11 அமைதியுடன் இருப்பது

 

 

சலனமற்று இரு!

வாழ்வின் மணிமகுடம் அமைதியே.

ஒவ்வொரு நீண்ட நாளிலும் உங்களுக்கென்று என்று சிறிது நேரத்தை  வழங்கிக்  கொள்ளுங்கள்.

மிக அதிக நேரம் தேவையற்ற வீண் பேச்சுகளில் ஈடுபடுகிறோம்.

மிகக் குறைந்த அளவு தான் நாம் கூற வேண்டியதைக் கூறுகிறோம்.

உங்கள் அறிவையும் ஞானத்தையும் நல்ல முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்றால் ,

உங்கள் வார்த்தைக்கு மதிப்புடன் செயல் பிறக்க வேண்டும் என்றால்,

வெற்றுக்கதைகளையும், வீண்பேச்சுகளையும்விட்டுத்தள்ளி

அமைதியின் பொன்னான வார்த்தைகளில் ஈடுபடுங்கள்.

 

—ஏ.எல்.சாலமோன்.

 

என் உள்ளமே, கலங்காமல் சலனமற்று இரு.

ஓய்வில்லாமல்பரபரப்பானநடவடிக்கைகளில்ஈடுபடுவதிலிருந்து

சற்று நேரம் விலகி நில்.

சிறிதுநேரம்தனிமையைத்தேர்ந்துஎடுத்து

வாழ்வதற்கு அச்சம் கொள்ளாதே.

 

—எர்னால்ட்கிராஸ்பை

 

மெய்யறிவு பெற்ற மனிதனின் வார்த்தைகளில் ஆற்றல் புதைந்துள்ளது. ஆனால் அவனது அமைதியிலும் மௌனத்திலும் அதைவிட  அதிக ஆற்றல் புதைந்துள்ளது.உயர் மனிதர்கள் சில சமயங்கள் அமைதியை வேண்டும் என்றே கடைபிடிப்பிடித்து மிக நுட்பமாக நம்மைக் கற்பிக்கிறார்கள். அறிவும், ஞானமும் கொண்ட பெரும் ஞானிகளின் அமைதியான பண்பு நலன்களை நேரில் கவனிக்க முடிந்தவர்களாக அவரது சீடர்கள் ஓர் இருவர் இருக்கலாம். ஆனால் அவை காலம் கடந்தும் தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.கெட்டிகாரத்தனமாக வார்த்தைகளைப் புகுத்தும் புத்திசாலி பேச்சாளனின் வார்த்தைகள் பல ஆயிரம் பேர்களால் கேட்கப்பட்டு எங்கும் பரவி எல்லோரும் அறிந்த வார்த்தைகளாக ஒரு காலத்திற்குப் புகழ் பெற்று விளங்கினாலும் சில தலைமுறைகளில் அவை மறக்கப்பட்டு விடுகின்றன. ”உண்மை என்றால் என்ன? அதை விளக்கு” என்ற பிலோத் கேட்ட கேள்விக்கு இயேசுவின் பதில் அமைதியே.அந்த ஆழமான அமைதியில் ஞானம் பொதிந்து இருந்தது. பணிவும் உறுதியும் உள் அடங்கி இருந்தது. ”தேவதைகள் உள்ளேவர அச்சப்படும் இடங்களுக்கும் முட்டாள்கள் விரைந்து செல்வார்கள்” என்னும் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அவர் ஆழமற்ற வார்த்தைகளை வெளிப்படுத்தவில்லை. வார்த்தைகளால் விளக்கம் அளித்து ஒரு வரையறைக்குள் அடைக்க முடியாத ஒன்றிற்கு விளக்கம் அளிக்க அவர் முன் வரவில்லை சாஸ்திரங்கள், வேதாந்தங்களை அவர் முன்வைக்கவில்லை. பிரம்மத்தை (கடவுளை) பற்றிய கேள்விகளை வாக்குவாதம் புரிய பிராமணர்கள் தொடுத்த போது புத்தர் அமைதியாக இருந்தார். அவர் அமைதியாக இருந்து அவர்கள் அறிந்து இருந்ததை விட மேலானதை அவர்களுக்குப் போதித்தார்.மேலோட்டமான பதில்களை எதிர்பார்க்கும் முட்டாள்களை அவரது அமைதி திருப்திப்படுத்தவில்லை. ஆனால் உண்மை ஞானம் தேடுபவர்களுக்கு ஆழமாக உணர்த்தியது. கடவுளைப் பற்றிய எதிர் கருத்தை சகித்துக் கொள்ளும் மனமில்லாமல் கடவுளைப் பற்றி முடிவில்லாமல் ஏன் இவ்வளவு பேச்சு? அதற்குப் பதில் சிறிதளவு அன்பையும்,நல்லெண்ணங்களையும் வாழ்வில் நடைமுறைப்படுத்தி, அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொள்ளட்டும். ஏன் கடவுளைப் பற்றி ஊகத்தின் அடிப்படையில் இவ்வளவு வாக்குவாதங்கள். நம்மைப் பற்றி நாம் சிறிதளவு உணர்ந்துக் கொள்வோம். ஆராய்வதற்கு இடமில்லாத ஒரு கருத்தை வைத்துக் கொண்டு தரக்குறைவாக, அவமரியாதையாகப் பேசுவதை விடப் பெரிய முட்டாள்தனமும் இல்லை. பக்குவமற்ற நிலையும் இல்லை. மரியாதையையும் பணிவையும் விட ஞானத்தை அடையாளம் காட்டும் சிறந்த வேறு ஒன்று இல்லை. வார்த்தைகள் இல்லாமல் மெய்யறிவு கொண்டவன் போதிப்பான் என்று லாஒட்சு தன வாழ்வில் வாழ்ந்து காட்டினார். சக்தி சேகரிக்கப்பட்டிருந்தால் அதன் கூடவே ஆற்றல் இருக்கும் என்பதைப் போல எப்போதும் அவரிடம் இருந்து வெளிப்படும் ஆற்றலால் சீடர்கள் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.போதிப்பதற்காக வெளியே செல்லாமல், மக்களின் செவிகளைத் தேடாமல் அவர்களின் பார்வையிலிருந்து விலகி அமைதியாக வாழ்ந்த அவரை மக்கள் தேடி சென்று அவரிடமிருந்து ஞானம் பெற்றனர்.

மெய்யறிவு பெற்றவர்களின் அமைதியான செயல்கள், மெய்யறிவைத் தேடுகின்றவர்களின் பாதைகளில் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சும் விளக்குகளாக விளங்குகின்றன. மெய்யறிவையும் அறநெறிகளையும் செயல்படுத்தி வாழ நினைப்பவன் எதைப் பேச வேண்டும், எப்போது பேசவேண்டும் என்று மட்டும் தெரிந்து கொள்வது போதாது. எதைப் பேசக் கூடாது, எப்போது பேசக் கூடாது என்றும் தெரிந்து கொள்ளவேண்டும். நாவடக்கமே மெய்யறிவின் ஆரம்பமாகும். மனம் அடங்கிச் செயல்படுவது மெய்யறிவின் வழிகாட்டுதல் ஆகும். ஒருவன் தன் நாவை அடக்கும் போது அவன் மனதின் மீது அவனுக்கு ஒரு கட்டுப்பாடு ஏற்படுகின்றது. ஒருவனுக்கு மனதின் மீது முழுக் கட்டுப்பாடு இருக்கிறதென்றால் அவன் அமைதியை ஆளும் திறம் பெற்றவனாக இருக்க வேண்டும்.

முட்டாள் பிதற்றுகிறான். வம்பு பேசுகிறான், வாதம் புரிகிறான். வார்த்தைகளை வாரி இறைக்கிறான். மற்றவர்களின் வாயை அடைத்ததாகப் பெருமை கொள்கிறான். தன்னுடைய முட்டாள் தனத்தில் (அதை முட்டாள்தனம் என்று அறியாமல்) பெருமிதம் கொள்கிறான்.தன்னை எப்போதும் தற்காத்த வண்ணம் இருக்கிறான். தன்னுடைய ஆற்றல்களைப் பயன் இல்லாமல் வீணாக்குகிறான்.எதுவும் விளையாத நிலத்தைத் தோண்டி செடிகளை நட்டு வளர்க்க என்னும் தோட்டக்காரனைப் போலத் தொடர்ந்து செயல்படுகிறான்.

மெய்யறிவு பெற்றவன் பயனில்லாத வார்த்தைகளை, வம்புப் பேச்சுக்களை, வீண் வாக்குவாதங்களை, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வார்த்தைகளைத் தவிர்க்கிறான்.தோல்வியடைந்தவன் போல் தோற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சி கொள்கிறான்.உண்மையிலயே தோல்வியடைந்தால் இன்னும் பெரு மகிழ்ச்சி கொள்கிறான்.தன்னுடைய தவறை, குறையை அறிந்துக் கொண்டதற்காக ,அதை இப்பொழுது நீக்க முடியும் என்று பெரு மகிழ்ச்சி கொண்டு மெய்யறிவில் மேலும் ஒரு படி முன்னேறுகிறான்.இறுதியான வார்த்தை தனனுடையதாகவே இருக்கவேண்டும் என்று விருப்பம் கொள்ளாதவன் பேரருள் பெற்றவனாவான்.

நான் என் கடந்த கால நாட்களைத் திரும்பி பார்க்கிறேன்.

வார்த்தை ஜாலத்தில் கெட்டிக்காரர்களுடன் நான் போட்டியிட்டுக் களைப்படைந்தேன்.

இப்பொழுது எள்ளி நகையாடுதல்களுக்கும், வாக்குவாதங்களுக்கும் எந்தப் பதிலும் அளிக்காமல் காத்திருப்பதைத் தவிர நான் வேறு எதுவும் செய்வதில்லை.

கோபம் ஏற்படவேண்டும் என்று தூண்டிவிடப்படும் பொழுது அமைதியாக இருப்பது என்பது ஒரு பண்பு நிறைந்த இரக்கமான இதயத்தின் அடையாளமாகும். கவனமற்றவர்கள், .இரக்கமற்றவர்கள் ஒவ்வொரு சிறு தூண்டுதலிலும் தங்கள் நிலையில் தடுமாறுவார்கள். தான் என்ற எண்ணத்திற்கு ஏதாவது ஆபத்து நேரும் என்னும் தோற்றம் ஏற்பட்டாலும் மனம் கலங்கி நிலை குலைந்துப் போய்விடுவார்கள். இயேசுவின் ஒருமை நிலை என்பது ஒரு அற்புதம் அல்ல. அது அவரது நெஞ்சில் குடிகொண்டிருந்த பண்புகளின் மலர்ந்த நிலை. ஞானத்தின் வெளிப்பாடு. ”இயேசு ஒரு வார்த்தையையும் பதில் அளிக்கவில்லை”, ”புத்தர் அமைதியாக இருந்தார்” என்று படிக்கும் போது அமைதியின் பேராற்றலை, வலிமையை, ஆரவாரமில்லாத கம்பீரத்தை, பெரு மழையின் ஒரு துளி மழையைப் பார்த்தது போல் உணர்கிறோம்.

அமைதியான மனிதனே ஆற்றல் வாய்ந்த மனிதன். அதிகமாகப் பேசும் மனிதன் பிறரை ஈர்க்கமாட்டான். எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டான்.எந்த ஒரு ஆற்றலையோ சக்தியையோ வீணடிக்காமல் சேகரித்து வைத்துக்கொண்ட பின்பே வேண்டிய திசையில் செலுத்திப் பயன்படுத்த முடியும் என்பதை இயந்திரங்களை இயக்கும் (மெக்கானிக்குகள்) ஒவ்வொருவரும் அறிவார்கள். மெய்யறிவு படைத்தவன் மனதின் ஆற்றலை சேகரித்து வீணாகாமல் தடுத்து தேவை ஏற்படும் போது துளியும் தாமதமின்றித் துல்லியமாக வேண்டும் திசையில் செலுத்துகிறான் என்ற வகையில் அவன் மனம் என்னும் ஆன்மீக இயந்திரத்தை இயக்குபவனே.

அமைதி தான் உண்மையான வலிமை. ”குரைக்கின்ற நாய் கடிக்காது” என்ற பேச்சு வழக்கு சரியானது தான். புல்டாக் எனப்படும் நாயைப் பார்த்து எல்லோரும் அச்சப்படுவதற்குக் காரணம் – அது பார்வையை மிகக் கடுமையாக வைத்துக் கொள்ளும்.மிக அரிதாக எப்போதோ தான் குரைக்கும். நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்துச் செயல்படுவதற்கு அதற்கு அந்த அமைதி தேவைப்படுகிறது. ஆம். இது ஒரு தாழ்ந்த வகை அமைதியின் ஆற்றல் தான்.ஆனால் அடிப்படை தத்துவம் இதுதான். தற்பெருமை பேசுபவன் தோல்வி அடைவான். அவன் மனம் செய்ய வேண்டிய செயலை விட்டு விலகிச் சென்றுவிட்டது. அவன் தன் ஆற்றலை எல்லாம் தன்னைப் பற்றிப் புகழ்ச்சியாகப் பேசுவதிலேயே செலவு செய்கிறான். அவனது சக்தி செய்ய வேண்டிய பணிக்கும் அதைச் செய்தால் கிடைக்கப் போகிற பலனையும் எண்ணி இரண்டாகப் பிரிகிறது. அதில் பெரும் பகுதி அந்தப் பலனை எதிர்பார்க்கும் ஆசைக்கே செல்கின்றது. தன் படைகளைப் பிரித்துத் தேவையற்ற இடங்களில் நிற்க வைத்துவிட்டு போருக்குச் சென்று ஒரு முகமாகத் தாக்குதலை தொடுக்க முடியாமல் தோல்வி அடையும் திறமையற்ற படைத் தளபதியைப் போல் செயல்படுகிறான் அல்லது இயந்திரத்தின் தடுப்பிதழை கவனமின்றித் திறந்து விட்டு நீராவியை வெளியே செல்ல அனுமதிக்கும் கவனக் குறைவான பொறியாளரைப் போலச் செயல்படுகிறான். தன்னடக்கமான, அமைதியான, உள்ஆர்வம் மிக்கவன் வெற்றி பெறுகிறான். தற்புகழ்ச்சியைத் தவிர்த்து, வீண் ஆராவாரங்களை விட்டு விலகி அவனது சக்தி அனைத்தையும் ஏற்றுக்கொண்ட பணியை நிறைவேற்ற ஒருமுகப்படுத்துகிறான். தற்புகழ்ச்சி கொள்பவன் தன் ஆற்றல்களைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இவன் செய்து முடிக்க வேண்டிய வேலையில் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். மற்றவன் எந்த அளவு பேசிக்கொண்டு இருக்கிறானோ இவன் அந்த அளவு அவனை விட அந்த வேலையை முடிக்க முன்னேறிக் கொண்டிருக்கிறான். பல முனைகளில் சிதறடிக்கப்படும் ஆற்றலை விட ஒருமுகப்படுத்தப்படும் ஆற்றலே பலன் தரும் என்பது எங்கும், எப்போதும் செயல்படும் இயற்கை விதியாகும். இரைச்சல் இட்டுத் தற்பெருமை கொள்ளும் ”சார்லஸ்” -ஐ எப்போதும் தன்னடக்கமான, அமைதியான ”ஒர்லாண்டோ” வீழ்த்திவிடுவான்.

அமைதி தான் வலிமை என்பது புவி எங்கும் செயல்படும் இயற்கை விதியாகும். வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் வியாபாரி தன்  திட்டங்களை, செயல்முறைகளை, நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கமாட்டான். வெற்றி பெற்றுள்ள காரணத்தால் பெருமிதம் கொண்டு பேசத் தொடங்கினால் தோல்வியைத் தழுவ ஆரம்பித்து விடுவான். நல் ஒழுக்க முறையில் வாழ்ந்து பிறரை ஈர்க்கும் தன்மையுடையவன் தன்னைப் பற்றி ஒரு போதும் பேச மாட்டான். தன்னுடைய ஆன்மீக முயற்சிகளில் கிடைத்துள்ள வெற்றியைப் பற்றியும் பேசமாட்டான். அவ்வாறு பேசினால், பேசிய அந்தக் கனமே காந்தம் போன்று அவனோடு இருந்த ஆற்றல் எல்லாம் அவனை விட்டு நீங்கிச் சென்று விடும். சாம்சன்னைப் போன்று (ஆங்கில வழக்கில் வழங்கப்படும் ஒரு கதையின் பாத்திரம்.) அவன் தன் ஆற்றல்கள் எல்லாம் நீங்கித் தவிப்பான். உலக வாழ்வின் வெற்றியோ! ஆன்மீக வாழ்வின் வெற்றியோ! வெற்றி என்பது குறிக்கோளை மனம் தளராமல் வலிமையாக , அமைதியாக அடைய முயற்சிப்பவர்களுக்கு மனம் உவந்து உதவும் ஒரு பணிவான வேலைக்காரன். அதிக ஆற்றல் வாய்ந்த சக்திகள் ,இரைச்சலின்றி வேலை செய்யும். பலவற்றைக் கடந்து கவரும் மனம் அமைதியாகவே வேலை செய்யும்.

நீங்கள் வலிமையானவர்களாக, பயனுள்ளவர்களாக, தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அமைதியின் ஆற்றலை , மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களைப் பற்றிப் பேசாதீர்கள். வீண் பேச்சு பேசுபவன் செயலில் பலவீனமானவன் என்று உலகம் இயற்கையாகவே உணர்ந்து கொண்டு அவனை அவன் தற்புகழ்ச்சி பாதைக்குள் செல்ல அனுமதித்து ஒதுங்கிவிடும். என்ன செய்யப் போகிறீர்கள் என்பதையும் பேசாதீர்கள். ஆனால் செய்யுங்கள். செய்து முடிக்கப்பட்ட பணி தன் அங்கீகாரத்தைத் தானே தேடிக் கொள்ளும். மற்றவர்கள் செய்யும் வேலைகளில் குறை கூறி தவறை கண்டுபிடித்து உங்கள் ஆற்றலை வீணாக்காதீர்கள். ஆனால் உங்கள் கடமையை நன்றாக முழுமையாகச் செய்யுங்கள். உண்மையோடும் இனிமையோடும் செய்யப்படும் மிகச் சாதரண வேலை ,மற்றவர்களைப் பார்த்து குரைப்பதை விட மேலானதாகும். மற்றவர்களின் வேலையைக் குறைக் கூறும்போது உங்கள் வேலைகளில் நீங்கள் கவனத்தை இழக்கிறீர்கள். மற்றவர்கள் தவறாகச் செய்கிறார்கள் என்றால் நீங்கள் சரியாகச் செய்து எடுத்துக்காட்டாக விளங்கி அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். மற்றவர்களை மட்டம் தட்டாதீர்கள். உங்களை யாராவது மட்டம் தட்டினால் அதற்கு எந்த மதிப்பையும் அளித்து வருந்தாதீர்கள். உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால் அமைதியாக இருங்கள். இவ்வாறு இருந்து நீங்கள் மனக்கட்டுப்பாடை வளர்த்துக் கொள்ளுங்கள். வார்த்தைகளை, சொற்களை நீஙகள் பயன்படுத்தவில்லை என்றாலும் பிறர் உங்களிடம் கற்றுக் கொள்வார்கள்.

ஆனால் உண்மையான அமைதி என்பது நா வானது மட்டும் பேசாமல் அமைதியாக இருப்பதல்ல, மனம் அமைதியாக இருப்பதே. மனமானது குழம்பி அலைபாய்ந்து கொண்டிருக்க நாவை மட்டும் கட்டுப்படுத்தி அமைதியாக வைத்திருப்பது எந்தப் பலவீணத்தையும் போக்காது. எந்த ஆற்றலையும் வழங்காது. அமைதியானது சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றால் அது முழு மனதையும் தழுவிய அமைதியாக இருக்க வேண்டும். மனதின் ஒவ்வொரு பாகத்தையும் ஊடுருவி இருக்க வேண்டும். ஒரு நிம்மதியான அமைதியாக இருக்க வேண்டும். இந்தப் பரந்த,  ஆழமான ,  நிலையான அமைதியை;-எந்த அளவிற்கு ஒருவனுக்கு அவன் மேல் கட்டுப்பாடு இருக்கிறதோ அந்த அளவிற்குத் தான் அவன் பெற முடியும். தீவிர கோப உணர்வுகளும், இச்சைகளும், துன்பங்களும் மனதில் சுழலும் போது புனிதமான, ஆழமான அமைதியின் ஓசைகளைக் கேட்க முடியாது. மற்றவர்களின் வார்த்தைகளும் செயல்களும் உங்களைச் சூடேற்றி விடும் என்றால் மனமாசு நீங்காமல் ,மனக் கட்டுப்பாடு இல்லாமல் நீங்கள் இன்னும் பலவீணமாகத் தான் இருக்கிறீர்கள். ஆனவ செருக்கும் வெற்று ஆரவார அகம்பாவமும் உங்கள் உள்ளத்தை ஆட்டுவிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுயநலத்தின் காரணமாக எந்த வெறுப்போ வன்ம விரோத உணர்வோ உங்களை அண்டாமல் இருக்கட்டும். எந்தப் பழி கூறும் அபாண்ட வார்த்தையோ, பொய்யுரைகளோ, அவதூறோ உங்கள் சாந்த நிலையை குலைக்க அனுமதிக்காதீர்கள். புயல் காற்று வெளியே வேகமாக வீசிக் கொண்டிருக்கும் போது உறுதியாகக் கட்டப்பட்டு இருக்கும் வீட்டின் உள்ளே இருப்பவர்கள் எந்தக் கலக்கத்திற்கும் ஆளாகாமல் அச்சமின்றி உள் அறையில் தீ மூட்டிக் குளிர் காய்கிறார்களோ அதுபோல உள்ளத்தில் மெய்யறிவு கொண்டு இருப்பவனை அவன் உள்ளத்திற்கு வெளியே இருக்கும் எந்தத் தீமையாலும் அவனைத் தீண்டவோ கலக்கமடையவோ செய்ய முடியாது. தன்னை ஆளும் திறன் கொண்டு அமைதியாக இருப்பவன் இதயத்தில் அமைதி நிலவுகிறது. இந்தப் பேரமைதியை ஒருவன் தன்னை முழுமையாக ஆளும் போது பெறுகிறான்.

பகை, பொறாமை, பொய் குற்றச்சாட்டு, வெறுப்பு, வன்மம் என மனதின் எல்லாவகையான ஓய்வற்ற நிலையை விறுவிறுப்பான போராட்டம் என்று மக்கள் தவறாகப் பெயரிட்டு அழைக்கும் ஒன்று, மெய்யறிவு கொண்ட ஒருவன் அருகில் நெருங்க முடியாது. அவனை மீண்டும் துன்புறத்த முடியாது.

அதிகமாகப் பேசியும் சத்தமும் போட்டுக் கொண்டிருந்தால் தான் ஒன்றை சாதிக்க முடியும் என்னும் ஒரு தவறான கருத்து பொதுவாக மக்களிடம் நிலவுகிறது. ஆழமற்ற, அனுபவத்தில் இல்லாத வாய் வார்த்தைகளை ஓயாது பேசிக்கொண்டு இருப்பவன் ஆழ்ந்து சிந்திப்பவனை, அமைதியாகச் செயலாற்றுபவனைப் பயனற்றவன் என்று கருதுகிறான். அவனைப் பொறுத்தவரை அமைதியாக இருப்பது என்றால் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது. பரபரப்பாக ஓயாமல் பேசிக் கொண்டு இருந்தால் சுறுசுறுப்பாக இயங்குவது. பிரபலமாக விளங்குவதை, பலர் கவனத்தைக் கவருவதை ஆற்றல் என்று தவறாக விளங்கிக் கொள்கிறான். ஆனால் சிந்திப்பவனும் செயல்படுபவனும் தான் பயன் தரும் வகையில் உண்மையில் பணியாற்றுகிறான். அவனது செயல்பாடு பணியின் ஆணி வேரை, மையத்தை, உயிர்த்துடிப்பை இயக்குகின்றது. மண்ணிலும் காற்றிலும் கலந்திருக்கும் கடினமான பொருட்களை இயற்கை அன்னை மறைவிலிருந்து அமைதியாக அற்புத இரசவாதத்துடன் ( மட்ட உலோகங்களைப் பொன்னாக மாற்றும் செயல்) மென்மையான இலைகளாக, அழகிய மலர்களாக, சுவையான கனிகளாக அளவிட முடியாத பலவகை அழகு வடிவங்களாக மாற்றுகிறாள்.அது போல, பயனுள்ள வகைகளில் அமைதியாகச் செயல்படுபவன் தன் செயல்களின் எடுத்துக் காட்டின் மூலமாக மக்கள் வாழ்கின்ற வழி முறைகளைத் திருத்துகிறான். குறித்த திசையில் அமைதியாகச் செலுத்தப்படும் துன்னுடைய ஆற்றலின் வலிமையாலும் விளக்க முடியாத மாய சக்தியாலும் உலகத்தின முகத்தையே அழகாக மாற்றி அமைக்கிறான். தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் செயற்கையான மேற்பரப்பில் பூசி மெளுகும் வேலைகளைச் செய்து தன் நேரத்தையும் ஆற்றலையும் அவன் வீணாக்குவது இல்லை. ஆனால் அவன் உயிரின் மையப் பகுதியை நாடிச் செல்கிறான். அங்கிருந்தே தன் வேலையைத் தொடங்குகிறான். காலம் கனியும் பொழுது, ஒரு வேளை அப்பொழுது அவன் நிலையில்லாத உடலை இழந்து உலகை விட்டு மறைந்து கூட இருக்கலாம். ஆனால் அவன் அமைதியாகச் செய்த அழிக்க முடியாத பணிகள் கனிகளை ஈன்று உலகை உய்விக்கின்றது. ஆனால் வெறும் பேச்சில் மட்டும் கெட்டிக்காரனது வார்த்தைகள் மறைந்துவிடுகின்றன. ஓசையை விதைத்து உலகில் எதையும் அறுவடை செய்ய முடியாது.

எவன் தன் மனதின் ஆற்றல்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றானோ அவன் தன் உடலின் ஆற்றல்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றான். வலிமையோடு சாந்தமாகவும் அமைதியாகவும் வாழும் மனிதன் எப்போதும் அவசரமாக,பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனை விடச் சிறந்த உடல் நலத்தைப் பெற்று இருப்பான். அமைதியாக, கட்டுப்பட்டு இசைந்து செயல்படும் மனம், உடலும் நோயின்றி இசைந்து செயல்பட வழிவகைச் செய்யும். ஜார்ஜ் ஃபாக்ஸின் வழியைப் பின்பற்றுபவர்கள் தான் பிரிட்டிஷ் சமுகத்தில் இன்று* (இன்று* – 1900 காலகட்டம்) வெற்றிகரமாக, ஆரோக்கியமாக வாழ்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வீண் பரபரப்பையும் தேவையற்ற வார்த்தைகளையும் தவிர்த்து ,அமைதியாக ஆரவாரமின்றிக் குறிக்கோளுடன் கூடிய வாழ்வை வாழ்கிறார்கள். அவர்கள் அமைதியான மக்கள். அமைதியே ஆற்றல் என்னும் அடிப்படையில் தான் அவர்களது சந்திப்புகள் நடைபெறுகின்றன.

அமைதி ஆற்றல் வாய்ந்தது, காரணம் அது ஒருவன் தன்னை அடக்கி ஆள்வதன் வெளிப்பாடு. எந்த அளவிற்கு ஒருவன் தன்னை வெற்றிகரமாக அடக்கி ஆள்கிறானோ அந்த அளவிற்கு அவன் இன்னும் அமைதியானவனாக மாறுகிறான். தன் மனதின் கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு வாழ்வதை விடுத்து ஒரு குறிக்கோளுடன் செயல்படும் போது வெளி உலகின் பேரிரைச்சலில் இருந்து விலகி தன் உள்ளத்தின் நிம்மதியான இசையைக் கேட்கிறான். அவன் பேசினால் அதற்கு ஒரு காரணம் இருக்கும். அவன் பேசும் வார்த்தைக்குப் பின் ஒரு சக்தி இருக்கும். அவன் அமைதியோ மவுனமோ காத்தால் அதற்கும் அவன் வார்த்தைக்கு ஈடான சக்தியுடன் இருக்கும் அல்லது அதற்கும் அதிகமான சக்தியுடன் இருக்கும். அவன் உதிர்க்கும் வார்த்தைகளை வலியும், கண்ணீரும் பின் தொடர்வது இல்லை. வேதனையையும், மனவுறுத்தலையும் ஏற்படுத்தும் செயல்களை அவன் செய்வது இல்லை. ஆனால் அவன் சொல்லிலும், செயலிலும் கனிவும் கவனமும் இருக்கும். அவன் உள்ளம் அமைதியாக இருக்கும், அவனது நாட்களும் பேரருளோடு விளங்கும்.

Share This Book

Feedback/Errata

Comments are closed.