7 இரக்க குணம்

 

உங்கள் பார்வை உங்கள் மேல் படும் போது

மிக கடுமையாய் இருங்கள்.

சக மனிதன் மேல் அது விழும் போது

அன்பும் தயவும் அதை கட்டுப்படுத்தட்டும்.

சதுப்பு நிலத்திலிருந்து வெளிவரும் புதர்கள் போன்று

மனதை நோகடிக்கும் ஈவு இரக்கமற்ற வார்த்தைகளை

உங்கள் உதடுகள் வெளிபடுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

                                         ….எல்லா வீலர் வில்காக்ஸ்

 

காயம்பட்ட மனிதனிடம் அவன் வலியின் வேதனையை

நான் கேட்டு உணர மாட்டேன்.

நானே காயம்பட்டதாக மாறி உணர்ந்துக் கொள்வேன்.

                                         ….வால்ட் வில்ட்மேன்.

பிறர் மீது நாம் எந்த அளவிற்கு இரக்கம் செலுத்த முடியும் என்றால் நம்மை நாம் எந்த அளவிற்கு கட்டுப்படுத்தி ஆள்கிறோமோ அந்த அளவிற்கு தான்.  நம்மை குறித்து நாம் வருத்தமும் பரிதாபமும் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பிறருக்காக எண்ணவும் இரக்கப் படவும் முடியாது.  நம்மை முன்னிலைப் படுத்த துடித்துக் கொண்டு இருக்கும் போது அல்லது நம்மை தனித்து பாதுகாத்துக் கொள்ள முற்படும் போது நமது கருத்தை அல்லது பொதுவாக நமது என்ற ஏதோ ஒன்றிற்காக போராடும் போது  நாம் , பிறருடன் கனிவாகவும் அன்பாகவும் நடந்துக் கொள்ள முடியாது.  தன்னை மறந்து பிறரை அன்போடு நினைப்பது அல்லாமல் இரக்கம் என்பது வேறு என்ன?

பிறர் மீது இரக்கம் செலுத்த வேண்டும் என்றால் முதலில் நாம் அவர்களை புரிந்துக் கொள்ள வேண்டும்.  அவர்களை புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களைப் பற்றி ஏற்கெனவே கொண்டிருந்த கருத்துக்களை விட்டுவிட்டு அவர்களை உள்ளபடியே காணவேண்டும்.  அவர்களது உள்நிலைக்குச் சென்று அவர்களுடன் ஒன்றற கலக்க வேண்டும்.  அவர்களது மன கண்களை கொண்டே அவர்களுக்கு நேர்ந்துள்ள அனுபவங்களை உணர வேண்டும்.  உங்களை விட ஞானத்திலும் அனுபவத்திலும் உயர்ந்தவர்களிடம் இதை நீங்கள் செய்ய முடியாது.  உங்கள் அளவு ஞானமும் அனுபவமும் இல்லாதவரிடம், நீங்கள் அவர்களை விட உயர்வானவர் என்ற எண்ணம் தலைக்கு ஏறினாலும் அதை செய்ய முடியாது. (காரணம் “நான் என்ற அகங்காரமும்”  இரக்க குணமும் ஒன்று சேர்ந்து இருக்க முடியாது). ஆனால் இதை நீங்கள் சில வகையான பாவங்களிலும் துன்பங்களிலும் சிக்கி திணறிக் கொண்டிருப்பவர்களின் நிலையையை உணர்ந்துக் கொள்ள (அவ்வகையான பாவங்களையும் துன்பங்களையும் நீங்கள் வென்று விடுபட்டிருந்தால்) செய்யலாம். வேறு  சில வகையான பாவங்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் மீள முடியாமல்  இன்னும் நீங்கள்  தவித்துக் கொண்டிருக்கலாம். உங்களை விட உயர்ந்தவரிடம் நீங்கள் செலுத்தும் இரக்கம் அவரை தழுவ முடியாது என்றாலும் அவரது பேரிரிக்கம் என்னும் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய அது துனை புரியும். நீங்கள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் பாவங்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் மீள்வதற்கு  அது உதவும்.

ஓர வஞ்சகமான எண்ணங்களும்  கசப்புணர்வுகளும்  இரக்கம் சுரப்பதற்கு  தடையாக இருக்கும் என்றால் ஆணவமும் ஆரவாரமும் இரக்கம் நாடி  வருவதற்கு தடையாக இருக்கும்.  ஒருவர் மேல் வெறுப்புக் கொண்டு உள்ளீர்கள் என்றால் அவருக்கு நீங்கள் இரக்கத்தை வழங்க முடியாது.  நீங்கள் எவர் மீதாவது பொறாமை கொண்டிருக்கிறீர்கள் என்றால் அவரது இரக்கத்தை பெற்றுக் கொள்ள முடியாது. உங்களுக்கு பிடிக்காத ஒருவரை நீங்கள் புரிந்துக் கொள்ள முடியாது.  அல்லது மிருக இயல்புகளின் தூண்டுதல்களால் ஒருவர் மீது வெறிக் கொண்ட பாசமிருந்தாலும், அவரை புரிந்துக் கொள்ள முடியாது.  அவரை நீங்கள் உள்ளவாறே பார்ப்பது இல்லை. நீங்கள் காண்பது எல்லாம் உங்கள் மனதில் உள்ள தவறான கருத்துக்களினாலும் மிகைபடுத்தப்பட்ட எண்ணங்களினாலும்   பதிவாகியுள்ள மங்கலான பிம்பத்தை தான்.

மற்றவர்களை உள்ளபடியே காணவேண்டும் என்றால் உங்களது விருப்பு வெறுப்புகள், ஏற்கெனவே பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ள தவறான எண்ணங்கள், நான் என்ற ஆணவ எண்ணங்கள் போன்றவைகள் குறுக்கிடுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.  அவர்களது செயல்களை வெறுக்கவோ அவர்களது நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் கண்டிக்கவோ கூடாது.  அந்த நேரத்திற்கு உங்களை முழுவதுமாக விட்டுவிட்டு அவர்களது  நிலைக்கு செல்ல வேண்டும்.  இந்த வழியில் தான் அவர்களை உணர்ந்து, அவர்கள் வாழ்வை, அனுபவங்களை அறிந்து அவர்களது நிலையை புரிந்துக் கொள்ளமுடியும்.  ஒருவனை புரிந்துக் கொண்டுவிட்டால் பின்பு அவனை கண்டிப்பது முடியாதது ஆகி விடும்.  மக்கள் தவறாக கணிக்கிறார்கள், கண்டிக்கிறார்கள்,  ஒருவரை ஒருவர் ஒதுக்குகிறார்கள், காரணம்  அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளவில்லை.  அவர்களால் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள முடியாததற்கு காரணம் அவா்கள் தங்களை கட்டுப்படுத்தி ஆளவில்லை, பரசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை.

வாழ்வு என்பது வளர்ச்சியும், முன்னேற்றமும் உள்ளிருந்து மலர்வதுமே ஆகும்.  இந்த கண்ணோட்டத்தில் நோக்கினால் பாவங்களில் மூழ்கிக் கிடப்பவனுக்கும் புனிதனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. உள்ள ஒரே வித்தியாசம் அவர்கள் இருக்கின்ற படிநிலையே ஆகும்.  புனிதன் ஒரு காலத்தில் பாவத்தில் மூழ்கி கிடந்தவன்.  பாவத்தில் இன்று மூழ்கி கிடப்பவன் ஒரு நாள் புனிதனாவான்.  பாவம் புரிபவன் குழந்தைப் பருவத்தில் இருக்கிறான்.  புனிதனோ வளர்ச்சியடைந்த மனிதனாக இருக்கிறான்.  குழந்தைகள் சொல்வதை கேட்காததால், பொம்மைகளுடன் விளையாடுவதால், அடம்  பிடிப்பதால் குழந்தைகளை பிடிக்காது என்று கூறுவது எப்படியோ அப்படி தான் பாவம் செய்பவர்கள் ஒதுக்கத் தக்கவர்கள் என்று கருதி தன்னை அப்புறப்படுத்திக் கொள்பவன்.

 

எல்லா உயிர்களும் ஒன்றுதான்.  ஆனால் அது பல உருவங்களில் வடிவமெடுக்கிறது.  பூ என்பது மரத்திலிருந்து வேறுப்பட்டது அல்ல, அது மரத்தின் ஒரு பகுதியே.  அது இலையின் இன்னொரு வடிவமே.  நீராவி நீரிலிருந்து வேறுபட்டது அல்ல. அது நீரின் இன்னொரு வடிவமே. அதே போன்று மாற்றி அமைக்கப்பட்ட தீமையே நன்மையாகும்.  பாவத்தில் இருப்பவன் தன்னை திருத்திக் கொண்டு வளர்ச்சி அடைந்தால் புனிதனாவான்.

பாவ செயல்கள்  செய்பவனது  புரிந்துக் கொள்ளும் தன்மை இன்னும் முழு வளர்ச்சி பெறவில்லை.  அவன் அறியாமையில் தவறான செயல்களை தேர்ந்து எடுக்கிறான்.  புனித செயல்கள்  செய்பவனது புரிந்துக் கொள்ளும் தன்மை முழு வளர்ச்சியடைந்து கனிந்து இருக்கிறது.  அவன் மெய்யறிவில் சரியான செயல்களை தேர்ந்து எடுக்கிறான்.  தீங்கிழைப்பவன் இன்னொரு  தீங்கிழைப்பவனை கண்டனம் செய்கிறான்.  கண்டனம் செய்வது ஒரு தவறான செயலாகும்.  புனிதனோ தீங்கிழைப்பவனை கண்டனம் செய்வது இல்லை.  தானும் இதற்கு முன்பு அவனது நிலையில் இருந்ததை நினைவுக் கூர்கிறான்.  எனவே அத்தீங்கிழைப்பவனை ஆழமான இரக்கத்தோடு எண்ணுகிறான். தவறிழைத்த தன் தம்பியை பார்ப்பது போல தன் நண்பனை பார்ப்பது போல பார்க்கிறான்.  இரக்கம் வழங்குவது ஒரு சரியான மெய்ஞானம் உள்ள செயலாகும்.

எல்லோருக்கும் இரக்கத்தை வழங்கும்  புனிதனுக்கு அந்த இரக்கம் யாரிடமிருந்தும் தேவை இல்லை. காரணம் அவன் பாவங்களையும் துன்பங்களையும் கடந்து விட்டான்.   பேரானந்த நிலையில், திளைத்த வண்ணமே இருக்கிறான்.  ஆனால் துன்பப்படுபவனுக்கோ இரக்கம் தேவை. பாவம் செய்பவனை துன்பம் தொடரும். எண்ணத்தாலோ, செயலாலோ, எந்த வகையாக பாவம் செய்தாலும்  அதற்குரிய தண்டனையை ஒருவன் அனுபவித்தே ஆக வேண்டும் என்று மனிதன் உணரும்போது அவன் கண்டிப்பதை நிறுத்திவிட்டு இரக்கப்பட தொடங்குவான்.  பாவத்தின் விளைவால் வரும் தண்டனையை தன் உள்ளத்தை சுத்தப்படுத்திக் கொண்டவாறு உணர்வான்.

உணர்ச்சி கொந்தளிப்பிலிருந்து மனிதன் தன்னை விடுபடுத்திக் கொள்ளும் போது, தன் சுயநல ஆசைகளை திருத்திக் கொள்ளும் போது, தன் ஆணவ அகங்காரத்தை கைவிட்டு தன் காலடியில் போடும்போது, மனித குலம் சந்திக்கின்ற எல்லா அனுபவங்களும், அவன் முன் நிழலாடும்.  எல்லா பாவங்களும், துன்பங்களும், துக்கங்களும், எல்லா உள்நோக்கங்களும், எண்ணங்களும், செயல்களும் என எல்லாமே இயற்கை நியதியை மீற முடியாமல் நடைபெறுவதை உணர்வான். முழுமையான சுயகட்டுப்பாடு என்பது நல் அறிவின், பேர் இரக்கத்தின் அடையாளமாகும்.  தூய்மையான இதயத்தின்  களங்கமில்லாத  பார்வையால் மற்றவர்களை பார்கின்றவன்  இரக்கத்துடன் அவர்களை காண்கிறான், அவன் தன்னில் ஒரு பகுதியையே காண்கிறான்.  தன்னிலிருந்து வேறுப்பட ஒன்றை, தனக்கு தொடா்பில்லாத ஒன்றை, கறைப்படிந்த ஒன்றை காணாமல் தன்னையே காண்பது போல் காண்கிறான்.  தன்னை போலவே பாவங்களும், குற்றங்களும் செய்து, தன்னை போலவே துன்பத்தை, துக்கத்தை அனுபவித்து இருந்தாலும் அவர்களும் தன்னைப் போலவே முழு நிம்மதியை அடைவார்கள் என்னும் ஞானத்தால் இளைபாறுகிறான்.

மெய்யறிவு கொண்ட உண்மையான நல்ல மனிதன் ஒரு தலை சார்பானவனாக இருக்க மாட்டான். அவனது இரக்கம் எல்லோரையும் அரவணைக்கும்.  மற்றவர்களை கண்டிப்பதற்கும், எதிர்த்து நிற்பதற்கும் அவர்களிடத்தில் எந்த தீங்கையும் அவன் காணமாட்டான் . ஆனால் அவர்கள் செய்யும் பாவச் செயல் அவர்களுக்கு இன்பமாக இருப்பதைக் காண்பான். அந்த பாவச் செயலின் காரணமாக அவர்களுக்கு நேர போகிற துன்பத்தையும் துக்கத்தையும் அவர்கள் அறிந்துக் கொள்ளாமல் , புரிந்துக் கொள்ளாமல் இருப்பதை அவன் காண்பான்.

ஒரு மனிதனது மெய்யறிவு எந்த அளவு பரந்து இருக்கின்றதோ, அந்த அளவு தான் அவனது இரக்கமும் செல்ல முடியும்.  அதைக் கடந்து செல்ல முடியாது.  அவன் உள்ளம் கருணையாகவும், கனிவாகவும் மாற மாற அவனது மெய்யறிவும் வளரும்.  ஒருவன் தன் இரக்க குணத்தைக் சுருக்கிக் கொள்வது என்பது அவனது இதயத்தை சுருக்கிக் கொள்வதாகும்.  அவன் வாழ்வை இருள் சூழ, கசப்புணர்வு உள் புக வழி செய்வதாகும்.  ஒருவன தன்   இரக்க குணத்தைக்  எங்கும் தவழ்ந்து  பரவச் செய்யும்  போது   அவனது வாழ்வு ஒளிவீசும்  மகிழ்ச்சியாக மாறுகின்றது. அவன்    மற்றவர்களுக்கும் ஒளிவீசும் மகிழ்ச்சியான வாழ்விற்கு தெளிவாக வழியை  காட்டுகிறான்.

இன்னொருவனுக்கு இரக்கத்தை வழங்குவது என்பது அவனை நமக்குள் ஏற்றுக் கொள்வதாகும். அவனோடு ஒன்றற கலப்பதாகும்.   தன்னலமற்ற அன்பு எந்த சுவடும் இல்லாமல் ஒன்றோடு ஒன்றாக கரைந்து விடும். எவனது இரக்கம் மனித இனம் அனைத்தையும், வாழும் எல்லா உயிர்களையும் அரவணைத்து தழுவுகின்றதோ அவன் அந்த எல்லாவற்றின் முழுமையில் தானும் ஒரு பகுதி என்று உணர்கிறான்.  எல்லையற்ற அன்பை செலுத்த, இயற்கை நியதிகளின் செயல்பாட்டை உணர, மெய்யறிவை பெற விழைகிறான். மனிதன் எந்த அளவிற்கு சொர்க்கத்திலிருந்தும், நிம்மதியிலிருந்தும், உண்மையிலிருந்தும் விலக்கப்பட்டிருக்கிறான் என்றால் அவன் எந்த அளவிற்கு  பிறர் மீது இரக்கம் செலுத்தாமல் இருக்கின்றானோ  அந்த அளவிற்கு  தான். எங்கே அவனது இரக்கம் முடிவுறுகின்றதோ, அங்கே அவனை இருளும், சித்திரவதைகளும், துன்பங்களும் சூழ்கின்றன.  காரணம் மற்றவர்களை நம் அன்பாலும் இரக்கத்தாலும் தழுவாமல் இருப்பது என்பது அன்பின், இரக்கத்தின் வாயிலாக கிடைக்கின்ற பேரளுளிலிருந்து நம்மை விலக்கிக் கொண்டு நான் என்ற குறுகிய இருண்ட சிறைக்குள்  சென்று நம்மை அடைத்துக் கொள்வதாகும்.

எவன் சில நூறடிதூரம் இரக்கம் சுரக்காமல் நடந்துச் செல்கின்றானோ

 அவன் தன் கல்லறைக்கே

அதற்கு அணியப்படும் உடைகளுடன் நடந்துச் செல்கிறான்

எந்த அளவும் எல்லையும் வகுத்துக் கொள்ளாமல்  ஒருவனது இரக்கம் சுரக்கும் போது தான் என்றும் நிலையான உண்மையின் ஒளி அவனை சூழும்.  எந்த பாகுபாடையும் பாராத  அன்பில் தான் அளவில்லாத ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.

இரக்கமே பேரூவகையாகும்.  அதில் பரிசுத்தமான, மிக உயர்ந்த பேரருள் வெளிப்படுகின்றது.  அது தெய்வீகமானது.  இரக்கம் சுரப்பதால் ஏற்படும் ஒளி வெள்ளத்தில் நான் எனகிற அகம்பாவம் கொண்டிருந்த எல்லா இருண்ட எண்ணங்களும் தொலைந்து விடுகின்றன.  ஆன்மீக உணர்வலைகளால் மற்றவர்களுடன் ஒன்றி மென்மையான  பரிசுத்தமான மகிழ்ச்சி நிலை மட்டுமே மிஞ்சி நிற்கின்றது.  ஒருவன் இரக்கத்தை கை விடும் போது அவன் வாழ்வையும் கைவிடுகிறான். அவனது பார்வையும், அறிவும், உணர்வுகளும் மங்குகின்றன.

எந்த வித சுயநலமான உள்நோக்கங்களுமின்றி  மற்றவர்களை காணும் போது தான்  உண்மையில் இரக்கப்பட முடியும்.  இதை செய்பவன் மற்றவர்களை அவர்கள் உள்ளவாறே காண்கிறான். அவர்கள் செய்யக்கூடிய குற்றங்களை, பாவங்களை அவர்களுக்கு ஏற்படுகின்ற மன இச்சைகளை, தூண்டுதல்களை, துக்கங்களை அவர்களது நம்பிக்கைகளை, கருத்துக்களை , அவர்களால் சகித்துக் கொள்ளமுடியாத கருத்து மாறுபாடுகளை என அவர்கள் ஆன்மீக பாதையில் எது வரை கடந்து இருக்கிறார்களோ அந்த இடம் வரை சென்று அவர்களை காண்கிறான்.  அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்களை உணர்கிறான்.  அவர்களது தற்போதைய நிலையில் அவர்கள் செயல்படுகின்ற விதத்தை விட வேறு எதையும் செய்யமுடியாது என்று உணர்கிறான்.  அவர்கள் கொண்டுள்ள தெளிந்த அறிவின் அளவோ அல்லது அறியாமையின் அளவோ தான் அவர்களது எண்ணங்களையும், செயல்பாடுகளையும் தூண்டிவிட கூடியவை என்றும்   காண்கிறான். அவர்கள் கண்மூடித்தனமாகவோ முட்டாள்தனமாகவோ நடந்துக் கொள்ளும் போதும் அவர்களது அறிவும் அனுபவமும் இன்னும் பக்குவப்படவில்லை . தெளிந்த மன நிலையையும், மெய்யறிவையும் அவர்கள் பெற பெறவே அவர்களால் சிறந்த படி நடந்துக் கொள்ள முடியும். அத்தகைய வளர்ச்சி ஏற்படுவதற்கு தகுந்த அறிவுரைகளும், அவ்வகையான அறிவுரைகளை வாழ்வில் நடைமுறைப்படுத்துபவர்களின் நல் உதாரணங்களும் உதவக் கூடும் என்றாலும் அதை இயற்கைக்கு பொருந்தாமல் அவர்கள் மேல் திணிக்கமுடியாது.  அன்பின் மலர்களும் மெய்யறிவின் மலர்களும் மலர்வதற்கு காலம் தேவைப்படுகிறது.  முட்டாள்தனத்தின், காழ்ப்புணர்வின் பட்டுப்போன கிளைகளை ஒரே அடியாக வெட்டி விட முடியாது.

 

இத்தகைய வளர்ச்சியை பெறும் மனிதன் அவன் சந்திக்கும் மற்றவர்களின் உள் உலகத்திற்குள் நுழைவதற்கான வாசல் கதவை கண்டு அதை திறந்து உள்நுழைந்து யாரும் அறியாத அவர்களின் அந்த புனித இடத்தில் வசிக்கிறான்.  அங்கே வெறுப்பதற்கோ தூற்றுவதற்கோ கண்டனம் செய்வதற்கோ எதையும் அவன் காணவில்லை.  மாறாக அங்கு அவன் காண்பவைகளுக்கு அன்பும் கனிவுமே தேவை என்று எண்ணுகிறான்.  அவர்கள் மேல் அன்பையும் ,  இரக்கத்தையும் ,  பொறுமையையும் செலுத்துவதற்கு தன் இதயத்தில் இடம் இருப்பதையும் காண்கிறான்.

அவன் அவர்களை தன்னிலிருந்து வேறாக பிரித்து பார்க்கவில்லை. அவர்களை தன்  இன்னொரு  பாகமாகவே  பார்க்கிறான்.  அவர்களது குண இயல்புகளும் தன்னுடைய குண இயல்புகளை போன்றதே, சில திருத்தங்களிலும் படிநிலைகளிலும் மட்டுமே வேறுபடுகின்றன.  மற்ற வகைகளில் ஒன்று தான் என்று ஒற்றுமை காண்கிறான்.  அவர்களின் செயல்பாடுகளில் குற்றங்களும், பாவங்களும் நிறைந்து இருந்தால் அவன் தன்னுள் அவ்வகையான குற்றங்களின் / பாவங்களின் சுவடைக் காண்கிறான்.  அவை ஒருவேளை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலோ அல்லது ஒரு அளவு தூய்மைபடுத்தப்பட்ட நிலையிலோ இருக்கலாம்.  அவர்களிடம் புனிதமான, தெய்வீக குணங்கள் வெளிப்படுகின்றன என்றால் , அவையும் தன்னுள் இருப்பதை காண்கிறான். ஆனால்  அது குறைந்த அளவிலோ இன்னும் வளர்ச்சி பெற வேண்டிய நிலையிலோ இருப்பதைக் காண்கிறான்.

 

இயற்கையின் ஒரு தழுவல்

முழு உலகையும் உறவாக்கிவிடுகின்றது.

ஒருவனது பாவம் என்பது எல்லோருக்குள்ளும் இருக்கும் பாவமே.  ஒருவனது நற்குணம் என்பதும் எல்லோருக்குள்ளும் இருக்கும் நற்குணமே.  எவன் ஒருவனும் இன்னொருவனிடமிருந்து பிரிக்கப்பட்டவன் அல்ல.  இயற்கையான குணங்களில் எந்த மாறுதலும் இல்லை.  அந்த குணங்களின் அளவுகள் தான் மாறுபடுகின்றன.  ஒருவன் தன் உயா்ந்த நற்குணங்களின் காரணமாக மற்றவர்களை விட வேறுபட்டவன் என எண்ணினால் அது தவறாகும்.  அவன் இருளில், மாயையில் மூழ்கி கிடக்கிறான்.  மனிதக்குலம் என்பது ஒன்றே.  இரக்கம் என்னும் புனித நிழலில் பாவியும் புனிதனும் சந்தித்து இணைகிறார்கள்.

இயேசுவை பற்றி கூறப்படுகின்றது ,  அவர் மொத்த உலகின் பாவங்களையும் தன் மேல் ஏற்றுக்கொண்டார் என்று. அதன் பொருள் , தனக்கும் அந்த பாவங்களை செய்தவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தன்னை விலக்கிக் வைத்துக் கொள்ளவில்லை.   தனக்குள்ளும் அவர்களை போன்ற குணம் இருக்கின்றது என்று மனித குலத்தோடு தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டார்.  தங்களுடைய   பெரும் பாவச்செயல்களின் காரணமாக மற்றவர்களால் விலக்கி, ஒதுக்கப்பட்டவர்களிடமும் நெஞ்சை தொடும் பேரிரக்கத்தை வழங்கினார்.

இரக்கம் என்பது மேலும் யாருக்கு அதிகம் தேவைப்படுகிறது?  புனிதனுக்கோ மெய்யறிவுக் கொண்ட ஞானிக்கோ, தெளிந்த அறிவுக் கொண்டவனுக்கோ அது தேவைப்படவில்லை.  பாவம் செய்பவனுக்கும், மெய்யறிவு பெறாதவனுக்கும் தெளிந்த அறிவு இல்லாதவனுக்கும் தான் அது அதிகம் தேவைப்படுகிறது. பாவத்தின் அளவு பெரியதாக இருக்கும்போது இன்னும் அதிகம் தேவைப்படுகிறது.

நான் நல்வழியில் இருப்பவர்களை அழைப்பதற்கு வரவில்லை

தீங்கு இழைப்பவர்கள் மனம் திருந்தவே வந்திருக்கிறேன்

என்பது மனித இனத்தின் தேவைகளை அறிந்தவரது கூற்று.  நல்லவன், உங்கள் இரக்கத்தின் தேவையின்றி இருக்கிறான்.  தான் செய்யும் பாவங்களின் காரணத்தால் நெடுங்காலம் அல்லல் படவேண்டிய துன்பத்தையும் வேதனையையும் தனக்கு ஏற்படுத்திக் கொள்ளும் தீங்கிழைப்பவனுக்குத் தான் இரக்கத்தின் தேவை அதிகமிருக்கிறது.

வெட்கப்படாமல் தலை குனியாமல் தவறுகள் செய்பவன் அவனைப் போன்றே ஒத்த மனநிலையில் உள்ளவர்களால் கண்டனம் செய்யபடுகிறான், தூற்றப்படுகிறான், ஒதுக்கப்படுகிறான்.  கண்டனம் செய்பவர்கள்  ஒருவேளை  ,   அப்பொழுது அவ்வகையான குற்றங்களை புரியாமல் இருக்கலாம். இரக்கம் சுரக்காமல் இதயம் இறுகுவதும் கண்டனங்களால் ஆர்ப்பரிப்பதும் புரிந்துக் கொள்ளும் தன்மை இல்லாதவர்களிடம் பொதுவாக நிகழும் ஒன்றாகும்.  இந்த புரிந்துக் கொள்ளும் தன்மை இல்லாமல் ஒருவன் பாவங்களில் மூழ்கி இருக்கும்போது அதே போன்று பாவங்களில் மூழ்கி இருக்கும் மற்றவர்களை  அவன் கண்டனம் செய்வான்.  அவனது பாவத்தின் தன்மையும் அளவும் கொடியதாகவும், அதிகமாகவும் இருக்கும் போது அவனது கண்டனங்களும் கடுமையாக இருக்கும்.  தன்னுடைய பாவங்களுக்கு வருந்த ஆரம்பிக்கும் போது தான், அவற்றை விட்டு மேல் எழுந்து புரிந்துக் கொள்ளும் தன்மை, தூய்மை என்னும் தெளிவான வெளிச்சத்திற்கு அவன் வருகிறான்.  அதன் பின்பே அவன் கண்டனம் செய்வதை கைவிட்டு அவர்கள் மேல் இரக்கப்பட கற்றுக் கொள்கிறான்.  பாவத்தில் மூழ்கி கிடப்பவர்கள் ஒருவர் மீது ஒருவர் உணர்ச்சி கொந்தளிப்பால் தொடர்ந்து கண்டனங்கள் செய்துக் கொள்வது என்பது எந்த இடத்திலும் எல்லா காலத்திலும் செயல்படும் இயற்கை நியதியின் கட்டளையாகும்.  பாவங்கள் செய்து  கண்டனத்திற்கு உள்ளாகுபவன் தன்னுடைய பாவங்களால் தான் கண்டனத்திற்கு உள்ளாகிறான் என ஏற்றுக்கொண்டு,  பிறரை கண்டிப்பதை விடுத்து தன்னை திருத்திக் கொள்ள முனைந்தால் மிக விரைவில் உயர்ந்த உள்ளத்தையும் வாழ்வையும் பெறுவான்.

உண்மையான மெய்யறிவும் நல்குணமும் கொண்ட மனிதன் யாரையும் கண்டனம் செய்ய மாட்டான்.  கண்மூடித்தனமான உணர்ச்சிகளையும் சுயநலத்தையும் அவன் கைவிட்டுள்ளதால் அன்பும் அமைதியும் தவழும் சாந்த நிலைகளில் வாழ்கிறான்.  எல்லா வகையான பாவங்களையும் அந்த பாவங்களை நிழல் போல் தொடரும் துன்பங்களையும் துக்கங்களையும் குறித்து அவனுக்கு தெரியும். மெய்யறிவோடும், விழிப்புணர்வோடும் சுயநல கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டு மனிதர்களை உள்ளவாறே காண்பதால், அவனது இதயம் எல்லோருடனும் இரக்கம் கலந்து தொடர்புக் கொள்கிறது.  எவராவது அவனை கண்டனம் செய்தாலும் அவனை பற்றி இல்லாத ஒன்றை அவதூறாக பரப்பினாலும் அவனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக புறங்கூறினாலும் அவர்களையும் அன்போடு தன் இரக்கத்தால் பாதுகாக்கிறான்.  அவர்கள் அவ்வாறு நடந்துக் கொள்வதற்கு காரணமான அவர்களது அறியாமையை காண்கிறான்.  அவர்களது அந்த தீய செயல்களுக்கு அவர்கள் மட்டுமே துன்புறுவார்கள் என்பதையும் அறிகிறான்.

உங்களை இப்பொழுது  யார் கண்டனம் செய்கிறார்களோ அவர்கள்  மீது இரக்கம் செலுத்த கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இப்பொழுது யாரை கண்டனம் செய்கிறீர்களோ அவர்கள் மேல் அன்பாக இருக்க  கற்றுக் கொள்ளுங்கள்.சுயக் கட்டுப்பாடின் மூலமாகவும் மெய்யறிவையும் வளர்த்துக் கொண்டவாறு இதை நீங்கள் செய்ய வேண்டும். உங்களை கண்டிக்கும் அவர்களை கடிந்து நோக்காமல் உங்களை நீங்கள் உள் நோக்கிப் பாருங்கள்.  ஒரு வேளை அங்கே, கல் போல இறுகிய, இரக்கமற்ற தவறான எண்ணங்களைக் கண்டு அறிந்தால், நீங்களே உங்களை கண்டனம் செய்துக் கொள்வீர்கள்.

பொதுவாக இரக்கம் என்று கூறப்படுவது எல்லாம் தனிப்பட்ட பாசமே.  நம் மீது அன்பு செலுத்துபவர்கள் மீது நாமும் அன்பு செலுத்த விளைவது மனித இயல்பு.  நம் மீது அன்பு செலுத்தாதவர்கள் மீதும் நாம் அன்பு செலுத்துவதே தெய்வீகமான இரக்கமாகும்.

துன்பங்களும் வேதனைகளும் இருக்கின்ற காரணத்தால் இரக்கம் தேவைப்படுகிறது.   துன்பத்தால் துவளாத உயிர்களே இல்லை.  துன்பப்பட்டுள்ள காரணத்தால் இரக்கம் சுரக்கின்றது.  ஒரு வருடத்திலோ, ஒரு வாழ்விலோ, ஒரு யுகத்திலோ ஏற்படும் துன்பங்களால் கூட மனித இதயமானது பரிசுத்தமாகி கனிந்து உருகிவிடுவதில்லை.  பல பிறவிகளில் , பல யுகங்களில்  எண்ணில் அடங்காத அளவு வாட்டி வதைத்த     வலிகளும்   வேதனைகளும்,  துன்பங்களும் அளித்த அனுபவித்தால்   மனிதனது உள்ளமும் மனமும் பண்படுகின்றது. அதன் விளைவாக மெய்யறிவையும் மாறாத அன்பையும் அறுவடை செய்கிறான்.  அதன் பின்பே அவனுக்கு புரிந்துக்கொள்ளும் தன்மை ஏற்படுகிறது . அந்த புரிந்துக்கொள்ளும் தன்மை ஏற்பட்ட பின் அவன் இரக்கப்படுகிறான்.

இயற்கை நியதிகளை அறியாமையின் காரணமாக  மீறுவதே துன்பத்திற்கு காரணமாகும்.  அத்தகைய தவறுகளை பலமுறை புரிந்து அதன் காரணமாக பல முறை அதன் துன்ப விளைவுகளை அனுபவித்து இயற்கை விதியின் செயல்பாட்டை பற்றிய அறிவு ஏற்படுகிறது.  ஒழுக்கத்தின் உயர்நிலைகளும் ஞானமும் எட்டப்படுகிறது.  அப்பொழுது தான் களங்கமற்ற குறைகளற்ற இரக்கம் என்னும் மலர் மலர்கின்றது.

இரக்கத்தின் ஒரு சாராம்சம் என்னவென்றால், துன்பத்தில் தவிப்பவர்களுக்கும்  வேதனையில் துடிப்பவர்களுக்கும் மனம் இரங்குவது ஆகும்.  அவ்வாறு மனம் இரங்கி அவர்களை அந்த நிலையிலிருந்து மீட்க விரும்பி முயற்சிப்பதும்  அல்லது அவ்வாறு முடியாத போது அவர்கள் அத்துன்பங்களை தாங்கிக் கொள்ள உதவுவதுமாகும்.  இந்த தெய்வீகக் குணம் உலகத்திற்கு மிகவும் தேவைப்படுகிறது.

இரக்கம்

எளியவர்களின் உலகத்தை மென்மையாக்குகிறது

வலியவர்களின் உலகத்தை மேன்மையாக்குகிறது.

ஆனால், எல்லா வகையான இறுகியத் குணத்தையும், அன்பில்லாமையையும், குற்றம் சாட்டுதலையும், பழி சுமத்துதலையும், கோபதாபங்களையும்  களைந்த பின்பே அத்தகைய இரக்க குணத்தை வளர்த்துக் கொள்ளமுடியும்.  யார் ஒருவன் , இன்னொருவன்  அவன் செய்த பாவத்திற்கு துன்புறுவதைக் கண்டு தன் மனதை இறுக்கி  ”அவனுக்கு அது சரியான தண்டனை”  என்று எண்ணுகிறானோ அவனால் பிறருக்காக இரங்க முடியாது.  காயங்களை ஆற்றும் அதன் குளிர்ச்சியான களிம்பையும் தடவ முடியாது.  எப்பொழுது எல்லாம் ஒரு மனிதன், இன்னொரு உயிரின் மேல் (அது ஒரு வாயில்லாத ஜீவனாகக் கூட இருக்கட்டும்) கொடூரமாக நடந்துக்கொள்கிறானோ, அல்லது பொழிய வேண்டிய இரக்கத்தை பொழிய மறுக்கிறானோ, அப்பொழுது எல்லாம்  அவன் தன்னை தாழ்த்திக் கொள்கிறான்.  தன்மேல் பேரருளின் சூழலை விலக்குகிறான்,  துன்பப்பட தன்னை தயார் படுத்திக்கொள்கிறான்.

இரக்கத்தின் இன்னொரு சாராம்சம் என்னவென்றால், நம்மை விட வெற்றிகரமாக வாழ்பவர்களின் வெற்றியில் மகிழ்வது, அவர்களது வெற்றியை நமது வெற்றியை போலவே நினைத்துக் கொண்டாடுவது.  எவன் ஒருவன் பொறாமை, பகைமை எண்ணங்கள் , தீய நோக்கங்கள் போன்றவை எதுவுமின்றி தன்னை எதிரியாக நினைப்பவர்களின் வெற்றிச் செய்தியைக் கேட்டு மகிழ்கிறானோ அவன் உண்மையில் பேரருள் பெற்றவன்.

நம்மை விட பலவீணமான, நம்மைவிட தற்காத்துக் கொள்ளும் வலிமை குறைவான நிலையில் உள்ள உயிர்களுக்கு பாதுகாப்பு நாடுவது இந்த தெய்வீகமான இரக்கம் வெளிப்படும் இன்னொரு விதமாகும்.  வாயில்லா ஜீவனின் கூக்குரல் அழைப்பது ஆழமான இரக்கத்தை தான்.  வலிமையான ஒன்றின் பெருமை என்பது ஒன்றை அழிக்கக்கூடிய அதன் பலத்தில் அல்ல, அதை பாதுகாக்க கூடிய அதன் பலத்தில் தான் உறைகின்றது.  பலவீணமானவைகளை அழிப்பதில் அல்ல, பாதுகாப்பதில் தான் உண்மையான வாழ்வு அடங்கி இருக்கிறது.

 

எல்லா உயிர்களும் ஒன்றை ஒன்று சார்ந்த உறவுகளே”.

படிநிலைகளில் மிக அடிமட்டத்தில் உள்ள உயிரினத்திற்கும் மிக உயா்நிலையில் உள்ள  உயிரினத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி என்பது அவற்றின் அறிவு மற்றும் வலிமைதான் (ஓரறிவு, ஈரறிவு, ஆறறிவு…) நாம் பாதுகாப்பையம் இரக்கத்தையும் இன்னொரு உயிருக்கு வழங்கும் போது, என்றும் உடன் இருக்கும் வாழ்வின் புனிதத்தை . வெளிப்படுத்துகிறோம் , பேரானந்தத்தை பன்மடங்காக்குகிறோம்.  நாம் எண்ணிப் பார்க்காமல், கொடூரமாக ஏதாவது தீங்கிழைத்தால் நம்முடைய வாழ்வு புனிதமாவதை தடுக்கும் ஒரு திரை விழுகின்றது.  வாழ்வில் மகிழ்ச்சியும் மெல்ல மடிகிறது.  ஒரு உயிரின் உடம்பிற்கு உணவு  இன்னொரு உயிரின் உடம்பே. ஒரு உணர்ச்சிக்கு வடிகால் இன்னொரு உணர்ச்சியே.  அதுபோல மனிதனின் புனித தன்மையை நிலைநாட்டுவதும், வளர துணை புரிவதும் அதன் இயல்பை ஒத்த கனிவான, அன்பான இரக்கம் மிகுந்த தூய தன்னலமற்ற செயல்களே.

பிறர் மீது இரக்கத்தை வழங்குவதால் ,நாம் நம்முள் உள்ள இரக்கத்தை வளர்த்துக் கொள்கிறோம். வழங்கப்பட்ட இரக்கம் என்றும் வீணாவது இல்லை.மிகக் கொடிய உயிரினமும் கூட சொர்க்கத்தை போன்ற அதன் தழுவலுக்கு இனிய மறுமொழியையே பதிலாக வழங்கும்.இரக்கம் என்பது  எல்லா உயிர்களும் புரிந்துக் கொள்ளும் புவி அனைத்துக்குமான  ஒரு பொது மொழி.

இது சில காலம் முன்பு (1904 க்கு முன்பு , இங்கிலாந்தில்) பல்வேறு கொடிய குற்றங்கள் புரிந்து, அந்த குற்றங்களுக்கு தண்டனையாக பல ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் வாழ்வில் நடந்த உண்மைக் கதை. குற்றவாளியான அவன் மிகக் கொடூரமானவனாக கருதப்பட்டு அவன் மேல் நம்பிக்கைக் கொள்ள எவருமின்றி ஒதுக்கப்பட்டு இருந்தான். சிறைக் காவலர்களும் அவனை கட்டளை இட வேண்டிய அவர்களது பணிக்காக அவனைப் பார்த்து அஞ்சினார்கள். அப்படிப்பட்டவன் ஒரு நாள் ஒரு சுண்டெலியை பிடித்துவிட்டான். தன்னை போலவே வேட்டையாடப்பட்ட அதன் நிலையை, பலவீணமான, பயந்திருந்த, உதவிக்கு யாருமற்ற அதன் நிலை அதன் மீது அவனுக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியது.  செய்த பல குற்றங்களால் இதயம் இறுகிப் போய், மனிதர்களால் இரக்கத்தின் சுவடைக் கூட அறிய முடியாத அவனது இதயத்திற்குள் இரக்கம் சுரக்க ஆரம்பித்தது.

அவன் அந்த சுண்டெலியை தன் சிறை கதவின் அறையில் ஓர் பழைய கால் அணி ஒன்றின் உள்  பாதுகாப்பாக வைத்துக் கொண்டான்.  அதற்கு உணவு ஊட்டி, கொஞ்சி, தடவி அவன் அன்பை வழங்கினான்.  பலவீணமான ஒன்றிற்கு அவன் வழங்கிய அன்பு வலிமை மிகுந்தவைகளின் மேல் அவன் கொண்டிருந்த வெறுப்பை மறக்கச் செய்து விட்டது.  அவனது கைகளும் உள்ளமும் சக மனிதர்களுக்கு எதிராக இப்பொழுது நீளவில்லை.அவன் கட்டுக்கு அடங்காமல் இருந்த நிலை மாறி மிக ஒழுக்கமாக நடந்து கொள்வது சிறைக் காவல் அதிகாரிகளுக்கு ஆச்சிரியம் கலந்த புதிராக இருந்தது.  கொடிய குற்றவாளியான அவன் சொல்வதை கேட்கும் அன்பான குழந்தையைப் போல் நடந்துக் கொள்வது ஒரு அதிசயத்திற்கு நிகராக தோன்றியது.  அவனது முகபாவ வெளிப்பாடுகளும் மாறிவிட்டன.  முன்பு கடுகடுப்பாக தோன்றிய அவனது முகத்தில் இப்பொழுது ஒரு புன்னகை தவழ ஆரம்பித்தது.  கோப அம்புகள் பாயும் அவனது கண்களில் ஒரு மென்மையான, ஆழமான ,கனிவான ஒளி பொங்கியது. குற்றவாளியாக இருந்த அவன், காப்பாற்றப்பட்டு விட்டான்.அவன் மனம் திருந்த, மனித தன்மை அவனுள் திரும்ப புகுந்தது. பாதுகாப்பற்ற ஓர் உயிருக்கு அவன் வழங்கிய அடைக்கலமும் இரக்கமும் புனித பாதையில் அவன் உறுதியாக அடி எடுத்து வைத்து முன்னேற செய்துவிட்டது.  அவன் விடுதலை ஆகும்போது தன்னுடன் அந்த சுண்டெலியை அழைத்து சென்றுவிட்டான்.  இவை எல்லாம் அந்த சிறை காவல் அதிகாரிகளுக்கு பின்பு தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்படும் இரக்கத்தால் நம்முள் இன்னும் அதிகமாக இரக்கம் சுரக்கும். அது வாழ்வை வளமாக, பயனுள்ளதாக மாற்றும்.  இரக்கத்தை வழங்கினால் நாம் அருளை பெற்றதை போல்.  இரக்கத்தை வழங்க மறுத்தால் நாம் அருளை இழந்தது போல.  எந்த அளவிற்கு ஒருவன் இரக்கத்தை வளர்த்துக் கொள்கிறானோ, அந்த அளவிற்கு அவன் பேரருள் நிறைந்த சரியான வாழ்வை வாழ நெருங்குகிறான்.  எவனது இதயம் மிகக் கனிந்து உருகி அதன் இனிய நிலையை எந்த இறுக்கமான, கசப்பான, கொடிய எண்ணங்களும் உள்புகுந்த மாற்ற முடியவில்லையோ அவன் உண்மையில் வளமான பேரருள் பெற்றவன் ஆவான்.

Share This Book

Feedback/Errata

Comments are closed.