3 சிறிய கடமைகளும் செயல்களும்

 

 

நமக்குமிகஅருகில்உள்ளகடமையைசரியாகசெய்வதே

சொர்க்கத்தின் வாசல் கதவைத் திறக்கும் திறவுக்கோல் ஆகும் .

மிகமுன்னதாகவும்அல்லாமல்மிகத்தாமதமாகவும்அல்லாமல்

சரியானநேரத்தில்வருபவனுக்குத்திரைவிலகி

சொர்க்கத்தின் காட்சிக் கிடைக்கும்.

 

தூரத்தில்மின்னும்நட்சத்திரம்போன்று

எந்தஇடைவெளியும்இல்லாமல்எந்தஓய்வும்இல்லாமல்

ஒவ்வொருமனிதனும்சக்கரத்தைப்போன்றுசுழன்றவாறு

அந்தநாளின்கடமைகள்ஒவ்வொன்றையும்

அவனால் முடிந்த அளவு நிறைவேற்றட்டும் .

— கோத்தே

சரியான தொடக்கங்களைப் பேரருளும் தவறான தொடக்கங்களைப் பெரும் துன்பமும் தொடர்வது போல மகிழ்ச்சியும் துக்கமும் சிறிய செயல்களோடும் கடமைகளோடும் பிரிக்க முடியாதவாறு ஒன்று அறக் கலந்து இருக்கின்றன. மகிழ்ச்சியையோ துக்கத்தையோ வழங்குவதற்குக் கடமைகளுக்கு ஒரு தனிச் சக்தி இருப்பதாகக் கருத முடியாது. அந்தக் கடமையைக் குறித்து எண்ணும் மனோபாவம், அந்தக் கடமையை அணுகும் போது கொள்கின்ற மனநிலை, அந்தக் கடமையை நிறைவேற்றுவதன் நோக்கம் ஆகியவற்றில் தான் அவை எல்லாமே அடங்கி இருக்கின்றன.

பெரு மகிழ்ச்சி மட்டுமல்ல பேராற்றலும் சிறு சிறு விஷயங்களைத் தன் நலம் இல்லாமல், ஆழமாகச் சிந்தித்து அறிந்து, முறையாகச் செய்வதில் உருவாகின்றது. காரணம் வாழ்வு என்பது சிறு சிறு விஷயங்களால் ஆனதே. நாள் தோறும் எதிர்கொண்டு செய்ய வேண்டிய மிகச் சிறிய எளிய செயல்களையும் கவனமாகச் செய்வதில் விவேகமும் ஞானமும் குடிக்கொண்டிருக்கின்றன. எல்லாப் பாகங்களும் சரியாக இருக்கும் போது முழுமையும் எந்தக் குறையுமின்றி இருக்கும்.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் சிறுசிறு விஷயங்களால் ஆனவையே. மிகப் பெரிய ஒன்றின் சிறந்தத் தன்மைக்குக் காரணம், அதன் சிறுசிறுப் பகுதிகளும் சிறப்பாக அமைந்து இருப்பதே. பிரபஞ்சத்தின் எந்தப் பாகமாவது குறைகளோடு இருந்தால் அது இந்த முழுப் பிரபஞ்சத்திலும் எதிரொலிக்கும். எந்தச் சிறு துகளாவது மறக்கப்பட்டிருந்தால் அந்த முழுமை அதன் முழுச் செயல்பாட்டை இழக்கும். ஒரு பிடியளவு மண் இல்லை என்றாலும் இந்தப் பூமி இப்போது போன்று இருக்க முடியாது. பூமிச் சிறப்பாக இருப்பதற்கு அந்த ஒரு பிடி மண்ணும் சிறப்பாக இருப்பதே காரணம். சிறியவற்றில் கவனம் செலுத்தாமல் புறம் தள்ளுவது பெரியவற்றில் குழப்பத்தை விளைவிக்கும். ஒரு நட்சத்திரம் எந்த அளவு சிறப்பாக இருக்கின்றதோ,பனிக்கட்டியும் அதே அளவு சிறப்பாக இருக்கின்றது. பனித்துளியும் பூமியைப் போன்றே பந்து வடிவத்தில் சம அமைப்பாக உள்ளது. ஒரு நுண்ணுயிரும் மனிதனைப் போன்றே ஒரு முறையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கல்லாக அடுக்கி, துளைகளிடப்பட்டுப் பொருத்தி சரிசெய்யப்பட்டு இறுதியில் தான்  கோயிலானது கலைநயத்தின் அழகோடு விளங்குகிறது. சிறியவைகள் பெரியவைகளின் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வந்து ஏவல் புரியும் வேலைக்காரன் அல்ல ;பெரியவைகளின் குரு ,அவற்றை வழி நடத்தும் ஆசான்.

அற்ப மனிதர்கள் பெரிய மனிதர்கள் போல் ஆக பேராவல் கொண்டுள்ளனர். ஏதாவது பெரும் சாதனைகள் செய்யத் துடிக்கின்றனர். தங்கள் உடனடிக் கவனத்திற்கு வரும் சிறிய செயல்களுக்குக் கவனத்தை, மதிப்பைச் சிறிதும் வழங்காமல் தூற்றுகின்றனர். அவற்றைச் செய்வதால் எந்தப் புகழும் பாராட்டும் கிடைக்காது. அவற்றிற்கு எல்லாம் நேரத்தை வழங்குவது ஒரு பெரிய மனிதனின் தகுதிக்கு ஏற்றதல்ல என்று கருதுகின்றனர். முட்டாள் அறிவில்லாதவனாக இருப்பதன் காரணம் அவனிடம் தன்னடக்கம் இல்லாததே. தான் அதிமுக்கியமானவன் என்று அகம்பாவம் கொண்டு செய்ய முடியாதவற்றை / செய்ய இயலாததை இலக்காகக் கொண்டு செயல்படுகிறான்.

வாழ்வில் உயர்ந்த மனிதர்கள் அவ்வாறு உயர்ந்ததற்குக் காரணம் தன்னலம் அற்றக் கவனத்தை , மனம் சிதறாத முழுஈடுபாட்டை அவர்கள் சிறு சிறுகடமைகளுக்கும் வழங்கியதே ஆகும். எந்தப் புகழ்ச்சியையும், எவர் பாராட்டையும் துளியளவும் கொண்டு வந்து சேர்க்காத யார் பார்வைக்கும் செல்லாத சிறு சிறு கடமைகள் ஆனால் அவை  மிகவும் தேவையான இன்றியமையாத செயல்கள் என தெளிந்து தான் என்ற அகந்தையை, தற்பெருமையைத் துறந்து அவன் கவனமாகச் செய்கின்ற காரணத்தால் அவன் மெய்யறிவையும் பேராற்றலையும் பெறுகிறான். அவன் உயர்ந்தவனாக மதிக்கப்படவேண்டும் என்று நாடி ஓடியது இல்லை, அவன் நாடி ஓடியது நம்பிக்கையை, தன்னலமற்ற தன்மையை, நேர்மையான உழைப்பை, உண்மையை நோக்கித்தான். இவற்றை அவன் தன் தினசரி வாழ்வின் சிறிய செயல்களிலும் கடமைகளிலும் நிதமும் தேடிக் கண்டு செயல்படுத்திய போது அவனை அறியாமலே அவன் உயர்நிலையை அடைந்துவிட்டான்.

சட்டென்வாறு நிகழும் சில நொடிப் பொழுதுகளின் , கூறும் வார்த்தைகளின், பரிமாறிக் கொள்ளும் வாழ்த்துக்களின்,உண்ணும் உணவின், உடுத்தும் உடையின், மற்றவர்களுடன் தொடர்புக் கொள்வதின், ஓய்வின், உழைப்பின்,எதிர்ப்பார்ப்பின்றி முயற்சிப்பதின், ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் கடமைகளின், சுருக்கமாகக் கூறினால் தினசரி வாழ்வில் கவனம் செலுத்த வேண்டிய ஆயிரத்து ஒரு விஷயங்களின் முக்கியத்துவத்தையும் பெரிய மனிதன் அறிந்திருப்பான். தெய்வீக அருளுடன் அவை ஒவ்வொன்றும் தன்னை நாடி வந்து அடைந்துள்ளதைக் காண்கிறான். பற்றற்ற நடுநிலையுடன் எண்ணி சிறந்து செயல்பட வேண்டியது ஒன்று தான் தன் பங்கு, அப்போது வாழ்வு பேரருள் சிறக்கும் வாழ்வாகும் என்று எண்ணுகிறான். அவன் எதையும் உதறித் தள்ளாமல், அரக்கப் பரக்க செய்யாமல், தவறையும் முட்டாள்தனத்தையும் தவிர எதிலிருந்தும் தப்பிக்க எண்ணாமல் – தனக்கு வழங்கப்பட்டுள்ள தன்னை வந்து அடைந்துள்ள ஒவ்வொரு கடமையையும் காலம் தாழ்த்தாமல் முகம் சுளிக்காமல் செய்கிறான். தன் கைக்கு எட்டியுள்ள தன் அருகில் உள்ள கடமையைத் தன்னை முழுமையாக ஒப்படைத்துச் செய்து, அவற்றினால் விளையும் இன்பம் துன்பம் இரண்டையும் மறந்து சிறு குழந்தை போன்று எந்தக் குழப்பமும் இல்லாமல் அவன் அறியாமலே ஓர் பேராற்றலை பெற்று உயர்நிலையை எட்டிவிடுகிறான்.

கன்பூஷியஸ் தன் சீடர்களிடம் ”நாட்டின் அரசனுடன் அமர்ந்து உணவு அருந்தினால் எப்படி உண்பீர்களோ அதே போன்றே உங்கள் வீட்டிலும் உண்ணுங்கள்” என வழங்கிய அறிவுரை சிறிய விஷயங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. மற்றொரு மிகப் பெரிய ஆசானாகிய புத்தர் கூறியுள்ள நன்மொழி, ”ஏதாவது ஒன்று ஒருவனால் செய்து முடிக்கப்படவேண்டும் என்றால், அவன் அதைச் செய்து முடிக்க உடனே முயலட்டும்”. சிறிய விஷயங்களையும் கடமைகளையும் செயல்களையும் உதாசீனத்படுத்துவதும் வேண்டாத வெறுப்புக் கொள்வதும் அரைகுறையாகச் செய்வதும் பலவீணத்தின் முட்டாள்தனத்தின் அறிகுறியாகும்.

 

இடத்திற்கு இடம் மாறுபடும் தன்னுடைய எல்லாக் கடமைகளிலும் ஒருவன் தன்னுடைய முழுக் கவனத்தைத் தன்னலம் கருதாமல் செலுத்துவது அவனுடைய ஆற்றலும், திறமையும், புத்திசாலித்தனமும், நல் இயல்பும், இயற்கையாக வளர வழிவகுக்கும். அதன் விளைவாக அவனை மேலும் மேலும் உயர்ந்தக் கடமைகளும் பொறுப்புகளும் தேடி வரும். செடி இயற்கையாக எந்தத் திட்டமுமிடாமல் தன்னிச்சையாகப் பூ பூப்பதைப் போலவே மனிதனும் உயர் குணங்களுக்குள் அடி எடுத்து வைக்கிறான். தன் ஆற்றல்களைத் தேவையற்றத் திசையில் செல்ல அனுமதிக்காமல் ஒருமுகப்படுத்திக் கவனமுடன் இடம், பொருள் காலமறிந்து செயலாற்றுபவன் தன் ஆற்றல்களை வீணாக்கிக் கொள்ளாமல், தேவையற்ற உராய்வுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல்  தன் வாழ்வைத் தன் குண இயல்புகளை ஒத்திசைவுடன் வழி நடத்திச் செல்கிறான்.

தற்போது உலகெங்கும், ”மன உறுதி”, ”மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல்” போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வழிமுறைகள், பயிற்சிகள், செய்முறை விளக்கங்கள் அளிக்கப்படும் என்று ஏராளமான விளம்பரங்கள் புற்றீசல் போல் பரவிக் கிடக்கினறன. ஆனால் அவற்றில் நடைமுறை வாழ்வுக்குப் பயன்படும் உருப்படியான பாடங்கள் எதுவுமில்லை. “மூச்சுப் பயிற்சிகள்”, “குறிப்பிட்ட நிலையில் உடம்பை வளைத்து அமர்வது”, “மனக்கண்ணில் கற்பனைகள் செய்யுமாறு சொல்வது”, “மந்திரங்கள், தந்திரங்கள்” என இந்தப் பயிற்சிகளால் விரும்பியதை அடையமுடியும் என நினைப்பது செயற்கையான குறுக்கு ஏமாற்று வழிமுறையாகும். நேர் வழி என்பது – கடமையின் வழியே ஆகும். தன் உள்ளத்திலிருந்து சிதறாத முழுக் கவனத்தைத் தன் ஒவ்வொரு கடமையிலும் செலுத்துவதாகும். இதுவே மன உறுதியும் ஒருமுகத்தன்மையும் நிலைத்து வளர இயற்கையான வழியாகும். ஆனால் இந்த இயற்கையான பாதை சில அறிஞர்களாலும் அறியப்படாமல், பயணம் செய்யப்படாமல் இருக்கின்றது.

 

இயற்கைக்குப் பொருந்தாத முறையில் வலிய செயல்பட்டு இவ்வகை ஆற்றல்களை பெற முடியும் என்னும் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குழந்தை பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு வளரக் காலங்கள் உருண்டோட வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியில்லை. அது போலவே தான், ”முட்டாள்தனத்திலிருந்து விவேகத்திற்கு, அறியாமையிலிருந்து அறிவிற்கு, பலவீணத்திலிருந்து பலத்திற்கு இயற்கையாக மாற வேண்டும்”. மனிதன், நாளுக்கு நாள்  ;- எண்ணத்திற்கு எண்ணம் , செயலுக்குச் செயல், முயற்சிக்கு முயற்சி என்று அடி மேல் அடி வைத்து படிபடியாகக் முன்னேறக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சில குறிப்பிட்ட முறையில் உடலை வளைத்து அந்த நிலையில் அமர்ந்து, பல்வேறு முறைகளில் கடுமையாக தன்னை வருத்திக் கொள்ளும் பக்கிரி, சராசரி மனிதன் பெறமுடியாத அதீத சக்தியைப் பெறுகிறான் என்பது உண்மைதான். ஆனால் அந்த சக்தியை பெரும் விலைக் கொடுத்துப் வாங்கி இருக்கிறான். அவன் வேறு திசைகளில் தனக்குத் தேவைப்படும் சக்திகளைப் பறிகொடுத்தோ இழந்தோ தான் இந்த அதீத சக்திகளைப் பெற்றிருக்கிறான். அவனுக்கு மனோவசியக் கலை, சித்துவிளையாட்டுகள் ஒருவாறுப் புரியலாம். ஆனால் அவன் உறுதியான, பயன்படும் குண இயல்புகளைப் பெற்றிருக்கவில்லை. அவன் முழுவளா்ச்சியை அடையவில்லை. அவ்வாறு தோற்றமளிக்கிறான்.

தினசரி வாழ்வில் நிகழும் மன ஒழுக்கச் சீர்க்கேடுகளை, பிறர் மீது சீறிப்பாயும் – எறிந்து விழும் மனோபாவங்களை, முட்டாள்தனங்களை, எரிச்சல்படுவது போன்ற இவற்றிலிருந்து மீள்வதே ஒரு மனிதனுடைய மன உறுதி ஆகும்; சிறிய தூண்டுதல் ஏற்பட்டால் போதும் என்று உடனே வெளிப்படத் துடிக்கும் அவற்றிற்கு இடம் கொடுக்காமல் அடக்கி ஆள்வதே மன உறுதி ஆகும் ; பிரச்சினைகளுக்கும், உணர்ச்சி வேகங்களுக்கும், இடையூறான சூழ்நிலைகளுக்கும் நடுவிலும் சாந்தமான மனதை, சுயக்கட்டுப்பாடை, பற்றின்றிச் செயல்படும் தன்மையைக் கடைப்பிடிப்பதே உண்மையான மன உறுதியை, மனதின் சக்தியை வளர்த்துக் கொள்வதாகும். இவற்றிலிருந்து இம்மியளவு குறைந்தாலும் அவற்றை மனதின் உண்மையான சக்தியாகக் கருத முடியாது. தினசரி வாழ்வின் கடமைகளையும், அழுத்தும் நிர்பந்தங்களுக்கு இடையில்;- திறமையாக, ஒழுங்காகத் தன்னலமின்றி நிறைவேற்றும் போது மட்டுமே படிப்படியாக இவ்வகை ஆற்றல்கள்    இயற்கைக்கு பொருத்தமான வழியில் இயைந்து  இயல்பாக வளரும்.

ஆச்சரியமும் புதிரும் சூழ மனோசக்திகளைப் பயன்படுத்தி ஒன்றை ஒரு நேரத்தில் சாதிப்பதும், யாரும் தன்னைக் கண்காணிக்காத, தன்னை சூழ்ந்திருக்காத நேரங்களில் எரிச்சல்படுவதும், வருந்துவதும் மற்ற முட்டாள்தனங்களையும் தவறுகளையும் புரிபவன் உண்மையான தலைவன் அல்ல; எதிர்ப்பைத் தாங்கும் வலிமையும் , கோபமின்மையும் , மாறாத உறுதியும், சாந்தமும், எல்லையற்றப் பொறுமையுமே உண்மையான தலைவனை அடையாளம் காட்டும். தன்னைத் தானே அடக்கி ஆள்பவனே உண்மையான தலைவன் . அவ்வாறு அடக்கி ஆள முடியாதவன் தலைவன் அல்ல, தலைவனைப் போன்று மாயத் தோற்றத்தை அளிப்பவன். தனக்கு வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு கடமையின் மீதும் தன் முழுக் கவனத்தைச் செலுத்துபவன், அதைக் குறைவின்றிச் சரியாக நிறைவேற்ற ஆற்றலையும் புத்திக்கூர்மையையும் பயன்படுத்துபவன், தேவையற்ற மற்றவைகளைத் தன் மனதிலிருந்து விலக்கி, தனக்கு வழங்கப்பட்டுள்ள அந்த ஒன்றை, அது எவ்வளவு சிறிய ஒன்றாக இருந்தாலும் அதை முழுமையாக, சரியாக , எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் செய்ய விழைபவன், ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் தன் மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை வளர்த்துக் கொள்கிறான். இருக்கும் நிலையிலிருந்து இன்னும் உயர்நிலைக்குச் சென்றவாறு இருக்கிறான். இறுதியில் வலிமையானவனாக, தலைவனாக ஆகிறான்.

 

நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டிய ஒன்றில் மிச்சம் மீதம் என ஏதுமின்றி முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வாழுங்கள். ஒவ்வொன்றுக்கும் நீங்கள் அளிக்க வேண்டிய உங்கள் பங்கை அளித்து நிறைவு செய்யுங்கள். இதுதான் மனஉறுதியை வளர்த்துக் கொள்ள, எண்ணங்கள் சிதறாமல் குவிந்த நிலைப் பெற, ஆற்றல்கள் வீணாகாமல் தடுத்துப் பயன்படுத்த உண்மையான வழி. இதை விடுத்து மந்திரங்களையும் மாய வித்தைகளைப் பொருந்தாத செயற்கை வழிமுறைகளையும் நாடாதீர்கள். தேவையான எல்லாமே உங்களிடம் உங்கள் உள்ளேயே இருக்கின்றன. நீங்கள் தற்போது இருக்கும் நிலையை எவ்வாறு பயன்படுத்திச் செயல்பட்டு மேல் எழ வேண்டும் என்பதே நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியப் பாடமாகும். இந்த முக்கியப் பாடத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் வரை உங்களுக்கு ஆகக் காத்திருக்கும் மற்ற வாய்ப்புகளையும் உயர்ந்த நிலைகளையும் நீங்கள் அடைந்து  அனுபவிக்க  முடியாது.

வலிமையையும், விவேகத்தையும் பெறுவதற்கு இப்பொழுது நிகழும் இந்த நொடிப் பொழுதில் வலிமையாகவும், விவேகமாகவும் செயல்படுவதே சிறந்த வழியாகும். ஒவ்வொரு ” நிகழும் நொடியும்” அப்பொழுது செய்து முடிக்கப்பட வேண்டியவற்றை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தியவாறே இருக்கும். உயர்மனிதர்கள், சான்றோர்கள் சிறியவற்றையும் ஒழுங்காகச் செய்வார்கள். தேவையான எந்த ஒன்றையும் கவனத்தில் கொள்ளாமல் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள். பலவீணமான மனிதனும், முட்டாளும் சிறிய செயல்களைக் இழிவாக கருதி கவனமின்றிச் செய்வதோடு அரும் பெரும் செயல்களைச் செய்யும் வாய்ப்பிற்காக ஏங்கிக் கிடக்கிறான். சிறிய செயல்களைப் புறம் தள்ளுவதிலும் அரைக்குறையாகச் செய்வதிலும் அவன் தன் இயலாமையை உலகிற்கு இடைவிடாமல் விளம்பரப்படுத்திக் கொள்கிறான். தன்னை வழிநடத்திக் கொள்ளும் ஆற்றல் எவனிடம் மிகக் குறைவாக இருக்கின்றதோ அவன் பிறரை வழி நடத்துவற்கும் முக்கியப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கும் பேராவல் கொள்கிறான். ஏதோ ஒன்றை மிக அற்பமான விஷயம் ,  அதைச் செய்வது தன் தகுதிக்கு ஏற்றதல்ல , என நினைப்பவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான். அது உண்மையில் அற்பமான விஷயமல்ல. அவன் தகுதிக்கு மீறிய விஷயம் என்பதால் செய்யாமல் விட்டுவிடுகிறான்    என்பதே உண்மையாகும்.

சிறிய செயல்களைக் கவனித்துச் சரியாகச் செய்வது வலிமையைக் கூட்டுவது போலவே , அவ்வகைச் சிறிய செயல்களைக் கவனமில்லாமல் தவறுகளோடு செய்வது பலவீணத்தை அதிகரிக்கும். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போலச் சிறு சிறு கடமைகளில் ஒருவன் செயல்படும் விதமே அவனது குணத்தின், இயல்புகளின் சாராம்சத்தை எடுத்துரைக்கும். பாவங்களின் ஊற்றிலிருந்து துன்பங்கள் வருவது போலப் பலவீணத்தின் ஊற்றிலிருந்தும் துன்பங்கள் வரும். நற்குணமும், நல் இயல்புகளும் ஓரளவாவது வலிமையான பின் தான் உண்மையான பேரருள் கிடைக்கும். சிறுசிறு செயல்களுக்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்கி செவ்வனே செய்து முடித்துப் பலவீணன் வலியவனாகிறான்.கவனத்தை சிதற விடுவதாலும் சிறிய செயல்களின் முக்கியத்துவத்தை ஒதுக்கித் தள்ளுவதாலும் தன்னியல்பான புத்திசாலித்தனத்தை இழந்து ஆற்றலை வீணடித்து வலியவன் பலவீணன் ஆகிறான். வளர்ச்சியின் விதி எவ்வளவு சாதகமாக, அனுகூலமாகச் செயல்படுகின்றது என்பதை இங்கே காணலாம். மிகக் குறைந்த அளவே உணரப்படும் அந்த விதியைக் குறிக்கும் வார்த்தைகள் ”திறமையைப் பயன்படுத்துபவனிடம் இன்னும் அதிகத் திறமை கொடுக்கப்படும், திறமையைப் பயன்படுத்தாதவனிடம் இருக்கும் திறமையும் பறிக்கப்படும்”. மனிதன் உள்ளத்திலிருந்து எண்ணுகின்ற ஒவ்வொரு எண்ணத்தாலும் , உச்சரிக்கின்ற ஒவ்வொரு வார்த்தையாலும், அசைகின்ற ஒவ்வொரு அசைவாலும் , உண்மை உணர்வோடு செய்கின்ற ஒவ்வொரு செயலாலும் உடனுக்குடன் அவனது குணத்தின் தன்மையில் கூடலும் கழிதலும் நடைபெறுகிறது. அவனது குணம் என்பது நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கும் அளவையாகும். எண்ணம், சொல், செயல்களின் தன்மைக்கு ஏற்ற அளவில் நன்றோ தீதோ அவனது குணத்தில் ஒவ்வொரு கனமும் மிகத் துல்லியமாகத் தொடர்ந்து கூடிக் கொண்டோ குறைந்துக் கொண்டோ இருக்கின்றது.

சிறியவற்றைக் கவனித்து ஆளும் திறன் கொண்டவனிடம் மட்டுமே பெரியவைகளும் நாடி வரும். சிறியவற்றைச் செவ்வனே நிறைவேற்றாமல் அவற்றிடம் மண்டியிடுபவன் பெரிய வெற்றிகளைப் பெற முடியாது.

ஒன்றை ஒன்று சார்ந்து கூடி செயல்படுவதன் வடிவமே வாழ்வு என்றால் அந்த மொத்த வடிவத்தின் செயல்பாடும் அந்த ஒவ்வொன்றின் செயல்பாடுகளை நம்பியே இருக்கின்றது.

வெற்றிகரமாகச் செயல்படும் வணிகம், துல்லியமாக செயல்படும் இயந்திரம், கட்டிடக் கலையின் அழகு நயத்தோடு விளங்கும் கோபுரம், அல்லது அழகான குண இயல்பு என இவை எல்லாமே எண்ணற்ற சிறுசிறு பாகங்களைச் சரிப்படுத்திய வண்ணமே உருவாகின்றது.

முட்டாள் சிறு தவறுகளை, சிறிய அத்துமீறல்களை , சிறிய குற்றங்களை , சிறு குறிப்புகளை, அடையாளங்களைப் பொருட்படுத்துவதில்லை. பெரியவகையான ஒழுக்கக் குறைவான செயல்களில் ஈடுபடாதவரை தன்னை அற நெறிமிக்கவனாக, ஏன் புனிதமானவனாகவே கருதுகிறான். ஆனால் அவன் இவ்வாறு செய்வதால் அறநெறிப் பாதையையும் புனிதத் தன்மையையும் இழக்கிறான். உலகமும் அவனை உள்ளவாறே அறிந்து, அவனுக்குப் பெருமதிப்பு வழங்காமல் கொண்டாடாமல், அவனை ஒருபொருட்டாகக் கருத வேண்டியது இல்லை எனக் கடந்து செல்கிறது. உலகம் அறநெறிப் பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக, சக மனிதர்கள் பெரும் தவறுகளைக் கைவிட வேண்டும் என்பதற்காக,  அவன் விடும் அறைக் கூவல்கள் எல்லாம் எந்தப் பலனும் அளிக்காத வெற்று முழக்கங்களே. அவனால் உலகில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. சிறு குற்றங்களைக் கண்டு சரிப்படுத்தத் தவறிய அவனது மனோபாவம் அவனது மொத்த குணத்திலும், ஊடுருவி அவனது ஆளுமையைச் சிதைத்து முக்கியமில்லாதவனாகக் கருதப்படும் நிலைக்கு ஆளாகிறான். தவறு என்று தெரிந்தும் அலட்டிக்கொள்ளாமல் செய்யத் துணிவதால் அவன் அவனது இயலாமையையும் பலவீணத்தையும் வெளிப்படுத்துகிறான். அவன் எதிர்பார்க்கும் மதிப்பும், மரியாதையும், தேடும் செல்வாக்கும் அவனை அடையாமல் இருக்கின்றன. முட்டாள்தனத்தைக் கற்றுக்கொள்ள யாரும் ஆவலாக இல்லாததால் அவனை யாரும் தேடி வருவது இல்லை. அவனது செயல்கள் நிலைத்து நின்று செழிப்பது இல்லை-அசைந்தாடும் நாணலின் மீது யார் சாய்ந்து கொள்வார்கள் ?.அவனது வார்த்தைகளும் கேட்கும் தன்மையில்லாத செவிகளிலேயே விழுகின்றன. காரணம் செயல்படுத்தப்பட்டு, அனுபவத்தால், ஞானத்தால் விளைந்த வார்த்தைகளாக அவை இல்லை. எதிரொலியின் அழைக்கும் குரலைக் கேட்டு யார் செல்வார்கள்?

ஞானம் மிக்கவனும் ஞானம் மிக்கவனாக மாறிக் கொண்டிருப்பவனும் பொதுவாகத் தென்படும் அலட்சியத்தினால் ஏற்படும் தவறுகளில் உள்ள ஆபத்தை உணர்கின்றான். இவ்வகை தவறுகளை குறித்தும் அறநெறி எண்ணங்களை நடைமுறைகளைச் செயல்படுத்துவது பற்றியும்   பெரிதாக எந்த ஒரு  முக்கியத்துவத்தையும் வழங்காமல்  பெரும்பாலானவர்களே  ஒதுக்கித் தள்ளினாலும், அலட்சியப் போக்கிலிருந்து விடுபடுவது தான் மீட்சிக்கான வழி என்று அவன் உணர்கிறான் . மற்றவர்களால் பார்த்து உணரப்பட முடியாத தன் அகம்பாவத்திற்கு எதிரான போரை , கன நேரமே தன்னுள் நிகழும் அந்தப் போராட்ட கனங்களை அமைதியாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்கிறான்.

 

எவன் சிறிய கடமைகள், செயல்கள், வார்த்தைகள், எண்ணங்கள் ஆகியவற்றின் பெரு முக்கியத்துவத்தை உணர்கிறானோ அவன் புனிதனாகிறான். தன்னுடைய ஒவ்வொரு எண்ணத்தாலும், ஒவ்வொரு செயலாலும் நன்மையோ தீமையோ விளைவதை,தொலை தூரத்திற்கும் காலம் கடந்தும் அவை பயணம் செய்யும் ஆற்றல் கொண்டவை என்று உணர்கிறான். எண்ணில் அடங்காத சிறுசிறு விஷயங்களை நிறைவோடும், குறைவோடும் செய்வதன் விளைவே தன் வாழ்வாக, தன் குணமாக மாறுவதை உறுதியாக உணர்ந்துத் தன்னை உள் நோக்கிக் கவனிக்கிறான், விழித்திருக்கிறான், தூய்மைப்படுத்திக் கொள்கிறான், தன் தவறுகளைப் படிப்படியாகத் திருத்திக்கொள்கிறான்.

 

கடல் நீர்த்துளிகளால் ஆனதே, பூமியும் மண்துகள்களால் ஆனதே. நட்சத்திரமும் சிறுசிறு நெருப்புப்பொறிகளால் ஆனதே. இது போலவே எண்ணங்களாலும், செயல்களாலும் ஆனதே வாழ்வு. அவை இல்லை என்றால் வாழ்வுமில்லை. ஒவ்வொரு மனிதனது வாழ்வும், அவனிடமிருந்து வெளிவந்த எண்ணங்களின், செயல்களின் விளைவுகளே. அவற்றின் கூட்டு உருவமாகவே அவன் விளங்குகிறான். குறிப்பிட்ட வரிசைப்படி ஓர் ஆண்டு நிகழ்வது போல ஒரு மனிதனது குணமும் வாழ்வும் அவனது வரிசையான எண்ணங்களாலும் செயல்களாலுமே உருவாகின்றது. அவனது மொத்த வாழ்வை சீர்தூக்கி நோக்கினால் அதில் அவனது சிறிய எண்ணங்களின்- செயல்களின்  பதிவையும் , சாயலையும் கூடக் காண முடியும்.

எல்லாவகையானவிஷயங்களும்பருவநிலைகளும்

ஒன்று சேர்ந்து தான் ,

ஒரு ஆண்டும் பூமி பந்தும் உருவாகின்றன.

துளிதுளியான அன்பும், இரக்கமும், தாராள உள்ளமும், விட்டுக்கொடுத்தலும் ஒன்று சேர்ந்தே , ஒருவனது உள்ளத்தை இரக்கக் குணமும், தாராள மனமும் கொண்டதாக மாற்றுகின்றன. சிறுசிறு விஷயங்களில் தன்னலமின்றிச் செயல்படுவதும், பொறுமையைக் கடைப்பிடிப்பதும் தன் அகம்பாவத்தின் மீது வெற்றிக் கொள்வதும் தான் ஒருவனது உள்ளத்தை வலிமையாகவும், உயர்ந்ததாகவும் மாற்றுகின்றன. சிறு விஷயங்களில் கூட நேர்மையாக நடந்துக் கொள்பவனே உண்மையில் நேர்மையான மனிதனாவான். உச்சரிக்கும் சிறிய வார்த்தையிலும் செய்யும் சிறிய செயலிலும் உயர்ந்து விளங்குபவனே உண்மையில் உயர் மனிதனாவான்.

 

அவ்வப்பொழுது நிகழும் சிறுசிறு எண்ணங்களும் செயல்களும் வாழ்வைப் பாதிக்க முடியாது என்று நினைப்பது வழிதவறுவதற்குப் பெரும் காரணமாகின்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு எண்ணமும் செயலுமே வாழ்வின் அடித்தளமும் ஜீவனும் ஆகும். இதை முழுதும் புரிந்து உணர்ந்துக் கொண்டால் காணப்படும் ஒவ்வொன்றும் புனிதமானதாக , செய்யப்படும் ஒவ்வொன்றும் வழிபாடாக விளங்கும். எண்ண முடியாத அளவிலான சிறுசிறு விஷயங்களில் உண்மை அடங்கியுள்ளது. அரைகுறையின்றி முழுதாக ஒன்றைச் செய்பவனே திறமைசாலி.

தேடிய செல்வமும் , பொருளும், பணமும் அழிந்துப் போகும்.

கருத்துகள் மாறும்.

வேக உணர்ச்சிகள் நிலையானவை அல்ல .

ஆனால் சூழ்நிலைகளின் புயலை சந்தித்துத் நிலைகுலையாமல் செய்த கடமையோ தன் பங்கை ஆற்றும் வரை  மறையாமல் நிற்கும் .

உங்கள் வாழ்வு சிறுசிறு பாகங்கள் இல்லாத ஒரு மொத்த வடிவமல்ல. சிறுசிறு பாகங்கள் இனைந்த ஒரு முழுமையான வடிவமே உங்கள் வாழ்வு. இந்தப் பாகங்களிலிருந்தே அந்த ஒரே முழுமை உருவாகின்றது. நீங்கள் தடம் புரளாமல் உறுதியுடன் முடிவெடுத்தால் , ஒவ்வொரு பாகத்தையும்,பகுதியையும் இனிமையாக வாழமுடியும். அவ்வாறு வாழும்போது அந்த முழுமையில் ஒன்றும் விரும்பத்தகாததாக இருக்க முடியாது. சில்லறை நாணயங்களைப் பார்த்துக் கொண்டால் நாணயத் தாள்கள் தம்மைத் தாமே பார்த்துக்கொள்ளும் என்பது பொருள் சார்ந்த பழமொழி என்று மட்டும் கொள்ள முடியாது. சிறியவற்றைத் திருந்தச் செய்தால் பெரியவைகள் தாமாகவே சரியாக நடக்கும் என்னும் பேருண்மையை விளக்கும் பழமொழியாகும். இங்கே, இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றைச் சரியாகச் செய்யவேண்டும் என்று உணர்ந்து கொண்டால் இவற்றின் கூட்டுத் தொகையான வாழ்வையும் குண இயல்புகளையும் பாதுகாத்துக் கொள்ளலாம். பேரருளின் துணையோடு கூடிய மெய்யறிவோடு விளங்கலாம். பலரும் புகழும் அரும்பெரும் சாதனைகளைப் புரிய வேண்டும் என்று எந்த ஏக்கமும் கொள்ளாதீர்கள். நீங்கள் இங்கே- இப்பொழுதை , சரியாக வாழ்ந்தால், அவை தன்னாலேயே நடக்கும். உங்களது எல்லையைச் சுருக்கும். உங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும், உங்களது தற்போதைய கடமையைக் குறை கூறாதீர்கள். உங்களை எட்டாமல் தள்ளியே நிற்கும் பெரும் செயல்களைச் செய்ய வேண்டும் என்று வீணாகச் சிந்திக்காதீர்கள்.ஆனால் தன்னலம் என்பது அறவே இன்றி முழுமையான ஈடுபாட்டுடன் உங்களது இப்பொழுதைய கடமையைச் செவ்வனே நிறைவேற்றுங்கள். கவனமின்மையை விலக்குங்கள். முனுமுனுப்பை விலக்குங்கள். இவ்வாறு நீங்கள் செயல்பட ,இவ்வளவு நாள் நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உயர்நிலை  உங்கள் முன் அதுவாகவே வரத் தொடங்கிவிடும். ஒன்றைப் பெற நினைக்கும் போது அதற்கு ஈடான மற்றொன்றை கொடுக்காமல் பெற நினைப்பது கீழான பலவீணமாகும். வெளி உலகப் புகழ்ச்சிகளைப் பெற முனையாதீர்கள். உங்கள் உள்ளத்தில் உயர் தன்மையை வளர்க்க பாடுப்படுங்கள். இதை நீங்கள் இப்பொழுது இருக்கும் நிலையிலிருந்தே தொடங்குங்கள்.

 

உங்களது கடமையின் மீது உங்களுக்கு ஏற்படும் மனச்சோர்விற்கும் வெறுப்பிற்கும் ஆன காரணம் என்பது உங்கள் மனதில் தான் இருக்கின்றது. உங்கள் கடமையைக் குறித்து நோக்கும் மனப் பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வாறு மாற்றிக் கொண்டபின் கோணலான பாதையாகத் தெரிந்த ஒன்று நேர்வழியாகக் காட்சியளிக்கிறது. கடமையின் மீது இருந்த வெறுப்பு விருப்பமாக மாறுகிறது.

உங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் வலிமையானதாக, களங்கமற்றதாக, பயனுள்ளதாக இருக்கும்படி பாருங்கள். முழு ஈடுபாட்டோடும் தன்னலமற்ற தன்மையோடும் ஒவ்வொரு செயலையும் கடமையையும் செய்யுங்கள். உங்களது ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும் இனிமையானதாக, உண்மையானதாக இருக்கட்டும். இவ்வாறு பயிற்சியாலும், அனுபவத்தாலும் வாழ்வின் சிறிய விஷயங்களின் மதிப்பிடவும் அளந்து கூறவும் முடியாத முக்கியத்துவத்தைக் கற்று உணருங்கள். நிலைத்து நிற்கும் பேரருளை சிறிது சிறிதாகப் பெருமளவு நீங்கள் பெறுவீர்கள்.

Share This Book

Feedback/Errata

Comments are closed.