2 சரியானத் தொடக்கங்கள்

 

ஒவ்வொரு நாளும், பொதுவான விஷயங்கள், தினசரி நடவடிக்கைள் அந்த அந்த நேரத்தில் அரங்கேறி பின் முடிகின்றன.

அவற்றினால்விளையும்இன்பமும்துன்பமும்

நம்மை மேல் நிலைக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள்.

 

வானுயரப் பறப்பதற்கு நம்மிடம் சிறகுகள் இல்லை,

ஆனால்,நம்மிடம் கால்கள் இருக்கின்றன ,

அடி மேல் அடி வைத்து மேல் ஏறுவதற்கு.

..லாங்ஃபெல்லோ

 

தினசரி வாழ்வின் தேவைகளை , அது செல்லும் பாதைகளை,

நான் செம்மையாக அழகு மிளிர அமைப்பேன்.

..ப்ரௌனிங்

 

வாழ்வு முழுவதும் தொடக்கங்கள் நிறைந்து இருக்கின்றன. அதைத் தொடங்கும் வாய்ப்பு எல்லா மனிதர்களுக்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிப்பொழுதும் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான தொடக்கங்கள் சிறியவைகளாக, மிகச் சாதாரணமாக எந்த விதச் சிறப்பு முக்கியத்துவமும் இன்றித் தோன்றுகின்றன. ஆனால் உண்மையில் அவற்றில் தான் வாழ்வின் முக்கிய விஷயங்கள் அடங்கி இருக்கின்றன.

 

புற உலகில் ஒவ்வொன்றும் சிறிய தொடக்கங்களிலிருந்து எவ்வாறு தொடங்குகின்றன என்று கவனியுங்கள். பரந்து விரிந்து செல்லும் மிகப் பெரிய நதி , ஒரு வெட்டுகிளித் தாவி செல்லும் அளவு அகலம் கொண்ட சிறிய நீரோடையாக இருந்தே தொடங்கியது ; மிகப்பெரிய வெள்ளமும் , சில மழைத் துளிகளிலிருந்தே தொடங்கியது. ஆயிரம் குளிர் காலங்களைக் கடந்து நிற்கும் வலிமையான காட்டு மரமும் சிறிய விதையிலிருந்து முளைத்த ஒன்று தான். கவனிக்கப்படாமல் தூக்கி எறியப்பட்ட சிறு தீக்குச்சியின் தீப்பொறி , ஒரு நகரையே விழுங்கும் நெருப்பிற்குக் காரணமாகலாம்.

பொருள் சாராத அக உலகிலும் பெரும் சாதனைகள் சிறிய ஆரம்பமாக இருப்பதைக் கவனியுங்கள். ஒரு சிறிய கற்பனையோ விளையாட்டாகத் தோன்றிய எண்ணமோ ஓர் அரியக் கண்டுபிடிப்பிற்கு, காலத்தை வென்று நிற்கும் ஒரு கலை வடிவத்திற்குக் காரணமாக இருக்கலாம். பேசிய ஒரு வார்த்தை வரலாறு மாற, ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்திருக்கலாம். போற்றிப் பின்பற்றப்பட்ட ஒரு புனித எண்ணம் காந்த சக்தி போன்று அலையையும், நம்பிக்கையையும் உலகெங்கும் ஏற்படுத்தலாம். ஒரு நொடிப் பொழுதில் உதித்த கீழான மிருக வெறி, மனதை உறையச் செய்யும்  குற்றத்திற்குக் காரணமாகலாம்.

தொடக்கங்களின் முக்கியத்துவத்தை இன்னும் நீங்கள் முழுதாக உணரவில்லையா? ஒரு தொடக்கத்தில் எவையெல்லாம் அடங்கியிருக்கின்றன என்று அறிவீர்களா? எத்தனை வகைத் தொடக்கங்களை நீங்கள் வரிசையாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையும், அது எந்த அளவு முக்கியம் என்பது பற்றியும் அறிவீர்களா? இல்லையென்றால், சிறிது நேரத்தை ஒதுக்கி, கண்டும் காணாமல் புறக்கணிக்கப்படும் இந்த நல்வழிப் பாதையின் வழிக்காட்டல்களைத் தேடிக் கவனமாக மனதில் கொள்ளுங்கள். அதைத் தேடி அறிய முற்படுபவன் பேரருள் பெற்றவனாவான். அந்த நல்வழிப்பாதை அவனுக்கு வலிமையையும், ஆதரவையும் வழங்கக் காத்திருக்கிறது.

ஒரு தொடக்கம் என்பது ஒரு முதல் காரணம், முதல் வினையாகும். அந்த வினையை ஒரு விளைவோ அல்லது தொடர்ச்சியான பல விளைவுகளோ பின் தொடர்ந்தே ஆக வேண்டும். அந்தப் பின் விளைவுகளின் தன்மை அந்த முதல் காரணத்தின் இயல்பை ஒத்ததாகவே இருக்கும். முதல் செயல் பின் வரக்கூடியவைகளுக்கு ஒரு முன் அறிவிப்பாக இருக்கிறது.. ஒரு தொடக்கம் என்றால் ஒரு முடிவு இருக்கவேண்டும். ஒரு தேவை, ஒரு குறிக்கோள், ஓர் இலக்கு இருக்கவேண்டும். ஒரு வாயில் கதவு ஒரு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. அந்தப் பாதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் முடிவடைகிறது.ஒரு தொடக்கம் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த விளைவுகளைத் தொடர்ந்து ஒரு முடிவு ஏற்படுகின்றது.

தொடக்கங்கள் சரியானவைகளாகவும் இருக்கின்றன. தவறானவைகளாகவும் இருக்கின்றன. அவற்றைச் சரியான பின் விளைவுகளும்,தவறானபின்விளைவுகளும் தொடர்கின்றன. நீங்கள் கவனமாக எண்ணினால், தவறான தொடக்கங்களைக் கைவிட்டு சரியான தொடக்கங்களைத் தொடர்ந்து தீய விளைவுகளிலிருந்து தப்பி நல்விளைவுகளை அனுபவிக்கலாம்.

சில வகையான தொடக்கங்களின் மீது உங்களுக்கு எந்த வகையான அதிகாரமோ, கட்டுப்பாடோ கிடையாது. அவை எல்லாம் உங்களை மீறி இந்தப் பிரபஞ்சத்தில், உங்களைச் சூழ்ந்துள்ள இயற்கையால் நடப்பெறுகின்றன. உங்களைப் போன்றே மற்ற மனிதர்களாலும் அவற்றைக் கட்டுப்படுத்தவோ அதிகாரம் செலுத்தவோ முடியாது.

மேலே குறிப்பிட்டுள்ள தொடக்கங்களைப் பற்றி நீங்கள் கவலைப் படத் தேவையில்லை. ஆனால் எந்த வகையான தொடக்கங்களின் மீது உங்களுக்கு முழுக் கட்டுப்பாடும், அதிகாரமும் இருக்கின்றதோ, அவற்றின் மீது உங்களின் முழுக் கவனத்தையும் ஆற்றலையும் செலுத்துங்கள். அவற்றின் விளைவுகள் ஒவ்வொன்றும் இனைந்து ,பிணைந்து , ஊடுருவி நெய்யப்பட்டதே உங்கள் வாழ்வாகும். இந்த வகையான தொடக்கங்கள் உங்கள் எண்ணங்களில், செயல்களில் பரவிக் கிடப்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம். தினசரி வாழ்வில் நீங்கள் சந்திக்கும், எதிர்கொள்ள வேண்டிய பல்வேறு சூழ்நிலைகளின் போது உங்களுக்குள் நிகழும் மனப்பாங்கில், மனக் கண்ணோட்டத்தில் காணலாம். சுருக்கமாகக் கூறினால், உங்கள் வாழ்வு எங்கும் காணலாம். அது நன்மையோ, தீமையோ;- உங்கள் வாழ்வு என்பது நீங்களே அமைத்துக் கொள்கிற உலகம் தான் .

பேரருள் நிறைந்த வாழ்வை வாழ வேண்டும் என்று எண்ணும் போது, கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய மிக எளியத் தொடக்கம் எது என்றால் –ஒவ்வொரு நாளும் அந்த நாளின் ஆரம்பப் பொழுதையும் நாம் எப்படித் தொடங்குகிறோம் என்பதே.

 

ஒவ்வொரு நாளையும் எப்படித் தொடங்குகிறீர்கள்? உறக்கம் களைந்து என்ன மணிப்பொழுதில் எழுகிறீர்கள்? உங்கள் கடமைகளை எவ்வாறு தொடங்குகிறீர்கள்? புனிதமான இந்த வாழ்வின் ஒரு புதிய நாளிற்குள் என்ன மன நிலையோடு அடி எடுத்து வைக்கிறீர்கள்? இந்த முக்கியக் கேள்விகளுக்கு எல்லாம் உங்கள் இதயத்திற்கு நீங்கள் வழங்கும் பதில் என்ன? ஒரு நாளின் சரியான தொடக்கத்தை மகிழ்ச்சியும், தவறான தொடக்கத்தை வருத்தமும் தொடர்வதை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு நாளும் சரியாகத் தொடங்கப்படும் போது மகிழ்ச்சியுடன் மனம் ஒத்திசைவான செயல்கள் வரிசையாக நடைபெறுகின்றன. பேரருள் நிறைந்த வாழ்விற்கு வெகு அருகில் வருகிறோம்.

ஒவ்வொரு நாளும் அதிகாலைப் பொழுது எழுவது என்பது அந்த நாளின் சரியான வலிமையான தொடக்கமாகும். உங்கள் உலக வாழ்வின் கடமைகளை ஆற்றுவதற்கு அவ்வாறு எழவேண்டிய தேவை இல்லை என்றாலும் அவ்வாறு எழ வேண்டும் என ஒரு கடமையை ஏற்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாகும். அதிகாலையில் சோம்பலை முறித்து வலிமையாக அந்த நாளைத் தொடங்குங்கள். ஒவ்வொரு நாளும் பலவீணத்திற்கு இடம் கொடுத்துத் தொடங்கினால் உடல் உறுதியையும் மன உறுதியையும் எவ்வாறு வளர்த்துக் கொள்வீர்கள். தனக்காக மட்டுமே வசதியையும் சுகபோகத்தையும் நாடுவதை எப்போதும் வருத்தம் பின் தொடரும். நெடு நேரம் படுக்கையில் விழுந்துக் கிடப்பவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும் உற்சாகமானவர்களாகவும் முகப்பொலிவு உடையவர்களாகவும் இருக்க மாட்டார்கள். எளிதில் எரிச்சல் அடைபவர்களாகவும், சோர்ந்து போய் விடுபவர்களாகவும், துணிவும், நம்பிக்கையும் இல்லாதவர்களாகவும், புத்துணர்ச்சி இல்லாதவர்களாகவும், தீங்கானவைகளைக் கற்பனை செய்து எண்ணிக் கொண்டிருப்பவர்களாகவும், எல்லா வகையான கவலைகளைக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். நெடுநேரம் படுக்கையில் விழுந்துக் கிடப்பதற்கு இதுதான் அவர்கள் தருகின்ற விலையாகும். சுகபோகத்தில் திளைக்க வேண்டும் என்கிற பேராசை உணர்வு அவன் கண்ணை மறைக்கிறது. தன் நரம்புகளின் பலவீணத்தைப் போக்குவதற்காகவே மது அருந்துவதாகக் குடிகாரன் கூறிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவனது நரம்புகளின் பலவீணத்திற்குக் காரணமே அந்த மது தான் என்பதை எப்படியோ அவன் மறந்து விடுகிறான். அது போலப் படுக்கையில் விழுந்துக் கிடப்பவன் தன்னுடைய கவலைகளைப் போக்குவதற்கு, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதற்குத் தான் அவ்வாறு படுத்துக் கிடப்பதை ஒரு வடிகாலாகக் கருதுகிறான். ஆனால் உண்மையில் அவன் அவ்வாறு படுத்துக்கிடப்பதே அவனது உற்சாகமின்மைக்கும், கவலைக்கும் காரணமாகும். நித்திரை சுகத்தில் திளைக்கவேண்டும் என்று பொதுவாகக் காணப்படும் இந்த ஆவலால் எவ்வளவு பேரிழப்பிற்கு உள்ளாகிறோம் என்பதை ஆண்களும் பெண்களும் அறியாமல் இருக்கிறார்கள். உடல் உறுதியையும், மன உறுதியையும் இழக்கிறார்கள். வளமான வாழ்வு, புத்திக்கூர்மை, மகிழ்ச்சியை இழக்கிறார்கள்.

எனவே, அதிகாலையில் எழுந்து ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள். அதிகாலையில் எழுந்து செய்தே ஆக வேண்டிய முக்கிய வேலை என்று எதுவும் இல்லை என்றாலும் அதிகாலையில் எழவேண்டும் என விரும்பி எழுங்கள். இயற்கையின் பேரழகைக் கண்டுகளிக்க உலாவச் செல்லுங்கள். ஒரு புத்துணர்ச்சியை, ஒரு பூரிப்பை, ஒரு மகிழ்ச்சியை இவற்றோடு ஒரு மன நிம்மதியையும் பெறுவீர்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இது நீங்கள் விரும்பி எழுந்த முயற்சிக்கு இயற்கை உவந்து அளித்தப் பரிசாகும். ஒரு நல்ல செயலை மற்றொரு நல்ல செயல் பின் தொடரும். அதிகாலையில் எந்த ஆரவாரமுமற்ற அமைதி நிலவும். எந்தக் குறிக்கோளும் இல்லை என்றாலும் ஒரு மனிதன் அதிகாலையில் எழும்போது அந்த அதிகாலைப் பொழுது அவன் மனம் தெளிவடைவதற்கும், அவன் மனம் சாந்தமடைவதற்கும் உதவுகின்றது. அந்த அதிகாலை நடை அவன் செய்ய வேண்டிய காரியங்களைக் குறித்துச் சிந்திக்க அவனுக்கு நேரத்தை வழங்குகிறது. வாழ்வையும், வாழ்வின் சிக்கல்களையும், அவனையும், அவனது பல்வேறு கடமைகளையும் தெளிந்தக் கண்ணோட்டத்தில் காண அவனுக்கு வாய்ப்பு அளிக்கின்றது. நாளடைவில் தன் மனதை இசைந்து செயல்படுவதற்குத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் குறிகோளோடு அவன் அதிகாலை எழ ஆரம்பிக்கப் பின்பு எந்த நெருக்கடியையும், எல்லாச் சிக்கலையும் சந்தித்துத் தீர்ப்பதற்கான அமைதியான வலிமையையும், தெளிந்த அறிவையும் அவன் பெறுவான்.

அதிகாலை வேளையில் மிகுந்த ஆற்றலோடு ஆன்மீக உணர்வலைகள் பரவிக் கிடக்கின்றன. தெய்வீக மவுனமும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பேரமைதியும் நிலவுகிறது. உறங்கிக் களிக்க ஏங்கும் மனதை உறுதியோடும் வலிமையோடும் கைவிட்டுக் காலை இளங்கதிரை வரவேற்க மலையின் மீது ஏறுபவன், அவ்வாறு வளர்த்துக்கொண்ட உள்ள உறுதியினாலும், வலிமையினாலும் உண்மை, பேர் அருள் என்ற மலைகளின் பல உயர்ந்த சிகரங்களையும் தொடுவான்.

சரியாகத் தொடங்கப்பட்ட நாளின் அடையாளமாக ஒருவனைப் பின் தொடர்வது அவன் அவனது வீட்டின் உறவுகளை உள்ளன்போடும் ஆதரவோடும் உற்சாகத்தோடும் சந்திப்பதாகும். பின்பு அந்த நாளில் முடிக்கவேண்டிய செயல்களையும், கடமைகளையும் குறித்து ஆராய்ந்து உறுதியோடு அவற்றை மேற்கொண்டு நிறைவேற்றுவதாகும்.

ஒவ்வொரு நாளையும் ஒரு புதிய வாழ்வின் தொடக்கமாகக் கருத வேண்டும் என்று நினைப்பது ஆழ்ந்த அறிவான நிலையாகும். அன்றைய நாளில் ஒருவன் தனது எண்ணங்களை, செயல்களை, வாழ்வைப் புத்துணர்வோடு இதுவரை இருந்ததை விடச் சிறந்ததாக மேன்மையாக வாழலாம்.

ஒவ்வொரு நாளும் ஒரு புது ஆரம்பமே .

ஒவ்வொரு காலைப் பொழுதிலும் இந்த உலகம் புதியதாக்கப்படுகிறது.

பாவங்களையும், துக்கங்களையும் பாரமாகச் சுமந்துக் கொண்டிருப்பவர்களே!

ஓர் அழகான நம்பிக்கை இங்கே ஓளி வீசீக் கொண்டிருக்கிறது.

எல்லோருக்கும் நம்பிக்கைத் தருவதற்கு அது காத்துக்கொண்டிருக்கிறது!

நேற்றைய குற்றங்களையும், தவறுகளையும் எண்ணி வருந்தியவாறே இருந்து இன்றைய பொழுதை சரியாக வாழாமல் வீணாக்கிவிடாதீர்கள்! இன்று நாம் களங்கமற்று வாழ விரும்பினால் அதை நேற்று செய்த தவறினால் தடுக்க முடியாது என நம்புங்கள்!. இன்றைய பொழுதை சரியாகத் தொடங்குங்கள். நேற்று வரைக் கிடைத்த அனுபவப் பாடங்களின் துணையோடு இன்றைய புதிய நாளை இது வரை வாழ்ந்த நாட்களை விட ஒருபடி மேலாக வாழுங்கள். ஆனால் சிறந்த முறையில் தொடங்காமல் அந்த நாளைச் சிறந்த நாளாக வாழ்வது எளிதானதல்ல.ஒரு நாள் ஆரம்பிக்கப்படும் விதம் அந்தநாள் முழுதும் பரவி இழையோடும்.

 

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு ஆரம்பம் ஒரு பொறுப்பு மிக்க குறிப்பிட்ட செயல்திட்டத்தை / நடவடிக்கையை எவ்வாறு தொடங்குகிறோம் என்பதாகும். மனிதன் ஒரு வீட்டை எவ்வாறு கட்டத் தொடங்குகிறான்? கட்டி முடிக்கப்பட வேண்டிய வீட்டின் வரைப்படத்தை முதலில் கைக்கொள்கிறான். பின்பு எல்லாப் பகுதிகளையும் முழுமையாக , நுணுக்கமாக ஆராய்ந்து செயல்திட்டத்தை வடிவமைத்துக் கொள்கிறான். அதன் பின்பு அத்திட்டத்திற்கு ஏற்ப அடித்தளத்தில் இருந்து தொடங்குகிறான். அவன் தொடக்கத்தின்/ ஆரம்பத்தின் / வரைபடத்தின் /செயல்திட்டத்தின்  முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளாதவனாக இருந்தால் அந்தக் கட்டிடத்திற்காக மேற்கொள்ளப்பட்ட எல்லா உழைப்பும் வீணாகிவிடும். ஒருவேளை அந்தக் கட்டிடம் பாதியில் இடிந்து விழாமல் முழுமை அடைந்து இருந்தால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்துடனேயே எந்தப் பயன்பாடுமின்றி விளங்கும். இந்த விதி எல்லா முக்கியச் செயல்களுக்கும் பொருந்தும். தெளிவான மனத்திடமும் அதைத் தொடங்கும் விதமும் இன்றியமையாதது.

இயற்கையின் படைப்பில் எந்தக் குறையையும் காணமுடியாது. எதுவும் அரைகுறையாக விட்டுவிடப்படவில்லை. அவள் குழப்பத்தை அறவே நீக்கி இருக்கிறாள். அல்லது குழப்பம் என்பது முழுவதுமாக அவளிடமிருந்து நீங்கிவிட்டது. ஓர் ஒழுங்குமுறை, குழப்பமற்ற தெளிவான உறுதி, குறிக்கோள்/பயன்பாடு என்பவை எல்லாம் இயற்கையின் செயல்பாடுகளில் எங்கும் என்றும் எப்போதும் காணப்படும். இயற்கையின் இச்செயல்பாடுகளை எவன் கருத்தில் கொள்ளாமல் செயல்படுகிறானோ, அவன் உடனுக்குடன் தன்னுடைய ஆற்றலை முழுமையை வெற்றியை இழக்கிறான். இயற்கையின் படைப்பில் எந்தக் குறையையும் காணமுடியாது. எதுவும் அரைகுறையாக விட்டுவிடப்படவில்லை. அவள் குழப்பத்தை அறவே நீக்கி இருக்கிறாள். அல்லது குழப்பம் என்பது முழுவதுமாக அவளிடமிருந்து நீங்கி விட்டது.

ஒரு குறிக்கோளற்ற வாழ்வு

அது தொடங்கிய நொடி முதல்

எவ்வளவு முயன்றும் எதையும் விளைவிக்காத

வறண்ட நிலமாகவே பயன்பாடின்றி இருக்கும்.

 

எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஒரு திட்டத்தை மனதில் வகுத்துக் கொள்ளாமல் ஒருவன் வியாபாரத்தையோ, தொழிலையோ தொடங்கினால் அவன் தன் முயற்சிகளில் தெளிவில்லாமல், குழப்பத்துடன் செயல்பட்டுத் தோல்வி அடைவான். ஒரு வீட்டைக் கட்டும்போது செயல்படும் விதிமுறைகள் ஒரு நிறுவனத்தை நிலைநிறுத்த முயலும் போதும் செயல்படுகின்றன. ஒரு தெளிவானத் திட்டத்தைக் குழப்பமற்ற முயற்சிகளுடன் கூடிய செயல்முறைகளும், குழப்பமற்ற செயல்முறைகளை ஒழுங்குடன் கூடிய விளைவுகளும் பின் தொடரும். ஒரு முழுமையான சிறப்பான வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும்.

இந்த விதி இயந்திரமயமான செயல்பாடுகளுக்கும் பொருளாதார நிறுவனங்களுக்கும் மட்டும் பொருந்தவில்லை. எல்லாவித செயல்பாடுகளும் இந்த விதிக்கு உட்படுகின்றன. நூலாசிரியனின் புத்தகம், ஓவியனின் ஓவியம் , பேச்சாளனின் உரை, சீர்திருத்தவாதியின் உழைப்பு , விஞ்ஞானியின் புது இயந்திர உருவாக்கம், இராணுவத் தளபதியின் போர்த்தாக்குதல், இவை எல்லாம் மனதில் திட்டமிடப்பட்ட பின்பே வெளியே செயல் வடிவமாகின்றன. மனதின் உருவகத்திற்கும், உண்மையில் உருவாகிய ஒன்றிற்கும் உள்ள ஒற்றுமை, தனித்தன்மை, சிறப்புகளே வெற்றியின் அளவை முடிவு செய்யும்.

வெற்றிகரமானவர்கள் யார்? பலரது மனங்களைக் கவரும் தன்மைக் கொண்டவர்கள் யார்? நல்ல மனிதர்கள் யார்? அவர்கள் யார் என்றால் மற்ற விஷயங்களுக்கு நடுவில் தொடங்கும் ஒன்றை உடனே அடையாளம் கண்டு அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதில் ஒளிந்திருக்கும் நன்மையைப் பயன்படுத்திக் கொள்பவர்களே! முட்டாள்கள் அவற்றை அடையாளம் காணாமல் புறம் தள்ளி விடுகிறார்கள்.

எல்லாத் தொடக்கங்களையும் விட மிக முக்கியத் தொடக்கம் ஒன்று இருக்கின்றது. பேரருளோ, பெரும்துன்பமோ அதைச் சார்ந்தே இருக்கின்றது. இருந்தும் அது கவனத்தில் கொள்ளப்படாமல் உணரப்படாமல் இருக்கின்றது. அது எது என்றால் நம்முடைய இயல்பு நிலையில் நம் மனதின் ஆழத்தில் பதியும் எண்ணங்களே ஆகும். உங்களுடைய முழு வாழ்வும் அந்த எண்ணங்களைத் தொடர்ந்து நிகழும் செயல்களை பின் தொடரும் விளைவுகளின் தொகுப்பே. அந்த விளைவுகளுக்கு ஊற்றுக்கண் உங்களுடைய மனதில் பதிந்திருக்கும் உங்களுக்குச் சொந்தமான எண்ணங்களே. எல்லா ஒழுக்க நெறிகளையும் வடிவமைப்பது எண்ணங்களே. எல்லாச் செயல்களும்  (அவை நன்றோ தீதோ ) கண்களால் காணப்படும் எண்ணங்களே. மண்ணில் புதைந்த விதை ,ஒரு மரமோகவோ அல்லது ஒரு செடியாகவோ வளர ஆரம்பப் புள்ளி ஆகின்றது. அந்த விதை முளை விட்டு பின் செடியாகவோ மரமாகவோ வெளிச்சத்திற்கு வந்து வளர்கின்றது. மனதில் ஆழப்பதியும் எண்ணமானது அந்த எண்ணத்திற்கு ஏற்ற ஒழுக்கமுறையை ஏற்படுத்தும். அது மனதிற்குள் வேர்களைச் செலுத்தி இறுகப்பற்றிக் கொள்ளும். அடுத்து செயல்களாகவோ, ஒழுக்கமுறைகளாகவோ வெளிச்சத்திற்கு வரும். பின்பு குணமாகவும், விதியாகவும் ஆகின்றது.

வெறுப்பை உமிழும் எண்ணங்கள், கோபக் கனலை மூட்டும் எண்ணங்கள், பொறாமையும், பேராசையும் நிறைந்த எண்ணங்கள், தூய்மையற்றக் களங்கமான எண்ணங்கள் தவறான தொடக்கத்திற்கு அறிகுறியாகும். அவை முடிவில் துன்பத்தையே கொடுக்கும். அன்பான, கனிவான, இரக்கமான, சுயநலமற்ற, தூய எண்ணங்கள் ஒரு சரியான தொடக்கத்திற்கு அறிகுறியாகும். அவை பெருமகிழ்ச்சிக்கும், பேரானந்தத்திற்கும், அழைத்துச் செல்லும். இது எவ்வளவு எளிய, தெளிவான ,சந்தேகத்திற்கு இடமளிக்காத உண்மை. இருந்தும்  நினைவில் கொள்ளாமல் மீறப்படுகின்றது. மிகக் குறைந்த அளவே உணரப்படுகின்றது.

ஒரு விதையை எங்கு, எப்பொழுது, எப்படி விதைக்க வேண்டும் என்று கற்று அறிந்துக் கொண்டுள்ள தோட்டக்காரன் மிகுந்த பயனையும், பலனையும், தோட்டக்கலைக் குறித்த அறிவையும் பெறுகிறான். நன்கு வளரும் செடிகளை பார்க்கும் போது அதை வளர்க்கத் தொடங்கியவனது உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கின்றனது. தன் மனதிற்குள் வலிமையான எண்ணங்களை, நிறைவான எண்ணங்களைப் பரந்த நோக்கமுடைய எண்ணங்களை எவ்வாறு விதைக்க வேண்டும் என்று பொறுமையாகக் கற்றறிபவன் வாழ்வில் மிகுந்த பயனைப் பெறுகிறான். மெய்யறிவை அதிகம் பெறுகிறான். தன் மனதிற்குள் தூய்மையான, சிறந்த எண்ணங்களை விதைப்பவனைப் பேரருள் தேடி வருகின்றது.

சரியான எண்ணங்களை, சரியான செயல்களை அன்றி வேறு எதுவும் பின் தொடர முடியாது. சரியான செயல்களை சரியான வாழ்வை அன்றி வேறு எதுவும் பின் தொடர முடியாது. சரியான வாழ்வை வாழும் போது எல்லாப் பேரருளும் வருகின்றது.

தன்னுடைய எண்ணங்களின் தன்மையையும் தன் வாழ்வில் அவற்றின் முக்கியப் பங்கையும் உணர்பவன்; தீய எண்ணங்களைக் களைந்து அதற்கு பதிலாக நல்லெண்ணங்களை நடத் தினமும் அயராது முயல்பவன்; – எண்ணங்களின் தன்மையில் இருந்தே முடிவுகள் ஒவ்வொன்றும் ஆரம்பம் ஆகின்றது , தன் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும் திறன் கொண்டவைத் தனது எண்ணங்கள், ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஊடுருவிப் புதிய வெளிச்சத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை எண்ணங்கள் என்று கண்டறியும் நிலையை இறுதியில் அடைவான். இவ்வாறு கண்டுணர்ந்தப் பின் நல் எண்ணங்களை மட்டுமே எண்ணுவான். மனதில் எழும் எண்ணங்களின் தன்மையைக் கவனித்துப் பேரருளுக்கும், பெருநிம்மதிக்கும் அழைத்துச் செல்லும் எண்ணங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தொடங்குவான்.

தீய எண்ணங்கள் உதிக்கும்போது துன்பம் பிறக்கும். வளரும் போது துன்பத்தைக் கொடுக்கும். அவை கனிகளை ஈன்றெடுக்கும் போதும் துன்பத்தையே கொடுக்கும். நல் எண்ணங்கள் உதிக்கும்போது மகிழ்ச்சிப் பிறக்கும். வளரும் போதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் – அவை ஈன்றெடுக்கும் கனிகளும் மகிழ்ச்சியையே கொடுக்கும்.

எவை எல்லாம் சரியான தொடக்கங்கள் என உள் உணர்ந்துக் கொண்டு அவற்றைத் தொடங்கி மேற்கொள்வதே ஒருவனை விவேகத்திற்கும், ஞானத்திற்கும் அழைத்துச் செல்லும் பாதையாகும். நிலையான மகிழ்ச்சியின் ஊற்றுக் கண்ணும், முதலும் முடிவுமாக நின்று எல்லாவற்றையும் தழுவும் முக்கியமான ஒன்று மனதிற்குள் நிகழும் எண்ண அசைவுகளின் ,எண்ண ஓட்டங்களின் தொடக்கம் ஆகும். மனதில் நிகழும் இந்த எண்ண அசைவுகள் தான் சுயக்கட்டுப்பாடு, மன உறுதி, தளராத மனம், வலிமை, தூய்மை, கனிவு, உள் உணர்வு, ஒன்றை எல்லாக் கோணங்களிலும் முழுமையாகப் பார்க்கும் தன்மை, போன்றவற்றிற்குக் காரணமாகும். இவை எல்லாம் ஒருவனை நிறைவான வாழ்வு வாழ வழி செய்யும். எவனது எண்ணங்கள் தீங்கின்றி சிறந்தவையாக இருக்கின்றனவோ அவன் துக்கத்தை நெருங்க முடியாமல் செய்துள்ளான். அவனது ஒவ்வொரு கனப்பொழுதும் நிம்மதியாக இருக்கின்றது. அவன் காலம் மகிழ்ச்சியால் சூழப்பட்டு இருக்கின்றது. பேரருளை முழுமையாக அவன் பெறுகிறான்.

Share This Book

Feedback/Errata

Comments are closed.