் போதுதான். அவ்வாறு அவனைக் கண்டு தீர்ப்பு வழங்குவதற்குப் பெயர் தீர்ப்பு அல்ல. பேரன்பே. விருப்புவெறுப்பற்ற பற்றில்லாத அன்பின் கண்களால் காணும் போது நாம் மெய்யறிவு, மெய் ஞானம் பெறுகிறோம். மற்றவர்களை மிகைப்படுத்தியோ, சிறுமைப்படுத்தியோ காணாமல் உள்ளவாறே காண்கிறோம். ”மற்றவர்களைப் பற்றித் தீர்ப்புக் கூறுவதற்கு நான் யார்? ”நான் ஒரு பாவமும் களங்கமும் அற்றவனா? மக்களை வரிசைப்படுத்தி அவர்கள் இந்தத் தவறை,தீங்கை செய்து இருக்கிறார்கள் என்று கூறுவதற்கு, மற்ற மனிதர்களைப் பற்றித் தீர்ப்பு வழங்கும் நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்து கொள்வதற்கு நினைக்கும் முன் முதலில் என் தவறுகளைத் நான் திருத்திக் கொள்ள வேண்டும். நான் பணிவு பெற வேண்டும்” என்று எவன் தன் உள்ளத்தில் கூறுகிறானோ அவன் பற்றில்லாத பேரன்பு நிலையை நெருங்குகிறான்.

பண்டைய காலத்தில் ஒரு விலைமகள் அவள் செய்த குற்றங்களுக்காக அவள் மீது விதிக்கப்பட்டிருந்த கல்லெறியப்படும் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு பலராலும் போற்றப்படும் ஒருவர் முன்பு அழைத்து வரப்பட்டாள். அப்போது அவர் ”யார் இதுவரை எந்தக் குற்றமும் புரிந்தது இல்லையோ அவர் முதல் கல்லை எறியட்டும்” என்றார். அவ்வாறு கூறிய அவர் களங்கமற்றவர் என்றாலும், அவர் எந்தக் கல்லையும் தொடவில்லை. எந்த கசப்பான தீர்ப்பையும் வழங்கவில்லை. ஆனால் அளவில்லாத கனிவோடும் இரக்கத்தோடும் ”நானும் உன்னைக் கண்டிக்கவில்லை.எந்தப் பாவமும் இனிமேல் புரியாதே” என்று மட்டும் கூறினார்.

தூய்மையான இதயத்தில் எந்தப் பாகுபாடையும் , வெறுப்பையும் யார் மீதும் கொள்வதற்கு இடமில்லை. காரணம் அது மென்மையான இரக்கத்தாலும் கனிவான பேரன்பாலும் நிரம்பி வழிகிறது. தூய்மையான இதயம் எந்தத் தீங்கையும் காணாது. மக்கள் பிறரிடம் எந்தத் தீங்கையும் காணாமல் இருக்கும் போது தான் பாவத்திலிருந்தும், துக்கத்திலிருந்தும், துன்பத்திலிருந்து விடுபடுவார்கள்.

எந்த மனிதனும் தன்னுள் எந்தத் தீங்கையும் காணமாட்டான். தனது செயல்களிலும் எந்தத் தீங்கையும் காணமாட்டான். மெய்யறிவையும் ஞானமும் பெற்று இருப்பவனால் மட்டுமே தன்னுள்ளும், தனது செயல்களிலும் இருக்கும் தீங்கை காணமுடியும். அவ்வாறு கண்டு அறிந்த பின் அச்செயல்களைக் கைவிட்டு விடுவான். மற்ற ஒவ்வொரு மனிதனும் தனது செயல்களில் இருக்கும் நியாயத்தைக் கற்பிப்பான். மற்றவர்கள் அவனது செயல்களில் எவ்வளவு தான் தீமையைக் கண்டாலும், அவன் எண்ணத்தில் அதை நன்மையானதாகக் கருதியே அதைச் செய்கிறான். அவ்வாறு அதை அவன் நன்மையானதாகக் கருதவில்லை என்றால் அவன் அந்தச் செயலை செய்யமாட்டான். அவனால் அதை செய்யவும் முடியாது. கோபம் கொள்பவன் தன் கோபத்தை எப்போதும் நியாயப்படுத்துகிறான். பேராசை கொள்பவன் அவ்வாறு ஏன் பேராசைக் கொள்கிறான் என்று ஒரு காரணத்தைக் கூறுகிறான். தூய்மையற்றவன் தன் இச்சைகளைக் காப்பாற்றுகிறான். பொய் கூறுபவன் தான் கூறும் பொய்யை உயர்வாகக் கருதுகிறான். புறம் சொல்பவன் தனக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி அவதூறு பரப்புவதை ஒரு நற்செயலாகக் கருதுகிறான். அவன் அவர்களது தீய இயல்புகளைக் கூறி மற்றவர்களை எச்சரிக்கை செய்து காப்பதாகக் கருதுகிறான். திருடன் திருடுவதே செல்வத்திற்கும் மகிழ்ச்சிக்குமான குறுகிய வழி என்று நினைக்கிறான். கொலைக்காரனும் தன் கொலை செயலில் ஒரு நியாயத்தைக் கூறுகிறான்.

ஒவ்வொரு மனிதனது செயல்களும் அவனுள் இருக்கும் ஒளியின் அளவையோ இருளின் அளவையோ பொறுத்தே அமைகின்றன. எந்த மனிதனாலும் அவனது உண்மை நிலையை மிஞ்சி வாழமுடியாது. தன் அறிவைக் கடந்து இருப்பவற்றைச் செயல்படுத்த முடியாது. ஆனால் அவன் தன் நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். உள்ளத்தில் ஒளியைப் பெற முடியும். அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். கோபக்காரன் கோபத்தில் ஈடுபட்டு பிறரை அவமதிப்பதற்குக் காரணம் அவனது அறிவானது பொறுமையைப் பற்றி இன்னும் முழுதாக உணரவில்லை. கனிவான தன்மையைக் கடைப்பிடிக்காததால் அவன் அதைப் புரிந்து  கொள்ளாமல் ,தேர்ந்தெடுக்காமல் வாழ்கிறான். பொய் கூறுபவனும், புறம் சொல்பவனும், திருடுபவனும் இதே நிலைமையில் தான் இருக்கின்றனர். அவர்கள் மனதின் இருட்டில் வாழ்கின்றனர். ஒருவனது பக்குவமற்ற அறிவிற்கும் அனுபவத்திற்கும் உட்பட்டே அவனது செயல்களும் இருக்கின்றன. உயர்வான தன்மைகளை அனுபவிக்காததால் அவனுக்கு அதைப் பற்றிய போதிய அறிவு இல்லை. அவனைப் பொறுத்தவரை அப்படி உயர்வான தன்மைகள் என ஏதும் இல்லை என்று நினைக்கிறான். ”ஒளி வெள்ளம் இருட்டில் பாயும். ஆனால் இருட்டால் அதைப் பெற்றுக் கொண்டு வாழ முடியாது.”. அதைப் போல இருட்டில் வாழ்பவன் ஒளி பொருந்திய நிலையில் வாழ்பவனது நிலையை இருட்டில் வாழ்ந்தவாறு உணர முடியாது.

தன்னைத் துரத்தும் துன்பங்களிலிருந்து தப்பிக்க முடியாமல் ஓடிக் களைத்து இறுதியில் மனிதன் தன்னைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு தன்னுடைய கோபமோ அல்லது பொய்யோ அல்லது இதுவரை தான் வாழ்ந்து வரும் வாழ்வின் அறியாமை நிலையோ தான், துக்கத்தையும் துயரத்தையும் தருகின்றன என்று அவற்றைக் கைவிட்டு அதற்கு மாறான சிறந்த ஒளிமிக்க வழியைத் தேடிக் காண்கிறான். அந்த மேன்மையான வழியில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ளும் போது அவன் இரு நிலைகளைப் பற்றியும் முழுமையான அறிவைப் பெறுகிறான். அப்பொழுது அவன் , இதற்கு முன்பு எத்தகைய அடர்ந்த இருளில் வாழ்ந்திருந்தோம் என்று உணர்கிறான். நன்மை, தீமை பற்றி இந்த அனுபவ அறிவே மெய்யறிவாகும்.

எப்போது ஒரு மனிதன் பிறரை காணும் போது தன் நிலையில் இருந்து காணாமல் அவர்களது நிலையில் தான் இருப்பதாக நினைத்துக் காண்கிறானோ அப்போது அவன் பிறர் மீது தீங்கை காண்பதை விட்டுவிடுவான். நன்மை, தீமையை வரையறை செய்வது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதை அளக்கும் அளவுகோலும் மாறுபடும் என்று புரிந்து கொள்கிறான். எந்தத் தீங்கும் மிக இழிவானது அல்ல, அதைச் சிலர் நன்மையாகக் கருதுவார்கள். எந்த நன்மையும் மிக உயர்வானது அல்ல, அதைச் சிலர் தீமையாகக் கருதுவார்கள். தனக்கு நன்மையானதை நன்மையாகவும் தனக்குத் தீமையானதை தீமையாகவும் மனிதன் கருதுவான்.

மனதில் ஈரம் கொண்டு தன் மன மாசு அறுத்துக் கொள்ளும் தூய்மையான மனிதன், பிறர் மீது தீங்கை காண்பதை நிறுத்திவிடுவான். அவன் பிறரை தன் வழிக்குக் கொண்டு வரும் பேராவலை தன் கருத்தை ஏற்க வேண்டும் என்னும் விருப்பத்தைக் கொள்ள மாட்டான். ஆனால் அவர்களுக்கு அவர்கள் இருக்கும் நிலையிலேயே உதவுவான். தான் கூறும் கருத்தை மறுக்காமல் ஏற்பதை விட அவர்களுக்குள் ஏற்படும் பரந்த அனுபவம் தான் அவர்களைப் பேரருளுக்கும் உயர்அறிவிற்கும் அழைத்துச் செல்லும், என அறிந்துள்ளான்.

மக்கள் தங்களுடன் வேறுபடுபவர்கள் மீது தீங்கை காண்கின்றனர். தங்களுடன் ஒத்துப் போகிறவர்கள் மீது நன்மையைக் காண்கின்றனர். தன்னைப் பெரிதும் விரும்புபவன், தன் கருத்துக்களைப் பாதுகாக்க முற்படுபவன் தன்னுடன் ஒத்துப்போகிறவர்கள் எல்லோரையும் விரும்புவான். ஒத்துப் போகாதவர்கள் எல்லோரையும் வெறுப்பான். உங்களை விரும்புபவர்களை நீங்கள் விரும்புவதில் என்ன பெரும் பரிசை எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் எதிரிகளை விரும்புங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள். ஆனவமும் தற்பெருமையும் மக்களின் கண்களை மூடுகின்றன. இருவேறு மதக் கருத்துக்கள் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்கள். எதிர் எதிரான அரசியல் கருத்து உடையவர்கள் ஒருவரை ஒருவர் கண்டித்துச் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஒரு தலை சார்புடையவன் எல்லோரையும் தன் அளவுகோலை மட்டும் கொண்டு அளந்து எல்லோரையும் மதிப்பிடுகிறான். தான் தான் சரி, மற்றவர்கள் தவறு என்பதில் அவனுக்குத் துளியும் சந்தேகமில்லை. எனவே அவன் அவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வர, சரியான பாதைக்குக் கொண்டுவர அவர்கள் மேல் கொடிய தண்டனைகள் கட்டாயம் சுமத்த வேண்டும் என்று எண்ணுகிறான்.அவர்களது சுய பரிசோதனையும் விருப்பமும் இன்றித் தான் சரி என்று நினைக்கும் வழிக்கு அவர்களைக் கொண்டு வர முயற்சிக்கிறான்.

மக்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கும், கண்டிப்பதற்கும், எதிர்ப்பதற்கும், துன்புறுத்துவதற்கும் காரணம் அவர்கள் இயற்கையான இயல்பாலேயே தீங்கானவர்கள், வேண்டும் என்றே தீய செயல்களைச் செய்பவர்கள் என்பது அல்ல. அவர்களுக்குள் அவர்கள் செய்வது சரி என்ற மன நிலையில் தான் செயல்படுகிறார்கள். உண்மையின் முழு வெளிச்சத்தில் தங்கள் செயல்களைக் கண்டால் தவறு என்று உணர்வார்கள். எல்லா மனிதர்களும் அவர்களின் இயற்கையான இயல்பால் நல்லவர்கள் தான். சிலர் மற்றவர்களை விட ஞானமும் அனுபவமும் மிக்கவர்களாய் இருக்கிறார்கள்.

D,E என்று பெயர் அளிக்கப்பட்டுள்ள இரு மனிதர்கள் இடையே சமீபத்தில் நடந்த உரையாடலின் சாரம்சம் இங்கே கீழே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் குறிப்பிடும் X என்ற மனிதர் நாடறிந்த அரசியல்வாதி.

 

E: ஒவ்வொருமனிதனும்தன்எண்ணங்கள், செயல்களுக்கு

ஏற்றப்பயனைஅறுவடைசெய்கிறான். அவன்செய்த

தவறுகளுக்குத் தண்டனையை அனுபவிக்கிறான்.

 

D: அதுஉண்மைஎன்றால், எந்தமனிதனும்தான்செய்த

தவறுகளிலிருந்துதப்பமுடியாதுஎன்றால்எத்தகையகொடிய

சூழ்நிலையைநம்மைஆள்பவர்கள்தங்களுக்குஉருவாக்கிக்

கொண்டுள்ளார்கள்.

 

E: ஒருமனிதன்பதவியில், ஆட்சிஅதிகாரத்தில்இருக்கின்றானோ

இல்லையோஅவன்அறியாமையிலும்பாவத்திலும்உழலும்

வரை, அவன்துன்பத்தையும்துக்கத்தையும்அறுவடை

செய்யத் தான் வேண்டும் .

 

D: உதாரணத்திற்குX யைஎடுத்துக்கொள்ளுங்கள். அவர்தீமையே

உருவானவராகஇருக்கிறார். முழுக்கமுழுக்கச்சுயநலமும்பதவி

ஆசையும்கொண்டவராகஇருக்கிறார். அத்தகைய

கொள்கையற்ற மனிதருக்கு பெரும் தண்டனைக் காத்திருக்கிறது.

 

E: அவர் அந்த அளவு தீங்கே உருவானவர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

 

D: அவரதுசெயல்களால்,அந்தச்செயல்களின்விளைவுகளால்.ஒருவன்

தீங்கு செய்வதைப் பார்க்கும் போது அவன் தீங்கானவன் என்று நான் அறிவேன். X யை போன்ற தகுதியற்றவர்களை நினைக்கும் போது என்னுள் வெறுப்பு பொங்கி எழுகிறது. பலருக்குத் தீங்கிழைக்கும் அவரைப் போன்றவர்கள் அதிகாரம் உள்ள பெரும்பதவியில் இருப்பதைப் பார்க்கும் போது நமக்கு மேல் இருப்பதாகக் கூறப்படும் அந்தச் சக்தியை நான் சந்தேகப்படுகிறேன்.

 

E: அப்படி என்ன அவர் தீங்கு செய்கிறார்?

 

D: அவரது கொள்கைகள்எல்லாமேதீமைதான். அவர்பதவியில்

நீடித்தால் நாடே கெட்டு விடும்.

 

E: நீங்கள் நினைப்பது போலவே பெரும் எண்ணிக்கையாகப் உள்ள பலரும் நினைக்கிறார்கள் என்றாலும், அந்த எண்ணிக்கைக்குச் சற்றும் குறைவில்லாத பலர் , அறிவில் உங்களுக்கு நிகரானவர்கள் தான், அவரை விரும்பி ஆதரிக்கிறார்கள். அவரை நல்லவராக, திறமையானவராகக் கருதுகிறார்கள். அவர் எடுக்கும் முடிவுகளால் நன்மை விளையும், நாடு முன்னேறும் என்று நினைக்கிறார்கள். அந்தப் பதவியை அவருக்கு அளித்துள்ள அந்த மக்களும் தீங்கானவர்களா?

 

D: அவர்கள்ஏமாற்றப்பட்டுத்தவறாகவழிநடத்தப்படுகிறார்கள். X ன்

தீங்கை இது இன்னும் பன் மடங்காக்குகிறது. தன் சுயநலத்திற்காகத் தன் திறமைகளை வெற்றிகரமாகப் பயன்படுத்தி இத்தனை பேரை ஏமாற்றும் திறன் கொண்டவர். அவரை நான் வெறுக்கிறேன்.

 

E: நீங்களும்  ஏமாறி இருப்பதாக கருதலாமா?

 

D: எந்த வகையில்?

E: வெறுப்புஎன்பதுதெளிவாகக்காணவிடாதஒருசுயமாயை

நிலைதான். அன்பு என்பது தெளிவாகக் காணச் செய்யும் நிலை.

ஒருவன்வெறுப்பைநீக்கிஅன்பைகடைப்பிடிக்காத வரை

அவனால்தன்நிலையையும்சரி, மற்றவர்நிலையையும்

சரி, தெளிவாகக் காணமுடியாது.

 

D: இது கேட்பதற்கு மிக அழகாக இருக்கிறது. ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராது. மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும் ஒருவனை, மற்றவர்களை ஏமாற்றி வழி நடத்தும் ஒருவனைக் காணும்போது, நான் அவனை வெறுக்கத் தான் வேண்டும். அவ்வாறு வெறுப்பது தான் சரியும் கூட. X –ற்கு மனசாட்சி என்பது துளியும் இல்லை.

 

E: நீங்கள் கூறுவது போலவே . X – இருக்கின்றானோ இல்லையோ,

ஒரு பேச்சிற்கு, நீங்கள் கூறுவது போலவே அவன் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படி என்றாலும், அவனைக்   கண்டிப்பதற்கு பதில் அவன் மேல் அனுதாபம் தான் கொள்ள வேண்டும்.

 

D: ஏன் அவன் மேல் அனுதாபம் கொள்ள வேண்டும்?

E: நீங்கள் அவனுக்கு மனசாட்சி துளியுமில்லை என்கிறீர்கள்!

D: ஆமாம். அப்படித் தான் கூறினேன்.

E: அப்படி என்றால் அவன் மன அளவில் ஊனம் உடையவன்.பார்வை  அற்றவர்களைப்  பார்க்க முடியாததால், வாய் பேச  முடியாதவர்களை பேசாததால், செவி ஊனமடைந்தவர்களை கேட்க முடியாததால் வெறுப்பீர்களா? கப்பல் செல்லும் திசையை திருப்பும் துடுப்போ அல்லது திசைக் காட்டியோ தொலைந்து இருந்து ,கப்பல் பாறைகளை மோதியதற்கு மாலுமியைக் குற்றம் சொல்வீர்களா? உயிரிழப்பிற்கு அவர் தான் காரணம் என்று சொல்வீர்களா? மனசாட்சி இல்லாதவன் என்றால் அறநெறிகளை உணரும் உள்ளுணர்வு அற்றவன், அவனது சுயநலம் எல்லாம் அவனுக்கு நியாயமாகவே தோன்றும். X – உங்களைப் பொறுத்தவரை தீங்கானவன். ஆனால் அவனைப் பொறுத்தவரை அவன் தீங்கானவனா?. அவன் தன் செயல்களை, நடவடிக்கைகளை தீங்கானவையாக நினைக்கின்றானா?

 

D: அவன் தன்னைத் தீங்கானவனாக நினைக்கின்றானோ, இல்லையோ?

அவன் தீங்கானவன் தான்.

 

E: நீங்கள் X ன் மீது கொண்டுள்ள வெறுப்பால் நான் உங்களை தீங்கானவன் என்று நினைத்தால் அது சரியா?

D: அது சரியில்லை.

 

E:ஏன் நீங்கள் ஒருவனை வெறுப்பதை நான் ஏன்  தீங்கானதாக  கருதக் கூடாது?

 

D: ஏன் கருதக் கூடாது என்றால் தீமையை வெறுப்பது ஒரு நியாயமான செயல். அவன் மீது நான் கொள்ளும் வெறுப்பில் ஒரு நியாயம் இருக்கிறது.

அது ஒரு நியாயமான கோபம்.

 

E: நான் உங்களைத் தீங்கானவராகக் கருதினால் அது தவறு. காரணம் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்கிறீர்கள். ஒரு மனிதனாக, ஒரு குடிமகனாக X -யை வெறுப்பதை உங்களின் ஒரு கடமையாகக் கருதுகிறீர்கள். இருந்தாலும் X -யை வெறுப்பதை விட ஒரு மேலான வழி இருக்கிறது. அந்த மேலான வழி பற்றிய அறிவு தான் உங்களைப் போல் நானும் X – ன் மீது வெறுப்பு கொள்வதைக்  தடுக்கின்றது. அவனது செயல்கள் எவ்வளவு தான் தவறானவையாக எனக்குத் தோன்றினாலும் அவனுக்கு அவை தவறானவையாக இல்லை. அவனது ஆதரவாளர்களுக்கும் அவை தவறானவையாக இல்லை. மேலும் எல்லா மனிதர்களும் அவர்கள் விதைத்ததை அறுவடை செய்வார்கள்.

 

D: நீங்கள் குறிப்பிடும் அந்த மேலான வழி எது?

 

E: அதுதான் அன்பின் வழி? பிறரைத் தீமையானவர்கள் என்று கருதாமல் இருப்பது. அவ்வாறு கருதாமல் இருப்பது ஒரு அமைதியான உள்ளத்தின் பேரருள் நிலையாகும்.

D: பிறர் செய்யும் தீமையை அறிந்து கொண்ட பின்னும் அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் இருக்கும் நிலையை மனிதன் அடைய முடியும் என்று சொல்கிறீர்களா?

 

E: நான் அவ்வாறு சொல்லவில்லை. ஒருவன் பிறரை தீங்கானவர்கள் என்று கருதும் வரை அவனுக்கு அவர்கள் மேல் கோபம் வரவே செய்யும். நான் கூறுவது என்னவென்றால்  ஒரு சாந்தமான உள் உணர்வும் மாசில்லாத அன்பும் தவழும் ஒரு மனநிலையை ஒருவனால் கொள்ள முடியும். அந்த நிலையில் அவன் பிறர் மீது தீங்கைப் காணாமல் இருப்பதால் அவனுக்கு அவர்கள் மேல் கோபம் வராது.அவன் மக்களின் பல்வேறு இயல்புகளைப் புரிந்துக் கொள்வான். அதன் காரணமாகவே அவர்கள் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்று விளங்கிக் கொள்வான். தங்கள் எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ற விளைவுகளை அறுவடை செய்வார்கள்.செய்த நன்மைக்காக மகிழ்ச்சியான கதிரை , செய்த தீமைக்காக துன்பமான புதரை அறுவடை செய்யப்போகிறார்கள் எனப் புரிந்துக் கொள்வான். அத்தகைய நிலையை அடைந்த மனிதன் எல்லோரையும் அன்போடும், இரக்கத்தோடும் காண்பான்.

 

D: நீங்கள் சித்தரிக்கும் இந்த நிலை மிக உயர்வான ஒன்றுதான். அது மிகப் புனிதமான அழகான ஒன்று தான்  என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் என்னால் இந்த நிலையை அடையமுடியாது.X–யை போன்ற ஒருவனை வெறுக்க முடியாத நிலையை அடைய வேண்டும் என்று நான் வேண்டவுமில்லை. அவனைப் போன்றவனை வெறுத்தே ஆகவேண்டும் என் நினைக்கிறேன்.

இந்த உரையாடலிருந்து D தன் வெறுப்புணர்வை நன்மையானதாகவே, தேவையானதாகவே கருதுகிறான். அது போன்று தான் எல்லா மனிதர்களும். தாங்கள் செய்வது, செய்யப் பட வேண்டிய ஒன்று தான் என்று கருதுகின்றனர். அவர்கள் நம்புவதைப் பழக்கமாகக் கடைபிடிப்பார்கள். நம்பிக்கை இழந்துவிட்டால் கடைப்பிடிக்க மாட்டார்கள். D – யை போன்றே எல்லாருக்கும் தனிப்பட்ட உரிமையிருக்கிறது. ஒருவனுக்கு இன்னொருவனை வெறுப்பதற்கு உரிமையிருக்கிறது. அந்த வெறுப்பினால் அவனுக்குத் துக்கமும் மன உறுத்தலும் பெருகினால், தன் வெறுப்பு எவ்வளவு தவறானது, முட்டாள்தனமானது, கண்மூடித் தனமானது என்று புரிந்துக் கொள்வான். அந்த வெறுப்பை கடைப் பிடித்துத் தன்னைத் தானே எவ்வளவு காயப்படுத்திக் கொள்கிறான் என்று உணர்ந்துக் கொள்வான். அது வரை அந்த வெறுப்பை அவன்  கைவிட மாட்டான்.

 

சிறந்த ஆசான் ஒருவரி்டம் அவரது சீடன் ஒருவன், நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள வேறுப்பாட்டை விளக்கும்படி வேண்டினான். ஆசான் தன் கைவிரல்கள் தரையைச் சுட்டிக் காட்டியபடி ,கேட்டார்.

”இப்பொழுது என் கை எந்தப் பக்கம் சுட்டிக் காட்டுகிறது?”

சீடன் கூறினான், அது கீழ் நோக்கி சுட்டிக் காட்டுகின்றது.

பின்பு மேல் நோக்கி கையைத் திருப்பி மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்.

சீடன் அப்போது அது மேல் நோக்கி சுட்டிக் காட்டுவதாகக் கூறினான்.

அவர் அப்பொழுது ,இது தான் நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள வேறுபாடு என்றார்.

 

இந்த எளிய விளக்கத்தின் வாயிலாகத் தீமை என்பது தவறான திசையில் செலுத்தப்படும் ஆற்றல். நன்மை என்பது சரியான திசையில் செல்லும் ஆற்றல். தீமையானவன் என்று கூறப்படுபவன் தன் செயல்களின் திசையை மட்டும் திருப்பிக் கொண்டால் நன்மையானவாக மாறி விடுவான் என்கிறார்.

தீங்கின் உண்மை இயல்புகளைப் புரிந்து கொள்ள ஒருவன் நன்மையைக் கடைப்பிடித்து வாழ்ந்து , பிறரிடம் தீமையைக் காண்பதிலிருந்து விடுபட வேண்டும். எவன் பிறரிடம் தீமையைக் காண்பதை விடுத்து தன் உள்ளத்தை இன்னும் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விழைகிறானோ அவன் பேரருள் பெற்றவன். அவனுக்கு தீமையே புலப்படாத அளவிற்கு அவனது இதய கண்கள் மிகத் தூயதாக ஒரு நாள் மாறிவிடும்.

தீமையின் இயல்புகளைப் புரிந்து கொண்ட பின், மனிதன் எதைச் செய்யவேண்டும்? எது நன்மையோ அதை மட்டும் செய்து வாழ வேண்டும். எனவே, ஒருவன் என்னைக் கண்டித்தால், நான் அவனைப் பதிலிற்குக் கண்டிக்கமாட்டேன். அவன் என்னைப் பழித்துக் கூறினால், நான் அவனுக்கு இரக்கத்தை வழங்குவேன். அவன் என்னை வெறுத்தால் அவனுக்கு பெரிதும் தேவைப்படும், என் அன்பை, நிச்சயம் பெறுவான். பொறுமை அற்றவர்களிடம், பொறுமையாக இருப்பேன்.எல்லாம் தனக்கே என்று இறுகப் பற்றிக் கொள்பவனிடம் நான் தாராளமாக இருப்பேன். சண்டை சச்சரவுகளிலும் வன்முறையிலும் ஈடுபடுபவர்களிடம் நான் அமைதியாக மென்மையாக நடந்துக் கொள்வேன். தீங்கை நான் காணாத போது, யாரை நான் வெறுப்பது? அல்லது யாரை நான் எதிரியாகக் கருதுவது?

என் சகோதரனே! என் சகோதரியே! மனித இனம் உங்களைக் கொல்லத் துடிக்கிறதா அல்லது உங்கள் மேல் பொறாமை கொள்கிறதா? நான் உங்களுக்கு இரக்கப்படுகிறேன். அவர்கள் என்னைக் கொல்லத் துடிக்கவில்லை. அவர்கள் என் மீது கனிவாகவே உள்ளனர். முணுமுணுப்புகளை நான் கணக்கு வைத்துக் கொள்வது இல்லை. அதை வைத்து என்ன செய்வது?

மனிதர்களை தீமையானவர்கள் என்று காண்பவன் அந்தத் தீமையான, வஞ்சகமான செயல்கள் எனக் கூறப்படும் செயல்களுக்குப் பின் ஒரு திறமையான அமைப்பு ஒளிந்து கொண்டு இந்தத் தீங்குகளைத் தூண்டிவிட்டு அரங்கேற்றுவதாகக் கற்பனை செய்கிறான். ஆனால் களங்கமற்ற பார்வையுடையவன் அந்தச் செயல்களையே தீமையாகக் காண்கிறான். தீய சக்தி என்று எதுவுமில்லை என்று அவன் அறிவான். அந்தச் செயல்களுக்குப் பின் எந்தத் தீய உயிரின் சக்தியும் இல்லை. இந்தப் பிரபஞ்சம் நன்மையால் ஆனதே. தீமையால் அல்ல. நன்மையே நிரந்தரமானது. எந்தத் தீமையும் நிலைக்காது . எந்தத் தீமையும் நிரந்தரமாக இருக்காது.

சகோதர, சகோதரிகளாக ஒரு தாய் மக்களாக, ஒரே வீட்டில் வாழ்பவர்களாக ஒருவரிடம் ஒருவர் எல்லாச் சூழ்நிலையிலும் அன்பு பாராட்டுங்கள், எந்தத் தீங்கையும் ஒருவரிடம் ஒருவர் பார்க்காதீர்கள். எல்லாத் தவறுகளையும் ஏற்றுக்கொண்டு குறை சொல்லாமல் பாருங்கள். வலிமையான பாசப் பிணைப்பில் கட்டப்பட்டு இருங்கள். நல் மனிதன், மனித இனத்தை ஒரே ஆன்மீக குடும்பமாகக் காண்கிறான். ஒரே தாய் – தந்தையர்க்கு பிறந்தவர்களாகக் காண்கிறான். அவர்களது மூலக்கூறு ஒன்றுதான். அவர்களது இறுதி இலக்கு ஒன்றுதான் என்று அறிகிறான். எல்லா ஆண்களையும், பெண்களையும், சகோதர-சகோதரிகளாகக் காண்கிறான். எந்தப் பாகுபாடும் வேற்றுமையும் பாராமல், யாரையும் தீங்கானவர்களாகப் பாராமல் எல்லோருடனும் நிம்மதியாக இருக்கிறான். இந்தப் பேரருள் நிலையைப் பெற்றவன் மகிழ்ச்சியை பெற்றவன் ஆவான்.

Share This Book

Feedback/Errata

Comments are closed.