6 உள்ளத்தின் தியாகங்கள்  –

 

(மறைவாக விட்டுக்கொடுப்பது

திரையிட்டு செய்யும் துறவுகள் )

 

கடந்துசென்றுவிட்ட

அழகியஈடன்தோட்டத்தைப்பற்றியும்

வரப்போகின்றசொர்கத்தைப்பற்றியும்

மனிதன்ஏன்கவலைப்படவேண்டும்

சொர்க்கம் நம்மைச் சுற்றியும் நமக்குள்ளேயுமே இருக்கும்போது..

 

பணிவு தான் எல்லா உயர்குணங்களின் அடித்தளம்.

அடிமட்டத்திலிருந்துஆரம்பிக்கின்றவன்

சந்தேகத்திற்கு இடமளிக்காமல் மிக உறுதியாகக் கட்டுகிறான் .

…பெய்லி

 

 

உண்மை நமக்குள்ளே தான் இருக்கின்றது.

அது வெளிப்பொருட்களிலிருந்து மேல் எழவில்லை,

உங்கள் நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

….ப்ரவுனிங்

 

 

 

உண்மையின் ஒரு புரிந்து கொள்ள முடியாத புதிரான இயல்பு என்னவென்றால் நாம் விட்டுக் கொடுக்கும் போது பெறுகின்றோம். இறுகப் பற்றிக் கொள்ளும்போது இழக்கின்றோம். ஒரு தாழ்வான குணத்தை இழக்கும் போது தான் உயர்வான ஒரு குணத்தைப் பெற முடியும். சுயநலக் கொண்டாட்டம் ஒன்றைக் கைவிடும்போது தான் புனிதமான ஒன்றை ஏற்க முடியும். உண்மையை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தன்முனைப்பில் தவறிழைக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறது.

புதிய ஆடையை உடுத்திக் கொள்ள விரும்புபவன் பழைய ஆடையைக் களைய வேண்டும். உண்மையைக் காண விரும்புபவன் பொய்யைத் துறக்க வேண்டும். தோட்டக்காரன் பயனில்லாத களைகளையும், பதர்களையும் பறித்து எறிகிறான். அவை சருகுகளாகும் போது அவற்றைக் கனிகளைக் காய்க்கும் செடிகளுக்கு உரமாக இடுகிறான்.பிடுங்கி எறியப்படும் தவறுகள் என்னும் உரத்தால் தான் மெய்யறிவு என்னும் மரம் செழித்து வளரும். ஒன்று வளர்வதும் பெருகுவதும் வேறொன்றைத் துறப்பதாலும் இழப்பதாலுமே.

உண்மையான வாழ்வை, பேரருள் பொழியும் வாழ்வை, கொந்தளிக்கும் உணர்ச்சிகளும்  வேதனைகளும் இல்லாத வாழ்வை;- விட்டுக் கொடுப்பதாலும், துறப்பதாலுமே அடைய முடியும். வெளி உலகத்தில் உள்ள பொருட்களைத் துறப்பதால் அல்ல , உள்ளத்தில் உள்ள தவறுகளையும் மாசுகளையும் துறப்பதாலேயே. காரணம் அவை தான், அவை மட்டுமே ,வாழ்வை துன்ப மயமாக்குகின்றன. நன்மை ஆனதையும், உண்மை ஆனதையும் துறக்கத் வேண்டியதில்லை. தீமை ஆனதையும் பொய் ஆனதையுமே துறக்க வேண்டும். எனவே இவற்றைத் துறப்பதால் எந்த இழப்பும் இல்லை,முழுமையான ஆதாயம் தான். எனினும், இது ஆரம்பத்தில் மிகப் பெரிய இழப்பாகக் கண்களுக்குத் தெரியும். துறப்பதும் தியாகம் செய்வதும் மிகுந்த வேதனையைத் தரும். ஆனால் இதற்குக் காரணம் சுயநலத்தை எப்போதும் பின் தொடரும் சுயமாயையும், ஆன்மீக பார்வை இன்மையுமே ஆகும். சுயநலத்தின் ஒரு பகுதியை வெட்டும்பொது வலி கண்டிப்பாக ஏற்படும். குடிக்கு அடிமையானவன் குடியை இனி அருந்தக் கூடாது என்று உறுதி ஏற்றுக் கொள்ளும் போது மிகுந்த சோதனையும், வேதனையுமான கால கட்டத்தைக் கடக்க வேண்டி இருக்கும். மிக மகிழ்ச்சியான ஒன்றை அவன் இழந்துவிட்டதாக எண்ணுவான். ஆனால் உறுதியாகச் செயல்பட்டு முழுமையாக வெற்றிப் பெறும் போது, குடியின் மேல் அவன் கொண்ட வெறி இறக்கும் போது, அவன் மனம் அமைதியையும் தெளிவையும் பெறும் போது, தனது சுயநலமிக்க ஒரு மிருக சுகத்தை இழந்து அதற்குப் பதிலாகப் பல மடங்கு நன்மை அளிக்கும் ஒன்றை அடைந்துள்ளான் என்று உணர்வான். தீங்கானதையும், பொய்யானதையுமே இழந்துள்ளான்; பாதுகாத்து வைத்துக் கொள்ளத் தகுதியற்ற ஒன்றை இழந்துள்ளான்; வைத்துக் கொண்டிருந்தால் துன்பம் அளிக்கக் கூடிய ஒன்றைத் தான் இழந்துள்ளான். ஆனால் அவன் எதை அடைந்துள்ளான் – நல் குணத்தை, சுய கட்டுப்பாட்டை, மனத் தெளிவை, மன நிம்மதியை அடைந்துள்ளான். நன்மையானதை, உண்மையானதை, பாதுகாத்து வைத்துக்கொள்ளத் தேவையானதை, தகுதியானதை அடைந்துள்ளான்.

உண்மையான தியாகமும் இந்தக் குடியை துறப்பது போன்றது தான். முதலில் மிக வலி நிறைந்ததாக இருக்கும். அவை முழுமையாக முடியும் வரையிலும் வலி நிறைந்ததாகவே இருக்கும்.ஒன்றைத் துறப்பதும், விட்டுக் கொடுப்பதும் , தியாகம் செய்வதும் கடினமாக இருக்கின்ற காரணத்தால் தான் மக்கள் அதை மேற்கொள்ளத் தயங்குகிறார்கள் . தங்கள் சுயநல ஆசையைக் கைவிடச் செய்யும் ஒரு வலிமையான காரணத்தை அவர்கள் மனம் இன்னும் ஏற்கவில்லை. தங்களுடைய சுயநல ஆசைகளை, விருப்பங்களை ஏன் நிறைவேற்றிக் கொள்ளக்கூடாது ? இனிமையானதை இழந்து கசப்பானதை ஏன் பெற வேண்டும். மகிழ்ச்சிகளையும் கொண்டாட்டங்களையும் ஏன் துறக்க வேண்டும்? என்று நினைக்கிறார்கள் . ஆனால் இவ்வாறு கடினமாக இருக்க வேண்டும் என்பதே இயற்கை விதி. ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட வகையான சுயநலத்தை விட்டொழித்தால் அவனது மகிழ்ச்சி பல மடங்கு கூடிவிடும் என்று ஒரு வேளை மனிதன் முன் கூட்டியே அறியும் நிலையிருந்தால், சுயநலத்தை ஒழிப்பது, இப்பொழுது இருப்பதை விட இன்னும் கடினமாகிவிடும். காரணம் அதிக மகிழ்ச்சி வரப்போகின்றது என்னும் பேராசை மேலோங்கியுள்ளதால் அவனது சுயநலம் இன்னும் அதிகமாகி விடுகின்றது.

எந்த வித தவிப்போ முனுமுனுப்போ இல்லாமல் முழு மனதுடன் இழப்பதற்குத் தயாராக இருந்தால் மட்டுமே ஒருவனால் சுயநலத்தைத் துறக்க முடியும் . அதைத் துறந்த பின் பேரானந்த நிலையை அடைய முடியும். எந்த வகையான பலனையோ பரிசுகளையோ எதிர்பார்க்காமல் இழப்பதற்கு அவன் தயாராக இருக்க வேண்டும். இத்தகைய மனநிலை தான் சுயநலத்தைத் துறப்பதாகும். ஒரு மனிதன் தன் சுயநல பழக்க வழக்கங்களை எந்த மறுப்பும் எதிர்ப்பும் இன்றித் துறக்க விரும்ப வேண்டும். காரணம் அவை அருகதையற்றதும் பொய்யானதுமாகும். தனக்குத் தனியாக எந்தப் பலனையும் அறுவடை செய்துக் கொள்ளாமல், பரிசுகளையும் விருதுகளையும் எதிர்பார்க்காமல் தன்னுடன் இருப்பவர்களின் நலத்திற்காக துறப்பதற்கும் தியாகம் செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். தனக்கு அதனால் இழப்புகள் ஏற்பட்டாலும் சரி, தன் மகிழ்ச்சியையும், கொண்டாட்டங்களையும் இழந்தாலும் சரி,   ஏன், தன் உயிரே போனாலும் சரி, அதைச் செய்வதால் இந்த உலகை இன்னும் அழகாக மகிழ்ச்சியாக மாற்ற முடியும் என்றால் அதைச் செய்ய முன் வர வேண்டும். ஆனால் உண்மையில் எந்த இழப்பிற்காவது அவன் உள்ளாகிறானா? பேராசை பிடித்தவன் தங்கத்தின் மீது இருக்கும் ஆசையைத் துறப்பதால் ஏதாவது இழக்கின்றானா? திருடன் தன் திருட்டுத் தொழிலை கைவிடுவதால் எந்த இழப்பிற்காவது உள்ளாகிறானா? இகழ்ச்சியான கொண்டாட்டங்களிலிருந்து விலகுவதால் சுகபோக வாழ்வை வாழ்ந்தவன் எதையாவது இழக்கின்றானா? எந்த மனிதனும் தன் சுயநலத்தை,சுயநலத்தின் ஒரு பகுதியை துறப்பதால் இழப்பிற்கு உள்ளாவதில்லை. ஆனால் அவன் துறந்தால், தியாகம் செய்தால், இழப்பிற்கு உள்ளாவோம் என அஞ்சுகிறான். அதனாலேயே துன்பப்படுகிறான். இங்கே தான் தியாகமும், துறப்பதும்,விட்டுக் கொடுப்பதும் தேவைப்படுகிறது. இங்கே தான் இழப்பதால் ஒருவன் பெறுகிறான்.

 

எல்லா உண்மையான தியாகங்களும், துறப்பதும், விட்டுக்கொடுப்பதும் உள்ளத்தில் தான் இருக்கின்றன. அது மறைவாக, ஆன்மீகமாக உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து எழும் உணர்ச்சியில் செய்யப்படுகிறது. தன்னை விட்டுக் கொடுக்க வேண்டும் , துறக்க வேண்டும், தன் நலத்தைத் தியாகம் செய்ய வேண்டும் என்னும் நிலையை மனிதர்கள் அனைவரும் விரைவாகவோ அல்லது காலம் தாழ்ந்தோ தங்கள் ஆன்மீக பயணத்தில் ஒரு நாள் இல்லை ஒருநாள் எடுத்தே ஆக வேண்டும். ஆனால் இந்த ”தன்னை மறுப்பது” என்பது எதில் அடங்கி இருக்கிறது? அது வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது? அதை எங்கே எல்லாம் தேடிக் கண்டு அடைய வேண்டும்? அது எதில் அடங்கியிருக்கிறது என்றால் சுயநல எண்ணங்களுக்கும், சுயநல செயல்களுக்கும் நாள் தோறும் அடிபணியாமல் இருப்பதில் அடங்கியிருக்கிறது. தினமும் நாம் பிறருடன் பொதுவாகக் கலந்துப்பேசி, செயல்படும் நேரங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடினமான இக்கட்டான சூழ்நிலைகளில், அது கண்டு அடையப்படுகிறது.

 

 

எல்லா உண்மையான தியாகங்களும், துறப்பதும், விட்டுக்கொடுப்பதும் உள்ளத்தில் தான் இருக்கின்றன. அது மறைவாக, ஆன்மீகமாக உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து எழும் உணர்ச்சியில் செய்யப்படுகிறது. தன்னை விட்டுக் கொடுக்க வேண்டும் , துறக்க வேண்டும், தன் நலத்தைத் தியாகம் செய்ய வேண்டும் என்னும் நிலையை மனிதர்கள் அனைவரும் விரைவாகவோ அல்லது காலம் தாழ்ந்தோ தங்கள் ஆன்மீக பயணத்தில் ஒரு நாள் இல்லை ஒருநாள் எடுத்தே ஆக வேண்டும். ஆனால் இந்த ”தன்னை மறுப்பது” என்பது எதில் அடங்கி இருக்கிறது? அது வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது? அதை எங்கே எல்லாம் தேடிக் கண்டு அடைய வேண்டும்? அது எதில் அடங்கியிருக்கிறது என்றால் சுயநல எண்ணங்களுக்கும், சுயநல செயல்களுக்கும் நாள் தோறும் அடிபணியாமல் இருப்பதில் அடங்கியிருக்கிறது. தினமும் நாம் பிறருடன் பொதுவாகக் கலந்துப்பேசி, செயல்படும் நேரங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடினமான இக்கட்டான சூழ்நிலைகளில், அது கண்டு அடையப்படுகிறது.

உள்ளத்தில் யாரும் அறியாமல் செய்யப்படும் தியாகங்கள் பல இருக்கின்றன. அந்தத் தியாகங்களை மேற்கொள்வது சுலபமல்ல ,மிகுந்த முயற்சியும் வலியை பொறுத்துக் கொள்ளும் பொறுமையும் தேவை என்றாலும் கூட அந்தத் தியாகங்கள் அவற்றைச் செய்பவனுக்கும் சரி, யாருக்காகச் செய்யப்படுகிறதோ அவர்களுக்கும் சரி அளவில்லாத அருளை வழங்கக் காத்திருக்கும். மனிதர்கள் மிகப் பெரிய செயல்களைச் செய்ய ஆவலோடு இருக்கிறார்கள். அவர்களது அனுபவத்திற்கு மிதமிஞ்சிய தியாகத்தைச் செய்ய எண்ணுகிறார்கள்.ஆனால், எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு மிக அருகில் இருக்கும், தாங்கள் செய்தே ஆக வேண்டிய சிறிய தியாகத்தைச் செய்யாமல் கண்மூடி தட்டி கழிக்கிறார்கள். உங்களைத் தவறான திசைக்கு அழைத்துச் செல்லும் பாவம் எங்கே ஒளிந்துக் கொணடு இருக்கிறது? உங்களது பலவீணம் எங்கே ஒளிந்துக் கொண்டு இருக்கிறது? உங்களது தூண்டுதலான இச்சைகளால் எங்கெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறீர்கள்? அங்கே நீங்கள் உங்களது முதல் தியாகத்தை செய்யுங்கள். அவ்வாறு செய்யும் போது உங்களது நிம்மதிக்கான வழி திறப்பதையும் காண்பீர்கள். ஒருவேளை அது உங்கள் கோபமாகவோ அல்லது இரக்கமற்ற குணமாகவோ இருக்கலாம். அந்தக் கோபமான உணர்வையும், வார்த்தையையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறீர்களா? அந்த இரக்கமற்ற எண்ணத்தையும் செயலையும் கைவிட தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் தவறாக இரக்கமின்றி நடத்தப்படுவதை, ஏசப்படுவதை, பழிசுமத்தப்படுவதை,, பதிலுக்கு நீங்களும் அதே போன்று நடந்து கொள்ளாமல் பொறுமையாகக் கையாள தயாராக இருக்கிறீர்களா? இல்லை அதற்கும் மேலாக அந்த இருண்ட கறைப் படிந்த செயல்களுக்கு அன்பையும் அரவணைப்பையும் திரும்பி தரத் தயாராக இருக்கிறீர்களா? தயாராக இருக்கிறீர்கள் என்றால் பேரழகான பெரு நிம்மதிக்கு அழைத்துச் செல்லும் உள்ளத்தின் தியாகங்களை செய்ய நீங்கள் தயாராகிவிட்டிர்கள்.

 

நீங்கள்  கோபத்தோடும் இரக்கமின்றியும் நடந்து கொள்கிறீர்கள் என்றால் அதைக் கைவிடுங்கள். இந்தக் கடுமையான, இரக்கமற்ற, தவறான மன நிலைகள் உங்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வரவில்லை, கொண்டு வரப்போவதும் இல்லை. அவற்றால் உங்களுக்குப் படபடப்பையும், துன்பத்தையும், ஆன்மீக பார்வை இழப்பையும் தவிர வேறு எதையும் கொண்டு வர முடியாது. மற்றவர்களுக்கும், அவை துக்கத்தைத் தான் தரும். ஒரு வேளை நீங்கள் கூறலாம் ”ஆனால் அவர் தான் என்னிடம் முதலில் மிகக் கடுமையாக நடந்துக் கொண்டார், என்னை அநியாயமாக நடத்தினார்” என்று , அது உண்மையாகவே இருக்கட்டும் – அது ஒரு பரிதாபப்படத்தக்க காரணமாக இல்லையா? ஒரு பலவீணமான பாதுகாப்பைப் பயனற்ற அடைக்கலத்தை அல்லவா நீங்கள் அடைந்துள்ளீர்கள். உங்கள் மீது அவருடைய இரக்கமின்மை தவறானது, வலியையும் வேதனையையும் தருகிறது என்றல்ல. உங்களது இரக்கமின்மையும் அவருக்கு அதையே தானே தரும். இன்னொருவர் உங்கள் மீது இரக்கமற்று இருப்பது, உங்களது இரக்கமின்மைக்குக் காரணமாக இருக்கக் கூடாது. ஆனால் உங்களிடமிருந்து இன்னும் அதிக இரக்கம் வெளிப்படுவதற்குக் காரணமாக இருக்க வேண்டும். நீர் அடித்து நீர் விலகுமா? இரக்கமின்மைக்குப் பதிலாக இரக்கமின்மையைத் தருவது இரக்கமின்மை குறைவதற்கு வழி செய்ய வில்லை ,கூடவே வழி செய்கின்றது.நெருப்பைக் கொண்டு நெருப்பை அணைக்க முடியுமா? கோபத்தால் கோபத்தை வெல்லமுடியாது.

 

எல்லா இரக்கமின்மையும் எல்லாக் கோபத்தையும் விட்டு விடுங்கள். சண்டையும் சச்சரவும் நடைபெற இரண்டு பேர் தேவை. இரண்டாவது ஆளாக இருக்காதீர்கள். எவராவது உங்கள் மீது கோபத்தோடு இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்றால் நீங்கள் எங்கேயாவது தவறாக நடந்துக்கொண்டீர்களா என யோசித்துப் பாருங்கள். நீங்கள் தவறாக நடந்து கொண்டீர்களோ இல்லையோ கோபமான வார்த்தையையும் இரக்கமற்ற செயலையும் பதிலுக்கு வழங்காதீர்கள். அமைதியாக , உங்களைக் கட்டுப் படுத்திக்கொண்டு, அன்பான மனோபாவத்தில் இருங்கள். சரியானவற்றைத் தொடர்ந்து செய்தவாறு தவறு செய்பவன் மேல் இரக்கமும் கருணையும் கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு வேளை நீங்கள் அடிக்கடி பொறுமை இழந்து எரிச்சல் படுகிறீா்கள் என்றால் அவை இரண்டையும் நீங்கள் கைவிடுவதே அடுத்து நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றாகும். உங்கள் பொறுமையின்மையைக் கைவிடுங்கள். எந்த இடத்தில், எந்தச் சூழ்நிலையில் உங்களை அது பற்றிக் கொள்கிறதோ அதே இடத்தில் அதற்கு அடிப்பணியாமல், அதை வெல்லுங்கள். அதன் மாய வலையில் சிக்கக் கூடாது. அதை அறுத்து எறிய வேண்டும் என்று மாறாத உறுதியோடு இருங்கள். மற்றவர்களது தகுதி குறைவான செயல்களும் முட்டாள் தனங்களும் தான் உங்களது பொறுமையை இழக்கச் செய்கின்றன என்ற மனநிலையிலிருந்து விடுப்படுங்கள். அவர்களுக்குத் தகுந்த பதில் கொடுக்க நீங்கள் பொறுமை இழக்கத் தான் வேண்டும் என்று நினைக்காதீர்கள். பொறுமையை ஒரு நொடி இழப்பது கூட வருந்தக் கூடிய செயலில் முடியும். மற்றவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யட்டும் அல்லது கூறட்டும். அவர்கள் உங்களைச் சீண்டி பார்க்கட்டும், வம்புக்கு இழுக்கட்டும். நீங்கள் பொறுமையிழப்பது தேவையற்றது மட்டுமல்ல, பொறுமையிழந்து செயல்பட்டாலும் நீங்கள் குறைக்க நினைக்கும் தீங்கு குறையாது. இன்னும் அதிகமாகி விடும். பொறுமையாக, வலிமையாக, நிதானமாகச் சிந்தித்து உறுதியாகச் செயல்படுவது பெருமளவு சாதிக்கும். ஆனால் பொறுமையிழந்து  அதன் ஒட்டு உறவான எரிச்சலுடன் செயல்படுவது பலவீணத்தையும் திறமையின்மையையும் தான் வெளிப்படுத்துகிறது. பொறுமையை இழப்பதால் உங்களுக்கு என்ன பரிசு கிடைக்கிறது. உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் அமைதியையும், நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அது வழங்குகிறதா? மாறாக உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் துன்பத்தைத் தானே வழங்குகிறது. உங்கள் பொறுமையின்மை மற்றவர்களை ஒரு வேளைக் காயப்படுத்தினாலும் உங்களைத் தான் அது அதிகம் காயப்படுத்துகிறது , உங்கள் சக்தி எல்லாவற்றையும் அது உறிஞ்சி எடுத்துவிடுகிறது என்று நினைவில் கொள்ளுங்கள்.

பொறுமை இழப்பவன் தனக்குத் தானே துன்பத்தையும் அமைதியின்மையையும் வரவழைத்துக் கொள்வதால் அவனால் உண்மையான பேரருளை அறிய முடியாது. பொறுமையின் அமைதியான பேரழகையும் வற்றாது சுரக்கும் இனிமையையும் அவன் அறியமாட்டான். அமைதி அவன் அருகில் வந்து அவனுக்கு ஆறுதலும் பாதுகாப்பும் வழங்க முடியாது.

பொறுமை இழந்து செயல்படுவதைக் கைவிடும் வரை மனிதன் எங்கு சென்றாலும் அவன் பேரருளை பெற மாட்டான். அதைக் கைவிடுவது என்றால் எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையைப் பெறுவது, தாங்கிக் கொள்ளும் வலிமையைப் பெறுவது, கனிவான புதிய பழக்கங்களை உருவாக்கிக் கொள்வது ஆகும். பொறுமையின்மையும் எரிச்சல்படுவதும் முற்றிலுமாகத் துறக்கப்பட்டு சுயநல எண்ணங்களுக்கு எதிராக அவை தூக்கி எறியப்படும் போது தான் வலிமையான, அமைதியான, நிம்மதியான மனதின் ஆற்றல் என்ன என்று ஒருவன் அறிய முடியும்.

நம்மை விட மற்றவர்களை நாம் அதிகம் நினைக்கும் நேரங்களில் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மற்றவர்களின் நலனுக்காக நாம் செய்யும் சிறிய தியாகங்கள் கூட வாழ்வு என்பது நம்மை மீறி மிகப் பரந்தது என்பதைக் காட்டுகின்றது .

உங்கள் ஆன்மாவின் ஜன்னல்களை உயர்நிலைகளிலிருந்து வரும் வெளிச்சத்திற்குத் திறந்து விடுங்கள்.

அந்த வாய்ப்பிற்காக மகிழுங்கள்.

இதற்கு அடுத்ததாக, சில சிறிய தன்முனைப்பான பழக்கங்கள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் தீங்கற்றதாகவே காட்சி அளிக்கும். எனவே அது பொதுவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் எந்தத் தன்முனைப்பான பழக்கமும் தீங்கற்றதாக இருக்க முடியாது. அற்பத்தனமான சுயநல தன்முனைப்புகளை எல்லாம் தொடர்ந்து ஈடேற்றி வருவதால் ஆண்களும் பெண்களும் எவற்றை எல்லாம் இழக்கிறார்கள் என்று அறியாமல் இருக்கிறார்கள். மனிதனுக்குள் இருக்கும் கடவுள் தன்மை வலிமையாக எழ வேண்டும் என்றால் அவனுக்குள் இருக்கும் மிருகத் தன்மை மடிய வேண்டும். கீழ்நிலை குணங்களுக்கு அடிபணிந்து ஈடேற்றும் போது, அவை கள்ளம் கபடம் அற்றதாகக் காட்சி அளித்தாலும் கூட அது உண்மையின் பாதையிலிருந்தும் பேரருளின் பாதையிலிருந்தும் திசை மாற, வழி தவற, செய்து விடும். உங்களுக்குள் எழும் கீழ்நிலை இயல்புகளுக்கு வழி விடும் போது, அவற்றின் பசிக்கு உணவு பரிமாறும் போது, அந்த மிருகம் தன்னை மேலும் வலிமையாக்கிக் கொள்கிறது. உண்மை வேரூன்ற வேண்டிய மனதில் கீழ்நிலை குணம் வேரூன்றிக் கொள்கிறது. அற்பத்தனமாகத் தன்முனைப்புகளை / தன்னை முன் நிறுத்தி கொள்ளுதலை போதுமான அளவிற்காவது கைவிடும் போது தான் மனிதன் இத்தனை காலமும் அற்ப உந்துதல்களை ஈடேற்றி வருவதால் அவற்றின் பிடியில் சிக்கி எவ்வளவு வலிமையை, மகிழ்ச்சியை, சாந்தமான மனதை, புனிதமான, கவர்ந்து ஈர்க்கும் குணத்தை இழந்திருக்கின்றான் என்பதை அறிகிறான். சுகபோகங்களுக்காக ஏங்கித் தவிக்காமல் இருக்கும் போது தான் நிலையான மகிழ்ச்சிக்குள் அவன் அடி எடுத்து வைத்து முழுமையாக நுழைகிறான்.

ஒருவன் தன் அற்ப மனகிளர்ச்சிகளை நிறைவேற்றிக் கொள்வதாலும் தன் முனைப்புகளை ஈடேற்றிக் கொள்வதாலும் அவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறான். அவற்றின் அளவிற்கும், எண்ணிக்கைக்கும் நிகழும் கால இடைவெளிக்கும் ஏற்ப தன்மானத்தை , சுயகௌரவத்தை இழக்கிறான் . சிறந்த முன் உதாரணமாக விளங்கி, பிறரை வழிநடத்தும் தன்மையை இழக்கிறான். இந்த உலகில் அவன் சாதிக்க வேண்டியவற்றைச் சாதிப்பதற்குத் தேவைப்படும் சக்தியை இழக்கிறான். கண்மூடித்தனமான ஆசைகளுக்கு இடமளித்து மன கண்ணோட்டம் என்னும் குணமில்லாமல் பரிதவிக்கிறான் . தெளிந்த மனதோடு பார்க்கும் பார்வையை இழக்கிறான். நிகழ்ச்சிகளை, சூழ்நிலைகளை அதன் மையப்பகுதி வரை ஊடுருவி செல்லும் பார்வையையும் அவற்றின் உண்மை நிலையைக் கண்டு அறியும் திறனை இழக்கிறான். கீழ் குணங்களைச் செயல் படுத்த துடிக்கும் உந்துதல் உண்மையை உணர்வதற்கு எதிர்த் திசையாகும். அந்தக் கீழ் குண உந்துதல்களை ஒருவன் துறக்கும் போது, தியாகம் செய்யும் போது குழப்பத்திலிருந்தும் சந்தேகத்திலிருந்தும் மேல் எழுந்து உள்உணர்வையும் உறுதியையும் அடைகிறான்.

பேரார்வமுடனும் பேராசையுடனும் நீங்கள் அனுபவிக்க அலையும் உங்களது அற்ப மனகிளர்ச்சிகளை உதறித் தள்ளுங்கள். நீர்க் குமிழி போன்று தோன்றி மறையும் அற்ப சுகங்களில் மனதை செலுத்தாமல் நிலைத்து நிற்கக் கூடிய உயர்வான போற்றுதலுக்கு உரிய ஒன்றில் மனதை செலுத்துங்கள். புலன் இன்ப ஆசைகளுக்கு ஏங்கி அடிமையாகாமல் வாழுங்கள். உங்கள் வாழ்வு வீணாகாமல் உறுதியோடு இருக்கும்.

தன்னுடைய கருத்தும் நிலைப்பாடுமே சரி என்னும் பிடிவாத குணத்தைத் துறப்பவன் மற்றவர்களைக் கவர்ந்து அவர்களது உணர்வுகளைத் தொடுகிறான். அவனுக்கு உண்மை தன்னைப் பல வழிகளிலும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். அவன் மற்றவர்களது வாழ்விலும், கருத்துக்களிலும், மதங்களிலும் குறுக்கிடாமல் தலையிடாமல் அதற்குப் பதிலாகப் புரிந்து உணர்வும் அன்பும் இரக்கமும் வழங்குகிறான். பிடிவாத குணம் அல்லது தன் கருத்தே முற்றிலும் சரி என்பது ஒருவகையான அகம்பாவம் அல்லது சுயநலமே ஆகும். அது பொதுவாகப் புத்திசாலித்தனத்தோடு பேச்சு திறமையையும் வாதத்திறனையையும் துணைக்கு அழைத்தவாறே வருகிறது. கண்ணை மூடி இரக்கமற்று உறுதியாகத் தன் கருத்தை முன்னிறுத்துவதால் அது ஒரு தகுதியாகவே பெரும்பாலும் எல்லா இடங்களிலும் கருதப்படுகிறது. ஆனால் மனமானது சுயநலத்தைத் துறந்து அன்பாலும் கனிவாலும் மலரும் போது, அந்தப் பிடிவாத குணத்தின் அலங்கோலமும் அதனால் ஏற்படுகிற அறியாமையும் வலியும் சட்டென்று தெரிய வரும்.

தன்னுடைய கருத்தே முற்றிலும் சரி என்று அதையே அளவுகோலாக வைத்து இருப்பவன் தன் கருத்துடன் மாறுபடும் எல்லோரையும் தவறானவர்களாகக் கருதுகிறான். மற்றவர்களைத் திருத்த ஆவலாக இருப்பதால் தன்னைத் திருத்திக் கொள்வது அவனுக்கு முடியாமல் போகிறது. பிறரைத் திருத்த விழையும் அவனது மனோபாவம் அவனுடன் முரண்படுவார்களின் எதிர்ப்பை வரவழைக்கின்றது. அவ்வாறு எதிர்ப்பவர்கள் அவனைத் திருத்த முயல்கின்றனர். இது அவனது அகம்பாவத்தைக் காயப்படுத்துவதால் அவன் சீற்றமும் வெறியும் வந்து மகிழ்ச்சி அற்றுக் காழ்ப்புணர்வும் வெறுப்பும் கொண்டு குறுகிய எண்ணங்களில் வாழ்கிறான். தன் விருப்பத்திற்கு இணங்கி பிறர் தனக்கு வளைந்துக் கொடுத்து வாழ வேண்டும் என்னும் எண்ணத்தைக் கைவிடாத வரை ஒரு மனிதனுக்கு நிம்மதியும்,மெய்யறிவும் முன்னேற்றங்களும் ஏற்படாது. அத்தகைய மனிதனால் பிறரது இதயங்களைப் புரிந்து கொள்ள முடியாது .அவர்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களிலும் வேதனைகளிலும் அவர்கள் சாதிக்கத் துடிக்கின்ற உயர் எண்ணங்களிலும் அன்போடு பங்கெடுக்க முடியாது. அவன் மனம் குறுகியதாகி கசப்புணர்வு உள்புகுந்து இனிய இரக்கக் குணங்களும், ஆன்மீக எண்ணங்களும் உள்ளே புக முடியாமல் தடை ஏற்படுகிறது.

தன்னுடைய கருத்தே முற்றிலும் சரி என்று பிறரிடம் வற்புறுத்தி திணிப்பதை ஒருவன் கைவிட்டு ;அவர்களைப் பற்றித் தன் மனதில் ஏற்கனவே பதிவுச் செய்துக் கொண்டு விட்டிருந்த தவறான கருத்துடன் அவர்களை அணுகாமல் அவர்களிடமிருந்து நன்மையானவற்றைக் கற்றுக்கொள்ளும் திறந்த மனதுடன் அணுகும் போது; அவர்களை உள்ளவாறே புரிந்துக் கொள்ள முயலும் போது ; தன்னுடைய முழுச் சுதந்திரத்தை அவன் கடைப்பிடிப்பது போலப் பிறரது சுதந்திரத்தில்  அவன் தலையிடாமல் அவர்களது கருத்துக்களை அவர்களே தேர்ந்து எடுத்துக் கொள்ள விரும்பும்போது ;- அன்று வரை அறிந்திடாத ஆழமான உள்ளுணர்வை, பரந்த தாராள மனதை பேரானந்தத்தைத் தன்னுள் உணர்வான். அவனுக்கு இதுவரை அனுமதி மறுக்கப்பட்டு இருந்த ஒரு நல்வழி பாதையின் கதவு இப்பொழுது அவனுக்குத் திறக்கிறது.

இதற்கு அடுத்து பேராசைபடுவதையும், பேராசை எண்ணங்களையும் மனதை விட்டு நீக்குவதாகும். நாம் பெறுவதை விட மற்றவர்கள் பெற வேண்டும் என்று நினைப்பதாகும். நாமே பெற்று அனுபவிக்க வேண்டும் என்று பேராசையில்லாமல் மற்றவர்கள் பெற்று அனுபவித்து மகிழ்வதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாகும். ”எல்லாம் எனக்கு” என்று இறுகப் பற்றிக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு முழு மனதுடன் எந்த வெறுப்புமின்றி விட்டுக் கொடுப்பதாகும். இந்த மனநிலையானது ஆழமான நிம்மதியின் ஆன்மீக பேராற்றலின் ஊற்றுக் கண்ணாகும். இதுதான் சுயநலத்தைத் துறக்கும் மன நிலையாகும். பொருள் செல்வம் நிலையானதல்ல, அந்த வகையில் அவை என்றும் நமது தான் என்று நாம் உரிமைக் கொண்டாட முடியாது. ஒரு சிறிய காலத்திற்கு நாம் அவற்றை வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அருள் செல்வம் நிலையானது. அவை என்றும் கூடவே தங்கியிருக்கும். தன்னலமின்மை என்பது ஒரு அருள் செல்வமாகும். அது பொருட்களின் மீதும் சுகபோகங்களின் மீதும் உள்ள பேராசையை விட்டு ஒழிப்பதாலேயே வருகின்றது. பொருட்களும் சுகபோகங்களும் நமக்கு மட்டுமே உரிதானவை என்று எண்ணாமல் மற்றவர்களின் நலத்திற்காக அவற்றைத் துறக்க முன்வருவதாலேயே தன்னலமின்மை என்னும் அருள் செல்வம் வருகின்றது.

தன்னலமற்ற மனிதன், செல்வச் செழிப்புகளால் சூழப்பட்டு வாழ்ந்தாலும், அவன் மனதில் அவற்றை இறுகப் பற்றாமல், தாமரை இலை நீர் போல் தனித்தே நிற்கிறான். அவை எல்லாம் தனக்கே உரியது என்று எண்ணம் கொள்ளாமல் இருப்பதால் பேராசைக் கொண்டவனை எப்போதும் பின் தொடரும் கசப்புணர்வும் பயமும் நடுக்கமும் அவனை நெருங்குவதில்லை. அவன் தன் புறவாழ்வின் செல்வங்களையும், வசதிகளையும் மிக உயர்ந்ததாகக் கருதி அவற்றை இழந்து விடக் கூடாது என்று அவன் அஞ்சுவது இல்லை. ஆனால் தன்னலமின்மை என்னும் அறநெறியை உயர்வானதாகக் கருதுகிறான். துன்பப்படும் மனித இனத்திற்குத் தேவையானதாகக் கருதுகிறான். அதைத் தூக்கி எறியவோ தொலைக்கவோ கூடாது என்று உறுதியாக இருக்கிறான்.

அருளாசி வழங்கப்பட்ட மனிதன் யார்? பொருளாசைக்கு அடிமையாகி இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று பேராசைப்படுபவனா? அல்லது தன்னிடம் இருப்பதைப் பிறர் நன்மைக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் விட்டுத் தருபவனா?பேராசையால் மகிழ்ச்சி தொலைகின்றது. பேராசை நீங்குவதால் மகிழ்ச்சி திரும்பி வருகின்றது.

உள்ளத்திற்குள் செய்யப்படும் இன்னொரு தியாகம் வெறுப்பு, காழ்ப்புணர்வு ஆகியவற்றைத் துறப்பது ஆகும். இந்தத் தியாகம் ஆன்மீக பேரழகின் ஓர் உயர்நிலையாகும். மனிதக் குலத்தின் இன்னல்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தும் ஆற்றல் நிறைந்ததாகும். பிறர் மீது கொண்டுள்ள கசப்பான எண்ணங்கள், காழ்ப்புணர்வு, வெறுப்பு, வன்மம், வெறி ஆகியவற்றைத் துறப்பதே இந்தத் தியாகமாகும். கசப்பான எண்ணங்களும் பேரருளும் எப்போதும் ஒன்று சேர்ந்து இருக்க முடியாது. வெறுப்பும் காழ்ப்புணர்வும் ஒரு கொடிய நெருப்பாகும். அது எந்த இதயத்திற்குள் புகுவதற்கு அனுமதிக்கப்படுகின்றதோ அங்கே கொழுந்துவிட்டு பற்றி எரிந்து மகிழ்ச்சி, நிம்மதி என்னும் இனிய மலர்களை எரித்து சாம்பலாக்குகின்றது. அது எங்கெல்லாம் வருகிறதோ அவையெல்லாம் நரகம் போல் மாறுகின்றன.

வெறுப்பு, காழ்ப்புணர்வு ஆகியவை வேறு வேறு பெயர்களில், வேறு வேறு வடிவங்களில் காணப்பட்டாலும் அவை எல்லாவற்றின் சாரமும் ஒன்று தான் ;- அது பிறருக்கு எதிரான பற்றி எரியும் கொடிய வன்மமான எண்ணங்களே. கண்மூடித்தனமாகச் அதனை ஆதரித்து செயல்படுபவர்கள் சில நேரங்களில் அதை மதத்தின் பெயரில் வளர்க்கிறார்கள். வாழ்வையும் , இறப்பையும் குறித்துத் தங்கள் கருத்துடன் ஒத்துப்போகதவர்களையும் மாறுபடுபவர்களையும் தூற்றுகிறார்கள், தாக்குகிறார்கள், தண்டிக்கிறார்கள். இந்தப் பூமியை வேதனையோடும் கண்ணீரோடும் நிறையச் செய்கிறார்கள்.

எல்லா வகையான வன்மமான துவேஷ உணர்வுகளும், பிறரை ஒதுக்குவதும், பிறரை குறித்துத் தவறாக எண்ணுவதும் ,  தவறாகப்  பேசுவதுமே இந்த வெறுப்பும், காழ்ப்புணர்வும் ஆகும். இந்த வெறுப்பும், காழ்ப்புணர்வும் இருக்குமிடம் எப்போதும் மகிழ்ச்சி இருக்காது. பிறர் மீது துவேஷ உணர்வு உள்ளத்தில் ஊற்று எடுத்துக் கொண்டிருக்கும் வரை எவராலும் வெறுப்பையும், காழ்ப்புணர்வையும் கட்டுப்படுத்த முடியாது. தனக்குத் தீங்கு செய்ய முயற்சிப்பவர்கள் மீதும் அன்பையும் இரக்கத்தையும் பொழியும் போது தான் காழ்ப்புணர்வை துறக்கும் இந்தத் தியாகம் முழுமை பெறும் . இந்தத் தியாகத்தை முழுமையாகச் செய்த பின்பே உண்மையான பேரருளை உணரவும் அறியவும் முடியும். காழ்ப்புணர்வின் கடினமான, கொடிய இரும்பு கதவுகளுக்குப் பின்னால் அன்பு என்ற தேவதை காத்துக் கொண்டிருக்கிறாள். காழ்ப்புணர்வு, துவேஷ எண்ணங்களைத் துறந்து வெளியேற நினைப்பவனுக்கு அவள் தன்னை வெளிப்படுத்தி அவனை நிம்மதியான பாதைக்கு அழைத்துச் செல்ல தயாராக நின்று கொண்டு இருக்கிறாள்.

மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன கூறினாலும், உங்களுக்கு என்ன செய்தாலும் அவர்களைப் பழி வாங்க விழையாதீர்கள், பழிக்குப் பழி வழங்காதீர்கள். ஒருவேளை, ஒருவர் உங்களை வெறுப்பதற்கு அவருடன் நீங்கள் நடந்துகொண்ட விதத்தில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகள் காரணமாக இருக்கலாம். அல்லது உங்களைத் தவறாகப் புரிந்துக்கொண்டு வெறுக்கலாம். அந்தத் தவறான புரிதல்கள் -பொறுமையையும் திறந்த மனதையும் கடைப்பிடிக்கும் போது நீங்கும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் ”கடவுளே, அவர்களை மன்னித்து வீடு” என்பது ”இனி அவர்களுக்கும் எனக்கும் எந்த ஒட்டு உறவும் இல்லை” என்பதை விடப் பல மடங்கு உயர்ந்ததாகும். இனியதும் சிறந்ததும் ஆகும். வெறுப்பு என்பது மிகக் குறுகியது, தாழ்வானது, கண்மூடித்தனமானது, துக்கம் நிறைந்தது, அன்பு என்பது மிகப் பரந்தது,உயர்ந்தது, தொலை நோக்கும் பார்வைக் கொண்டது, மகிழ்ச்சி நிறைந்தது.

 

உயர்ந்த பண்பாடு என்பது இன்னல்களைப் பேசாமலிருப்பதே.

எல்லா அழகையும் நன்மைகளையும் விரைந்துக் காணும் கண்களை உடையவனே சிறந்த சீர்திருத்தவாதி ஆவான்.

அவன் சீர்படுத்தப்பட்ட ஒழுங்கான தன் வாழ்வின் மூலமாக மட்டுமே தவறுகளைக் நிரூபிப்பித்து அவற்றை கடிந்து உரைப்பான்.

அடுத்தவர்கள் மீது அன்பும், மதிப்பும் கொண்டு உருவாக்கிய பீடத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள வெறுப்பைப் பலி கொடுங்கள். உங்களுடைய தனிப்பட்ட அற்ப உணர்விற்கு ஏற்பட்ட காயத்தை எண்ணிக் கொண்டிருக்காதீர்கள். ஆனால் மற்றவர்களை நீங்கள் புண்படுத்தி விடக் கூடாது என்று கவனமாக இருங்கள். உங்கள் உள் இருக்கும் அன்பு வெள்ளம் தவழ்ந்து ஓடுவதற்கு உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து விடுங்கள். அந்த இனிமையான, அழகிய, மேன்மையான அன்பு எல்லோரையும் தழுவட்டும். பாதுகாப்பும், நிம்மதியும் தரும் மென்மையான ஆனால் வலிமையுடன் கூடிய எண்ணங்கள் பாகுபாடின்றி, ஒரே ஒருவரையும் கூட விட்டுவிடாமல் , உங்களை வெறுப்பவனையும் தூற்றுபவனையும் , பழிசொல்பவனையும் கூட விட்டுவிடாமல் , எல்லோரையும் அரவணைத்து செல்லட்டும்.

திரையிட்டுச் செய்யப்பட வேண்டிய இன்னும் பல தியாகங்கள், அடுத்து அடுத்து துறக்க வேண்டியவைகள் எவை எல்லாம் என்றால், – கள்ளம் கபடம் மிகுந்த இச்சைகள், தன் மீது தானே இரக்கப் பட்டுக்கொள்ளும் பலவீணம், ஏளகனமாகக் கருதப்படும் தற்புகழ்ச்சி, வீண் ஆரவாரம், ஆணவம் போன்றவைகளாகும். அவற்றை எல்லாம் பின்பற்றுவது பேரருள் இல்லாத மன நிலையை, உள்ளத்தின் ஒழுங்கு இன்மையைக் காட்டுகின்றன. இவற்றை ஒவ்வொன்றாகத் துறப்பவன்,உள்ளத்தில் தியாகம் செய்பவன், படிப்படியாகக் கட்டுப்படுத்தி ஆள்பவன், அவற்றின் மீது தான் கொண்ட வெற்றியின் அளவுக்கு ஏற்ப தன் பலவீணங்களையும், துன்பங்களையும், துக்கங்களையும் கடந்து விடுவான். நீங்காத முழுமையான பேரருளை பெறுவான்.

உள்ளத்தின் இந்தத் தியாகங்கள் எல்லாம் பரிசுத்தமான, அகம்பாவம் நீங்கிய இதயக் காணிக்கைகளாகும். தனிமையில், பிறர் கண்கள் அறியாமல், களங்கமற்ற உள்ளத்துடன் ஒருவன் உள்ளத்திற்குள்ளேயே இந்தத் தியாகங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. “தவறு தான்” என்று தனக்குள் அமைதியாக உணர்ந்து ஒப்புக் கொள்ளாமல் இங்குக் குறிப்பிடப்பட்டு உள்ளவற்றில் ஒன்றைக் கூட ஒருவனால் துறக்கவோ, தியாகம் செய்யவோ முடியாது. ஒருவன் தன் மனதிற்குள் ”என் தவறுகளுக்கு வருந்துகிறேன்” என்று மனப்பூர்வமாக எண்ணாத வரை எந்தத் தவறிலிருந்தும் விடுபட முடியாது.அத்தவறுகளை ஒப்புக்கொண்டு துறக்க முயன்று துறந்து அவற்றிலிருந்து விடுபட்ட பின்பு , இவ்வளவு காலமும் அவனது தவறுகளே திரையாக மாறி உண்மையை மறைத்துக் கொண்டிருந்ததை உணர்வான். இப்பொழுது அந்தத் தவறுகள் என்னும் திரை விலகியதால் உண்மை அவனுக்குப் புலப்படும்.

“எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு சொர்க வாழ்வை அடைந்து விட முடியாது”. பிறர் நன்மையைக் கருதி மௌனமாகத் தன்னலத்தைத் தியாகம் செய்வது, தினமும் உள்ளத்தில் எழும் “நான்” என்ற அகம்பாவத்தைக் கைவிடுவது போன்றவைகள் எவராலும் பார்க்கப்படவும் இல்லை , ஓங்கி ஒலித்துப் பேசப்படவும் இல்லை. புகழ்ச்சியும் இல்லை ,பாராட்டும் இல்லை. உலகத்தின் கண்களுக்கு அவை மறைக்கப்பட்டு இருக்கிறது. ஏன், உங்களுக்கு மிக நெருங்கியவர்களின் பார்வைக்கும் அது புலப்படாது. தோலினாலும், சதையினாலும் ஆன கண்களால் ஆன்மீக பேரழகை பார்த்து உணர முடியாது. ஆனால் இது எவராலும் கண்டு உணரப்படாததால் இது பயனில்லாதது என்று நினைத்து விடாதீர்கள். அதன் ஆனந்த பேரொளியை நீங்கள் காண்கிறீர்கள். உங்களுக்குள் எழும் இந்த ஆற்றலால் மற்றவர்களுக்கு விளையும் நன்மை மகத்தானதாகும். அவர்கள் அந்த ஆற்றலைக் காண முடியாமல் இருக்கலாம். அதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களையும் அறியாமல் அந்த ஆற்றலால் ஈர்க்கப்படுகிறார்கள் , வசப்படுகிறார்கள். மனதின் ஆழத்தில் நீங்கள் அமைதியாகச் சந்திக்கும் போர்க்களங்களைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது, மனதின் மீது நீங்கள் அடையும் வெற்றிகளைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் மாறியுள்ள உங்கள் புதிய மனநிலையை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அன்பாலும் அன்பான எண்ணங்களாலும் நெய்யப்பட்டுள்ள உங்கள் மனநிலையின் மகிழ்ச்சியிலும் ஆனந்தத்திலும் ஏதோ ஒரு வகையில் பங்கு கொள்வார்கள். உங்கள் மனதிற்குள் நீங்கள் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் போரினால் உங்களுக்கு ஏற்படும் காயங்கள் குறித்தும், அந்த மனகாயங்களை ஆற்றுவதற்கு நீங்கள் பின்பற்றும் வழிமுறைகளையும், உங்கள் மனக்குமுறல்களையும், பின் ஏற்படும் அமைதியைக் குறித்தும் சிறிதளவும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் இனிமையாகவும் கனிவாகவும்,வலிமையாகவும், இது வரை இருந்ததை விட இன்னும் அமைதியான தன்னம்பிக்கையுடனும் , இன்னும் அதிகமான பொறுமையுடனும் பரிசுத்தமாகவும் மாறியிருப்பதை அறிவார்கள். உங்கள் துணையில் ஒரு நிம்மதியையும், நம்பிக்கையையும் காண்பார்கள். இதற்கு ஈடு இணையான மற்றொரு பரிசு ஏது? அன்பின் நறுமணம் தவழ்கின்ற மாளிகையின் முன் மனிதர்களின் புகழ்ச்சி திகட்டவே செய்யும். தன்னலமற்ற இதயத்தின் தூய தீச்சுடரில் உலகின் வீண்புகழ்ச்சியுரைகள் வெந்து சாம்பலாகிவிடும். அன்பிற்கு இணையான பரிசு திரும்ப வரும் அன்பும், மகிழ்ச்சியும், நிம்மதியும் தான். உணர்ச்சி புயலில் சிக்கித் தவிக்கும் இதயங்களுக்கு இறுதி அடைக்கலமும் ஓய்வு அளிக்கும் இடமும், அன்பு மலரும் இதயங்களே.

சுயநலத்தைத் தியாகம் செய்வதன் விளைவாக மெய்யறிவும், பேரானந்தமும் தேடி வந்து அடையும். இந்தச் சுயநலத்தை தியாகம் செய்வது என்பது ஒரே ஒரு மாபெரும் தியாக செயலால் நிகழ்வது அல்ல. ஆனால் நடைமுறை வாழ்வில் தொடர்ந்து செய்யப்படும் சிறு சிறு தியாகங்களாலும், உண்மையை அடைவதற்காக நாள் தோறும் படிப்படியாகச் சுயநலத்தைக் கைவிட மேற்கொள்ளும் செயல்களாலே நிகழ்வது ஆகும். தன்னுள் எழும் இரக்கமற்ற எண்ணத்தை, தீய ஆசையை, பாவத்தைச் செய்யத் துடிக்கும் வேகத்தை அடக்கி ஆண்டுப் புறம் தள்ளி, தன்மீது ஒரு வெற்றியை ஒவ்வொரு நாளும் எவன் ஒருவன் கொள்கிறானோ அவன் ஒவ்வொரு நாளும் வலிமையானவனாக, களங்கமற்றவனாக, மெய்யறிவு உடையவனாக மாறிக்கொண்டு இருக்கிறான். அவன் செய்யும் சிறு சிறு தியாகமும் உண்மையின் பேரழகை ஓரளவு அவனுக்கு வெளிப்படுத்துகின்றது.அவன் உண்மையின் முழு அழகைக் காண விரைந்துள்ளதை ஒவ்வொரு விடியலும் பறைசாற்றும்.

உங்கள் எல்லையைக் கடந்து அல்லது உங்களுக்கு வெளியே உண்மையின் பேரொளியை, பேரருளைத் தேடாதீர்கள். ஆனால் உங்களுக்குள்ளேயே தேடுங்கள். உங்கள் கடமைகளின் குறுகிய வட்டத்திற்குள்ளேயே அது இருப்பதைக் காண்பீர்கள். உள்ளத்தின் சிறு சிறு தியாகங்களிலும் கூட உண்மையின் பேரொளியும், பேரருளும் உறைவதை நீங்கள் காண்பீர்கள்.

Share This Book

Feedback/Errata

Comments are closed.