13 தனித்து இரு

 

 

எல்லா வழிவகைகளிலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

உங்களுக்கு மதிப்பு அளித்துக் கொள்ளுங்கள்.

உங்கள்உள்ளம்எவற்றைஎல்லாம்

அணிந்து கொள்ள முடியும் என்று பாருங்கள்.

..ஜார்ஜ்ஹெர்பர்ட்

 

எவன்உள்ளத்தில்ஒளியைவைத்துஇருக்கின்றானோ

அவனது நாள் ஒளிமயமாக இருக்கும்.

….மில்டன்

 

பேரருள் நிறைந்த வாழ்விற்குத் தன்னம்பிக்கை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். நிம்மதி இருக்க வேண்டும் என்றால் அங்கே வலிமை இருக்க வேண்டும். பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றால் அங்கே உறுதி இருக்க வேண்டும். மகிழ்ச்சி எப்போதும் தொடர வேண்டும் என்றால் எந்த நேரமும் நீங்கி விடக்கூடிய அல்லது பறிக்கப்பட்டு விடக் கூடியவற்றின் மீது சாய்ந்து இருக்கக் கூடாது.

தன்னுள் உறையும் நிலையான ஒன்றையே மனிதன் சார்ந்து இருக்க வேண்டும். அதன் வாயிலாகத் தன் வாழ்வை ஒழுங்குப்படுத்திக் கொள்ள வேண்டும். தன் நிம்மதியை அதிலிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த நிலையான ஒன்றை அவன் தன்னுள் காணும் வரை அவன் உண்மையாக வாழ ஆரம்பிக்கவில்லை. நிலையில்லாமல் அலை பாய்ந்து ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒன்றைப் பற்றும் போது அவனது நிலையும் ஊசலாடிக் கொண்டேயிருக்கும். உடைந்து விடக்கூடிய, பறிக்கப்பட்டு விடக்கூடிய ஒன்றின் மேல் சாய்ந்து இருக்கிறான் என்றால் அவன் கட்டாயம் விழுந்துவிடுவான். விரைவில் அழியக்கூடிய நிலையில்லாத பொருட்களில் மன நிறைவைத் தேடி அவற்றைச் சேர்த்துக் கொண்டிருந்தால், அவை ஏராளமாகக் கொட்டிக் கிடந்தாலும் அவற்றுக்கு நடுவே அவன் மகிழ்ச்சியின்றித் தவிப்பான்.

யாருடைய ஆதரவுமின்றி ஒருவன் தனித்து நிற்க கற்றுக் கொள்ள வேண்டும். தனக்குச் சிறப்புச் சலுகைகளை எதிர்பார்க்காமல் , தனிப்பட்ட முன் உரிமைகளுக்கு ஆசைப்படாமல் ,தன் நிலைக் குறித்துப் பிறரிடம் கெஞ்சாமல், முணுமுணுக்காமல் , ஏக்கமோ வருத்தமோ கொள்ளாமல் தன்னுள் உறையும் உண்மைகளை மட்டுமே அவன் நம்பி இருக்கட்டும். அவன் மன நிறைவை நிம்மதியை தன் நேர்மையான உள்ளத்திலிருந்தே பெற்றுக் கொள்ளட்டும்.

மனிதன் தனக்குள் நிம்மதியைக் காணமுடியாத போது அதை வேறு எங்குக் காண்பான்? தன் துனையையே அவன் விரும்பாத போது பிறரது துனையில் அவனுக்கு என்ன நம்பிக்கை இருக்கும். தன் எண்ணங்களோடு உறவாடுவதில் மகிழ்ச்சியைக் காண முடியாத போது பலரைக் காணும் சூழ்நிலையில் கவலையிலிருந்து எப்படி விடுபடுவான்? மனிதன் தனக்குள் இருக்கும் ஏதோ ஒன்றையே சார்ந்து நிற்க வேண்டும். அவ்வாறு நிற்பதற்குத் தன்னுள் எதையும் காணாமல் இருக்கும் வரை அவன் வேறு எங்குச் சென்றாலும் ஓய்வாக இருக்க முடியாது.

உலகெங்கும்  மக்கள், தங்கள் மகிழ்ச்சி என்பது பிறரிடம் இருந்து பெறப்படவேண்டிய ஒன்று , வெளிப் பொருட்களில் இருந்து பெறப்பட வேண்டிய ஒன்று என்னும் தவறான நம்பிக்கை கொண்டு அதன் விளைவாக ஏமாற்றத்திற்கும், வருத்தத்திற்கும், கவலைக்கும் ஆளாகிறார்கள். எவன் தன் மகிழ்ச்சியைப் பிற மனிதர்களிடமிருந்தும் பிற பொருட்களிலிருந்தும் தேடாமல் தன்னுள்ளேயே அதன் என்றும் குறையாத இருப்பைக் காண்கின்றானோ அவன் எல்லாச் சூழ்நிலையிலும் மனஅமைதியுடன் நிம்மதியாக இருப்பான். துக்கமும் கவலையும் அவனைத் தொற்றிக் கொள்ள முடியாது. எவன் பிறர் தயவை எதிர்பார்த்திருக்கின்றானோ, தன் மகிழ்ச்சியின் அளவை தன்னுடைய நடத்தை விதிகளால் அளந்து பார்க்காமல் பிறர் தன்னிடம் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அளந்து பார்க்கின்றானோ , தன்னுடைய மன நிம்மதிக்கு அவர்களுடைய ஒத்துழைப்பை நம்பி இருக்கின்றானோ, அவன் ஆன்மீகத்திலே இன்னும் தடம் பதிக்கவில்லை. அவன் மனம் அவனைச் சுற்றி தொடர்ந்து நிகழும் மாற்றங்களால் ஊசலாடிக் கொண்டேயிருக்கும். கொப்புளித்துக் கொண்டேயிருக்கும் திராவகங்களைப் போல அவன் மனமும் ஓய்வின்றித் துக்கத்தில் உழல்கிறது. அவன் ஆன்மீக பாதையில் செல்வதற்கான கால்கள் இல்லாதவன், தன் மனதின் மையப் பகுதியை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று அறியாதவன். பிறரது ஆதரவு என்னும் ஊன்றுகோலின் உதவி இல்லாமல் அவனால் எங்கும் செல்லமுடியாது.

சிறு குழந்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எப்படி எதையும் பிடித்துக் கொள்ளாமல் தன் வலிமையில் கீழே விழுந்தாலும் பரவாயில்லை, சரி என்று நடை பழகுகிறதோ , அது போல மனிதனும் தனித்து நிற்கப் பழக வேண்டும். அவன் தன் அறிவை பயன்படுத்தி சிந்தித்துச் செயல்பட வேண்டும். தான் செல்ல நினைக்கும் பாதையைத் தன் மனதின் வலிமையில் அவனே தேர்ந்தெடுக்க வேண்டும்.

புற உலகில் மாற்றங்களும், பாதுகாப்பின்மையும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. அக உலகில் நிலைத் தன்மையும் பேரருளும் இருக்கின்றன. உயிரின் மூலம் (ஆன்மா) தன் நிறைவு பெற்றே இருக்கின்றது. எங்கே தேவை ஏற்படுகிறதோ அங்கே பொருட்கள் அதிகமாகச் செல்லும். உங்கள் நிலையான இருப்பிடம் உங்கள் உள்ளம் தான், அதை ஆளுங்கள்.அங்கே நீங்கள் தான் அரசன். வேறு எங்குச் சென்றாலும் நீங்கள் கப்பம் கட்டத் தான் வேண்டும். மற்றவர்கள் தங்கள் உள்ளம் என்னும் பிரதேசத்தில் நல்லாட்சி செலுத்துகிறார்களா இல்லையா என்று கவலை கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் உள்ளத்தை வலிமையாக ஆள்கிறீர்களா என்று பாருங்கள். உங்களது முழு நல்வாழ்வும், உலகத்தின் நல்வாழ்வும் அதில் தான் அடங்கி இருக்கிறது. உங்களிடம் மனசாட்சி இருக்கிறது. அதைக் கேளுங்கள். உங்களிடம் மனம் இருக்கிறது. அதைத் தெளிவு படுத்துங்கள். உங்களிடம் முடிவு செய்யும் திறனிருக்கிறது. அதைப் பயன்படுத்துங்கள்! வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் மன உறுதி இருக்கிறது. அதைச் செயல்படுத்துங்கள். வலிமையாக்குங்கள், உங்களிடம் அறிவு இருக்கிறது. அதை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒளி சுடர் விடுகின்றது. அதைக் கவனியுங்கள். தூண்டிவிடுங்கள். இன்னும் ஒளி வீசச் செய்யுங்கள். தீய உணர்வுகளின் காற்று அதை அணைக்காமல், மங்காத ஒளிவெளிச்சத்தை அது வழங்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உலகத்தை விட்டு விட்டு உங்களுக்குள் திரும்புங்கள்.மனிதனாகச் சிந்தியுங்கள். மனிதனாகச் செயல்படுங்கள். மனிதனாக வாழுங்கள். உங்களுக்குள் வளமாக இருங்கள்.உங்களுக்குள் தன்னிறைவு பெற்றிருங்கள். உங்களுக்குள் இருக்கும் நிலையான மையத்தைக் காணுங்கள். அதற்குக் கீழ்ப்படியுங்கள். பூமி சூரியனை மையமாக வைத்து அதற்குக் கீழ்ப்படிவதால் தான் அதன் பாதையில் சுழல்கிறது.உங்களுக்குள் இருக்கும் அந்த ஒளியின் மையத்திற்குக் கீழ்ப்படியுங்கள். மற்றவர்கள் அதை இருட்டு என்று கூறினால் கூறிக் கொள்ளட்டும் என்று விட்டு விடுங்கள். உங்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவேண்டும். விளைவுகளை நீங்கள் தான் சந்திக்க வேண்டும். எனவே உங்கள் மேல் நம்பிக்கைக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கத் தயங்கினால் வேறு யார் உங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள்? உங்களுக்கு நீங்கள் உண்மையாக இல்லையென்றால், உண்மையின் முழு இனிமையை எப்படி உணர்வீர்கள்?

உயர் மனிதன் , யாரையும் சாராமல் தன் எளிமையான கவுரவத்தோடும், கண்ணியத்தோடும் தனித்து நிற்கிறான்.தான் தேர்ந்தெடுத்த பாதையில் அச்சமின்றிப் பயணம் செய்கிறான்.அவன் யாரிடமும் கெஞ்சுவதோ மன்றாடுவதோ இல்லை. கடுமையான விமர்சனங்களையும், கரவொலியுடன் கூடிய பாராட்டுகளையும் அவன் சட்டையின் மேல் படியும் தூசை போல உடனே தட்டி விடுவான். மக்களின் மாறிக் கொண்டேயிருக்கும் கருத்துக்களை வழிகாட்டியாகக் கொள்ளாமல் தன்னுடைய உள் ஒளியையே வழிகாட்டியாகக் கொள்கிறான். உயர்குணமில்லாதவர்கள் பிற மனிதர்களின் புகழ்ச்சிக்கும் மின்னி மறையும் நிகழ்வுகளுக்கும் வளைந்துக் கொடுத்துத் தங்கள் கவுரவத்தை இழக்கின்றனர்.

நீங்கள் உங்களுக்கு வேண்டிய வழிகாட்டுதலை மாயையான சக்திகளிடமிருந்தோ , தெய்வங்களிடம் இருந்தோ, பிற மனிதர்களிடம் இருந்தோ பெறாமல் தனியே நின்று உங்கள் உள்ளிருக்கும் உண்மையின் ஒளியில் வழிகாட்டுதலை பெறும்வரை, நீங்கள் எந்தச் சங்கிலியாலோ பிணைக்கப்பட்டு இருக்கிறீர்கள். பேரருளைப் பெற்று இருக்கவில்லை. ஆனால் ஆனவமாக இருப்பதை யாரையும் சாராத தன்னம்பிக்கை என்று தவறாக எண்ணிவிடாதீர்கள். ஆனவம் என்பது எந்த நேரமும் இடியக் கூடிய அடித்தளம். அதன் மேல் ஏற நினைப்பது நீங்கள் ஏறும் முன்பே விழுந்து விட்டீர்கள் என்பதைக் காட்டுகின்றது. ஆனவம் மிக்க மனிதன் தான் மற்றவர்களை மிக அதிக அளவு சார்ந்து இருப்பான். மற்றவர்களின் ஆமோதிப்பிலே வாழ்கிறான். எதிர்ப்பில் ஆர்ப்பரிக்கிறான். வீண் புகழ்ச்சியை உண்மையான வார்த்தை என்று மயங்குகிறான். பிறரது கருத்துகளால் மிக எளிதில் காயப்படுகிறான் அல்லது பூரிப்படைக்கிறான். அவனது மகிழ்ச்சி முழுக்க முழுக்கப் பிறர் கைகளிலேயே இருக்கிறது. ஆனால் தன்னம்பிக்கை மிக்கவன் தன் ஆணவத்தின் மேல் நிற்கவில்லை. நிலையான விதியின் மேல், கொள்கையின் மேல், இலட்சியத்தின் மேல், தன்னுள் உறையும் உண்மையின் மேல் நிற்கிறான்.தனது உணர்ச்சி என்னும் அலைகளால் இழுத்துச் செல்லப்படாமல் பிறரது கருத்து என்னும் சூரைக்காற்றால் தூக்கி எறியப்படாமல் தன் கால்களை உறுதியாகப் பதித்து நிற்கிறான். சில வேளைகளில் சம நிலை இழந்து கீழே விழ நேர்ந்தாலும் மீண்டு எழுந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறான். அவனது மகிழ்ச்சி அவன் கைகளிலேயே இருக்கிறது.

நீங்கள் சம நிலையில் இருக்க உதவும் உங்கள் உள் மையத்தைக் கண்டு வெற்றிகரமாகத் தனித்து நில்லுங்கள். வாழ்வில் உங்கள் பணி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நீங்கள் அதில் வெற்றி பெறுவீர்கள்.நீங்கள் மனதில் எண்ணியதைச் சாதிப்பீர்கள்.காரணம் உண்மை, தன்னம்பிக்கை உடையவனை யாரும் வெல்ல முடியாது. ஆனால் நீங்கள் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவில்லை என்றாலும் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அறிவை வளர்த்துக் கொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டு விடாதீர்கள். நன்மையானதை, பயனுள்ளதை பெற்றுக் கொள்ளக் காத்திருங்கள். தாழ்ந்து இருக்காதீர்கள். தன்னடக்கமாக இருங்கள். எந்தச் சக்கரவர்த்தியும், மாளிகையின் ஆடம்பர வசதிகளுடன் பிறந்துள்ள இளவரசனும் துறவியின் தன்மானத்தை மிஞ்ச முடியாது. துறவியால் எப்படி அவ்வளவு பணிவாக இருக்க முடிகிறது? அவன் அவ்வளவு பணிவை எல்லோரிடமும் தாராளமாக வழங்க முடிவதற்குக் காரணம் அவன் தனக்குள் உள்ள கடவுள் தன்மையின் மேல் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறான். எல்லா மனிதர்களிடமும் கற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக மெய்யறிவை உணர்ந்தவர்களிடம், ஆனால் உங்களுடைய இறுதியான வழிகாட்டி உங்களுக்குள் தான் இருக்கிறது என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள். ஒரு மெய்ஞானி ”இது தான் பாதை” என்று சுட்டிகாட்ட முடியும். ஆனால் உங்களைக் கட்டாயப்படுத்தி நடக்க வைக்க முடியாது. உங்களுக்குப் பதிலாக அவரும் நடக்க முடியாது. நீங்கள் முயற்சியில் ஈடுபட வேண்டும். உங்கள் சொந்த வலிமையினால் சாதிக்க வேண்டும். அவர் உணர்ந்த உண்மையை நீங்களும் உணர யார் உதவியையும் தேடாமல் உங்களை நம்பி முயற்சியில் இறங்க வேண்டும்.

கடவுள் என்பது இதுதான்…

உங்களால்எந்தஅளவுமுடியுமோ

அந்தஅளவுமனிதனாகஇருங்கள்

வலிமையானஉறுதியைவளர்த்துக்கொள்ளுங்கள்

வாழ்வை ஒளியாக வாழுங்கள்.

 

உங்களுக்குத் தலைவன் நீங்கள் தான், உங்களை நீங்கள் தான் ஆள வேண்டும். இன்னொருவரை பார்த்துப் போலியாக நீங்கள் நடிக்கக் கூடாது. இந்தப் பிரபஞ்சத்தின் முக்கியமான ஒன்றாக, உயிரோட்டம் மிக்க ஒன்றாக உங்கள் வேலையைச் செய்யுங்கள். அன்பைத் தாருங்கள். ஆனால் திரும்ப எதிர்பார்க்காதீர்கள். இரக்கத்தை வழங்குங்கள். ஆனால் உங்கள் மேல் இரக்கத்திற்கு ஏங்காதீர்கள். கொடுங்கள், ஆனால் அதை நம்பி இருக்காதீர்கள். மக்கள் நீங்கள் செய்த வேலையைப் பழி தூற்றினால் அது பற்றி வருந்தாதீர்கள். நீங்கள் செய்த வேலையின் உண்மையே உங்களைப் பாதுகாக்கும். ”நான் செய்கின்ற வேலை மற்றவர்களுக்குப் பிடிக்குமா? என்று கேட்காதீர்கள். ஆனால் ”அந்த வேலை உண்மையானதா? என்றுகேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் செய்த வேலை உண்மையாக இருந்தால் மக்களின் கருத்துக்கள் அதை பாதிக்க முடியாது. அது பொய்யாக இருந்தால் மக்கள் நிராகரிப்பதற்கு முன்பே அது தன்னாலேயே இறந்துவிடும். உண்மையான வார்த்தைகளும், உண்மையான செயல்களும் சாதிக்க வேண்டியவற்றைச் சாதிக்கும் வரை மறைந்து போகாது. பொய்யான வார்த்தைகளும், பொய்யான செயல்களும் வாழ்ந்து நிறைவேற்ற எந்தப் பணியும் இல்லை , எனவே அவை வாழமுடியாது.அவற்றைக் கண்டிப்பதும், விமர்சிப்பதும் மிக மேலோட்டமான ஒன்று.

பிறரை, பிறவற்றைச் சார்ந்திருக்கும் அடிமைத்தனத்தை விட்டு வெளியே வாருங்கள். அது கொடுங்கோன்மை தனமாக நீங்களே உங்கள் மேல் சாற்றிக் கொண்டது. அதை விட்டு வந்து தனித்து நில்லுங்கள், எல்லோரையும் ஒதுக்கியவராக அல்ல. ஆனால் எதையும் ,எவரையும் ஒதுக்காமல் அரவணைத்து இரக்கம் கொள்ளும் முழுமையின் ஒரு பகுதியாகத் தனித்து நில்லுங்கள். நீங்கள் பாடுபட்டு ஈட்டியுள்ள இந்த அருமை சுதந்திரத்தினால் விளையும் மகிழ்ச்சியைப் பாருங்கள்.உங்கள் சுயக்கட்டுப்பாடால் பொங்கும் நிம்மதியைப் பாருங்கள். உங்களை என்றும் விட்டுப் பிரியாத வலிமையில் ஒளிந்திருக்கும் பேரருளை பாருங்கள்.

தன்கல்லறைக்குச்செல்லும்வழியை

தானேஅமைத்துக்கொண்டு

அவ்வாறுசெல்லும்போது

மக்கள்சொல்வதையும், நினைப்பதையும்

பற்றிக்கவலைப்படாமல்

செல்லும்வழியில்சந்தேகம்ஏற்பட்டால்

தன்உள்ஒளியையேவழிகேட்பவன்

தன்னிறைவானவன்.

மதிப்பு என்றும் அவனிடம் தங்கி இருக்கும்.

Share This Book

Feedback/Errata

Comments are closed.